கன்னிமாடம் – விமர்சனம்

ஜாதி வெறியால் பாதிக்கும்  ‘கன்னி’களின் கதை!

விமர்சனம் 22-Feb-2020 4:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : ‘Bose’ Venkat
Cast: Sreeram Karthik, Chaya Devi, Vishnu, ‘Aadukalam’ Murugadas,
Music: Hari Sai
Cinematography: Iniyan J Haris
Editting : Rishal Jeyini
Production : Roobi Films

இதுவரை படங்களில் பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்த ‘போஸ்’ வெங்கட் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் ‘கன்னி மாடம்’. இயக்குனராக அவரது ‘கன்னி’ முயற்சி பாராட்டு பெறும் விதமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

சென்னையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருபவர் கதையின் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக். வெளியூரிலிருந்து கலப்பு திருமணம் செய்து கொண்ட விஷ்ணுவும், சாயாதேவியும் ஸ்ரீராம் கார்த்திக் வசித்து வரும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடி வருகிறாரக்ள். விஷ்ணு, வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் அது பிடிக்காத விஷ்ணுவின் உறவினர்கள், சாயாதேவியை கொன்று விட்டு விஷ்ணுவை ஊருக்கு அழைத்து செல்ல சென்னை வருகிறார்கள். இந்நிலையில் விஷ்ணு ஒரு லாரி விபத்தில் பலியாகிறார். திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவரை இழக்கும் சாயாதேவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்ய முன் வருகிறார் ஸ்ரீராம் கார்த்திக்! தானும், சாயாதேவியும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி அவருக்கு வாடகை வீட்டைப் பிடித்து கொடுக்கிறார் ஸ்ரீராம்! இந்நிலையில் சாயாதேவி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. அதே நேரம் விஷ்ணு இறக்க சாயாதேவிதான் காரணம் என்று நினைக்கும் விஷ்ணுவின் உறவினர்கள் சாயாதேவியை கொல்ல மீண்டும் சென்னை வருகிறார்கள்! அதன் பின் என்ன நடக்கிறது என்பதே ‘கன்னி மாட’த்தின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் எல்லா காலத்திலும் கலப்பு திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்த படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ஆணவக் கொலை பின்னணியாக கொண்ட படமாக வெளியாகி உள்ளது இந்த ‘கன்னி மாடம்’. கதை தேர்விலும் கேரக்டர்களுக்கு தகுந்த முகங்களை தேர்வு செய்து, அவர்களை சிறப்பாக நடிக்க வைத்திருப்பதிலும் இயக்குனர் போஸ் வெங்கட் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது தெரிகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திரைக்கதை அமைப்பு சிறப்பாக அமையவில்லை. படத்தின் முதல்பாதி முழுவதும் மெதுவாகதான் நகர்கிறது. சாயாதேவியின் கணவர் விஷ்ணு விபத்தில் இறப்பதிலிருந்து படத்தி கதைஅ சூடி பிடிக்கிறது. சந்தர்ப சூழ்நிலையால் ஸ்ரீராம் கார்த்திக் சாயாதேவிக்கு கணவராவது, அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள், சாயா தேவிக்காக ஸ்ரீராம் கார்த்திக் செய்த தியாகங்கள் என்று உணர்வுபூர்வமான காட்சிகளுடன் பயணிக்கும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது. கடைசியில் ஜாதி தான் பெரிது என்று நினைக்கும் அப்பா கஜராஜிற்கு அவரது பாணியிலேயே ஸ்ரீராம் கார்த்திக் வழங்கும் தண்டனை, ஜாதி வெறி பிடித்து அலைபவர்களுக்கு சரியான எச்சரிக்கை! இதுபோன்ரு இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக அமைந்திருப்பதால் முதல் பாதியிலுள்ள குறைகளை அது சரி செய்து விடுகிறது.

