கல்தா – விமர்சனம்

வசதியாக வாழ அரசியல் பழகு!

விமர்சனம் 29-Feb-2020 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Hari Uthra
Cast: Siva Nishath, Antony, Airaa, Divya,
Music: K.Jai Krish,
Cinematography: B.Vasu
Editting : Muthu Munisamy
Production : Malar Movie Makers

‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கத்தில் அறிமுகம் சிவ நிஷாந்த், ஆண்டனி, ஐரா, திவ்யா , கஜராஜ், ராஜசிம்மன் உட்பட்டவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்தா’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

அண்டை மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளையும், இறைச்சி கழிவுகளையும் தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதற்கு அந்த கிராமத்து கவுன்சிலர் உடந்தையாக இருக்கிறார். இதனை அந்த கிராமத்தில் வசித்து வரும் சிவநிஷாந்தும் இவரது நண்பர் ஆண்டனி, அப்பா கஜராஜ் ஆகியோர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்டனியின் மனைவி உட்பட பலர் சுகாதார சீர்கேடால் இறந்து போகிறார்கள். போராட்டம் தீவிரமாக, ஆண்டனியை கவுன்சிலரின் ஆட்கள் போட்டு தள்ளுகிறார்கள். நண்பர் ஆண்டனியை இழந்த சிவநிஷாந்த் தனது அப்பாவையும் இழக்கிறார். இதனை தொடர்ந்து சிவ நிஷாந்த் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘கல்தா’வின் கதைக்களம்

படம் பற்றிய அலசல்

கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த இடங்கள் பாதிப்புக்குள்ளாவது, பணத்திற்காக அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை சொல்ல வந்துள்ளமைக்காக இப்படத்தின் கதை எழுதி இயக்கியுள்ள ஹரி உத்ராவுக்கு பராட்டு தெரிவிக்கலாம். ஆனால் அதை சுவாரஸ்யமான திரைக்கதையாகி வழங்குவதில் ஹரி உத்ரா போதுமான கவனம் செலுத்தவில்லை. படத்தின் ஆரம்பத்தில் கேரளாவிலிருந்து லாரி லாரியாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது, அதற்கு எதிர்ப்பு கிளம்புவது என்று விறுவிறுப்பும் பரபரப்புமாக துவங்கும் படம் ஏதோ சொல்ல வருகிறது என்று பார்த்தால், அதற்கு பிறகு அரசியல் பலமும் அதிகார பலமும் படைத்தவர்களை ஒன்று செய்ய முடியாது, இந்நாட்டில் வசதியாக வாழ வேண்டுமென்றால் அரசியல் பழகு’ என்ற கருத்துடன் படத்தை முடித்திருக்கிறார்கள். கையிலெடுத்த பிரச்சனைக்கு எந்த ஒரு நல்ல தீர்வையும் சொல்லாமல் நாட்டில் நடக்கிற விஷயங்களை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர். இது படம் பாரக்க வரும் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்க வைக்கும் என்பதை சொல்ல முடியவில்லை. குப்பை மேடுகளை, கதை நடக்கும் கிராமத்து பகுதிகளை அப்படியே நிஜமாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பி.வாசுவின் ஒளிப்பதிவு! அதைப் போல கதையின் நகர்வுக்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது ஜெய் கிரிஷின் இசை! திரைக்கதை பயணத்தை விறுவிறுப்பாக்குவதில் டத்தொகுப்பாளர் முத்து முனிசாமி போதுமான கவனத்தை செலுத்தவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அறிமுகம் சிவ நிஷாந்த் நல்ல உயரத்துடன், ஆஜானபாகுவான தோற்றத்துடன் அந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி ஓரளவுக்கு சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். நடனம், சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியுள்ள சிவ நிஷாந்த் எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இவரது நண்பராக வரும் ஆண்டனி ஏற்கெனவே ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர்! அப்படத்தில் வழங்கியதை போலவே இப்படத்திலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார் ஆண்டனி! சிவ நிஷாந்தின் காதலியாக வரும் ஐரா, ஆண்டனியின் மனைவியாக வரும் திவ்யா, கவுன்சிலராக வரும் கருணாநிதி, இவருக்கு உடைந்தையாக செயல்படும் போலீஸ் அதிகாரியாக வரும் ராஜசிம்மன், அப்புக்குட்டி உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.கதைக்களம்

2.ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

1.பலவீனமான திரைக்கதை

2.படத்தொகுப்பு

மொத்தத்தில்…

’குப்பை கழிவுகளால் வரும் ஆபத்துகள்’ பற்றி சொல்ல வந்த இயக்குனர், அதை ரசிக்க கூடிய ஒரு திரைக்கதையாக்கி அதற்கு என்ன தீர்வு என்பதையும் சொல்லி இருந்தால் ‘கல்தா’ மேலும் கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும்!

ஒருவரி பஞ்ச் : வசதியாக வாழ அரசியல் பழகு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;