கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்

இளம் ‘ஹைடெக்’ திருடர்கள், திருடிகள் பற்றிய கதை!

விமர்சனம் 29-Feb-2020 1:06 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Desingh Periyasamy
Production: ‘Anto Joseph Film Company’ & ‘Viacom18 Motion Pictures’
Cast: Dulquer Salmaan, Ritu Varma, Rakshan, Niranjani Ahathian & Gautham Vasudev Menon
Soundtrack: Masala Coffee
Background Score: Harshavardhan Rameshwar
Cinematography: K. M. Bhaskaran
Editor: Praveen Anthony


அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மாண், ரக்‌ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்கும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

‘ஆப் டெவலப்பரா’க இருக்கும் துல்கர் சல்மானும், அனிமேஷன் நிபுணராக இருக்கும் தக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சின்ன சின்ன போர்ஜெரி வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு ரிதுவர்மாவும், தக்‌ஷனுக்கு நிரஞ்சனி அகத்தியனும் காதலிகளாகின்றனர். துல்கர் சல்மானும், தக்‌ஷனும் குறிப்பிட்ட ஒரு தொகையை சம்பாத்தித்து, தங்களது காதலிகளை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி விட நினைக்கும் நேரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யான கௌதம் வாசுதேவ் மேனன் இவர்களுக்கு குறுக்கே வர, அதன் பின் என்ன நடக்கிறது என்பதே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

படம் பற்றிய அலசல்

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமானாலும், கதையில் குறைவான கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டும், திரைக்கதையில் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தியும் விறுவிறுப்பாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அதனால் படத்தின் நீளம் மைனஸாக தெரியவில்லை. சென்னை பின்னணியில் துவங்கும் கதை, அதன் பிறகு துலகர் சல்மான், ரிது வர்மா, தக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் கோவாவில் செட்டிலாக நினைத்து கோவா பயணிக்க, இவர்களை போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவன் துரத்த துவங்குவதிலிருந்து சூடு பிடிக்கிறது. அதன் பிறகு துல்கர் சல்மானும் தக்‌ஷனும் சம்பாதித்த பணத்தை ரிது வர்மாவும், நிரஞ்சனி அகத்தியனும் அடித்து எஸ்கேப் ஆகுவதிலிருந்து வேறு ஒரு தளத்துக்கு மாறி மேலும் விறுப்பாகி சுவார்ஸயப்படுத்துகிறது.

போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனின் துரத்தல் ஒரு பக்கம், பணத்துடன் தலைமறைவான ரிது வர்மாவையும், நிரஞ்சனியையும் கண்டு பிடிக்க, துல்கர் சல்மானும், தக்‌ஷனும் இன்னொரு பக்கம் துரத்துவது என படம் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் சுவாரஸ்யமாக பயணித்து ரசிக்க வைக்கிறது. இடைவெளைக்கு பிற்கு வரும் சில காட்சிகளில் துல்கர் சல்மானும் தக்‌ஷனும் மேற்கொள்ளும் சில டெக்னிக்கல் விஷயங்கள் நம்பும் படியாக இல்லை என்றாலும், அந்த காட்சிகளை யோசித்த விதம், காட்சிப்படுத்திய விதம் ஆகியவை புதுமையாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. துரத்தல், பயணம் என்று பயணிக்கும் இந்த திரைக்கதைக்கு உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு பணி! மசாலா காஃபி, ஹர்ஷவர்தனின் இசை, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்களும் படத்துக்கு பலத்தை சேர்க்கும் விதமாக சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக வரும் துல்கர் சல்மான், கதாநாயகியாக வரும் ரிது வர்மா ஆகியோரின் கேரக்டர்கள் கொஞ்சம் நெகட்டீவ் ஷேடில் இருந்தாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை. மாடர்ன் இளைஞராகவும், டெக்கியாகவும் வரும் துல்கர் சல்மான் தனது இயல்பான நடிப்பால் தன் கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். அதைப்போலதான் ரிது வர்மாவும். ஜாலி, சோகம், பதட்டம் என்று அத்தனை உணர்வுகளையும் அநாயாசமாக வெளிப்படுத்தி நடித்துள்ள ரிது வர்மா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு பர்ஃபாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட்! துல்கர் சல்மானின் நண்பராக வரும் தக்‌ஷனுக்கு இது முதல் படம் என்று கூற முடியாத அளவுக்கு அவரும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். தக்‌ஷன் பேசும் சில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இவரது காதலியாக வரும் நிரஞ்சனி அகத்தியனும் எல்லோருக்கும் ஈடு கொடுக்கும் விதமாக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் நிரஞ்சனி அகத்தியனை இனி நடிகையாகவும் நிறைய படங்களில் பார்க்கலாம். போலீஸ் டி.ஜி.பி. யாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனின் அறிமுக காட்சியே மிரட்டல் ரகம்! தன் காரை துரத்தி வரும் ரௌடிகளை எச்சரிக்கும் முதல் காட்சியிலேயே கெத்து காட்டும், கௌதம் வாசுதேவ் மேனன் படம் முழுக்க அதே கெத்துடன் வந்து தனது மாறுப்பட்ட நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

பலம்

1.நடிகர்க்ளின் பங்களிப்பு

2. புதிய கதைக்களம்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.படத்தின் அதிகபடியான நீளம்

2. நம்ப முடியாத சில காட்சிகள்

மொத்தத்தில்…

சின்ன சின்ன ஏமாற்று வேலைகள் செய்து பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும் நான்கு பேர், அவர்கள் அனைவரும் சந்திக்கும் எதிர்பாரத பிரச்சனைகள் என்று பயணிக்கும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ரசிகர்களின் மனங்களை நிச்சயம் கொள்ளையடிக்கும்!

ஒரு வரி பஞ்ச் : இளம் ‘ஹைடெக்’ திருடர்கள், திருடிகள் பற்றிய கதை!

ரேட்டிங் : 5/10

#DQ #DulquerSalman #RituVarma #KannumKannumKollaiyadithaal #Rakshan #GVM #GauthamVasudevMenon #DesinghPeriyasamy #AntoJosephFilmCompany #KKKFromFeb28th #KKKMovieReview #KannumKannumKollaiyadithaalMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ட்ரைலர்


;