டெக்னிக்கல் பக்கங்களை பொறுத்தவரையில், ஹரி சாயின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. பாடல்களும் ரசிக்கும்விதமாக அமைந்துள்ளது. ஆனால் ஏற்கெனவே கேட்ட சில பாடல்களின் ட்யூன்கள் நம் நினைவுக்கு வருவது மாதிரி அமைந்துள்ளது! இனியன் ஜெ. ஹாரிஸின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பு செய்திருக்கிறது. படத்தொகுப்பு செய்துள்ள ரிஷால் ஜெய்னி முதல்பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இரண்டாம் பாதியை போன்று முதல் பாதியும் விறிவிறுப்பாக பயணித்திருக்கும்.

இது போன்ற ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும் ‘போஸ்’ வெங்கட்டின் இந்த ‘கன்னி’ முயற்சி அவருக்கு பெயரை பெற்று தரும் விதமாக அமைந்துள்ளது என்று உறுதியாக சொல்லலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக, ஆட்டோ ஓட்டுனராக வரும் ஸ்ரீராம் கார்த்திக் ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கான எல்லா மேனரிங்களையும் அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருப்பதோடு, பாசத்தை, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இயல்பாக நடித்துள்ளார். அவரை போலவே விஷ்ணுவின் காதலியாக, மனைவியாக வரும் சாயாதேவியும் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி சிறப்பாக நடித்துள்ளார். தன்னை தொட்டு தாலி கட்டியவன் இறந்து போக, கணவரின் உறவினர்கள் அவரை இழிவாக பேச, சிறப்பாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று அவர் சபதம் செய்யும் காட்சியில் சிறந்த நடிப்பை வழங்கிய இவர் இயக்குனர் ‘யார்’ கண்ணனின் மகள் என்பது சிறப்பு தகவல்! சாயா தேவிக்கு நல்ல எதிர்காலம் உணடு!

கதையில் சாயாதேவியின் காதலராக, கணவராக வரும் விஷ்ணு கொஞ்ச நேரமே வந்தாலும் தனது கேரக்டரை சிறப்பாக செய்து கவனம் பெறுகிறார்! ஸ்ரீராம் கார்த்திக்கின் சக ஆட்டோ ஓட்டுனராகவும், ஸ்ரீராம் கார்த்திக்கை ஒருதலையாக காதலிப்பவராகவும் வந்து, தன் ஆட்டோவில் பயணிக்கும் ஒருவருக்கு மனைவியாகும் கேரக்டரில் நடித்திருக்கும் வலீனா பிரின்ஸ், ஸ்ரீராம் கார்த்திக்கின் இன்னொரு ஆட்டோ ஓட்டுனர் நண்பராக வரும் ஆடுகளம் முருகதாஸ், வீட்டு ஓனராக வரும் பிரியங்கா ரோபோ சங்கர், ஸ்ரீராம் கார்த்திக்கின் அப்பாவாக வரும் கஜராஜ், சினிமாவில் நடிகராக 40 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கும் ‘ஸ்கொயர்’ ஸ்டார் கேரக்டரில் நடித்திருக்கும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணியன், ஒரே ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியாக வந்து போகும் ‘மைம்’ கோபி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

பலம்

1.கேரக்டர்களுக்கு தகுந்த நடிகர்களிண் தேர்வும், அவர்களது பங்களிப்பும்

2. இரண்டாம் பாதி

3. பின்னணி இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி

2. படத்தொகுப்பு

மொத்தத்தில்…

நிஜத்தில் நடந்த சில ஆணவ கொலைகள் பற்றிய செய்திகளை நாம் படித்திருப்போம். அதுபோன்று நடக்கும் ஆணவக் கொலைகளால் மனித சமூகம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது, ஏன் இன்னும் ஜாதி வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக, அழுத்தமாக சொல்லியுள்ள இந்த படம் இந்த காலத்துக்கு தேவையான படைப்புதான்!

ஒருவரி பஞ்ச் : ஜாதி வெறியால் பாதிக்கும் ‘கன்னி’களின் கதை!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;