நான் சிரித்தால் - விமர்சனம்

சிரிப்பு நோய் வந்த ஒரு இளைஞனின் கதை!

விமர்சனம் 17-Feb-2020 11:40 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: Raana
Production: Avni Movies
Cast: Hiphop Tamizha Adhi, Iswarya Menon, K. S. Ravikumar, Badava Gopi, Sha Ra, Pandiarajan & Eruma Saani Vijay
Music: Hiphop Tamizha Adhi
Cinematography: Vanchinathan
Editor: Sreejith Sarang

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்ற அடையாளத்தோடு இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் ராணா. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா ஆகியோருடன் கூட்டணி அமைத்து ராணா உருவாக்கியுள்ள ‘நான் சிரித்தால்’ சிரிக்க வைக்கும் படமாக அமைந்துள்ளதா இல்லை அழ வைக்கும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஆதிக்கு ஒரு வித்தியாசமான நோய் வருகிறது! அதாவது, துயரம் வந்தாலோ அழுகை வந்தாலோ கண்ணீர்தானே வரவேண்டும்! ஆனால் ஆதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது! இந்த வித்தியாச வினோதமான நோயால் அவர் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கும் படமே ‘நான் சிரித்தால்’.

படம் பற்றிய அலசல்

‘துயரம், அழுகை வரும்போது சிரிப்பு வரும்’ என்ற வித்தியாசமான ‘கரு’வை வைத்து ஒரு முழு காமெடி படத்தை தர முயற்சித்துள்ளார் இயக்குனர் ராணா! ஆனால் படத்தில் ஆதி நம்மை சிரிக்க வைக்க முயற்சித்த காட்சிகளில் ஒரு சில காட்சிகள் மட்டுமே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. உதாரணத்துக்கு, ஆதி அஜித் படத்துக்கு போக, அங்கு அஜித் அழும் காட்சியில் சிரித்து வழிய, அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவது, அதைப் போல விஜய் படத்துக்கு போய் அங்கும் அதே மாதிரி விஜய் ரசிகர்களிடம் அடி வாங்குவது, சாவு வீட்டில் போய் சிரிப்பது, தன்னை துப்பாக்கியால் கொல்ல வரும் ரௌடி முன்பு சிரிப்பாய் சிரிப்பது… போன்று ஒரு சில காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.

நல்ல ஒரு கதை கருவை பிடித்த இயக்குனர் ராணா அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக தருவதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. முதல் பாதியில் வரும் ஆதி, ஐஸ்வர்யா மேனனுக்கு இடையிலான காதல், ஆதிக்கு ஏற்படும் சிரிப்பு வியாதி என்று சுவார்ஸயமாக கதை சொன்ன இயக்குனர் ராணா இரண்டாம் பாதியில் கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா, ஷாரா, முன்னீஸ் காந்த் என்று ஏகப்பட்ட வில்லன்களை நுழைத்து சிரிக்க வைக்க முயற்சித்துள்ள காட்சிகள் நேர்த்தியாக அமையவில்லை. அதனால் இரண்டாம் பாதி கொஞ்சம் தள்ளாடவே செய்கிறது. அதிலும் கே.எஸ்.ரவிக்குமாரை ஒரு ரௌடியாக ரசிக்கவே முடியவில்லை, மாறாக காமெடியனாகவே பார்க்க முடிகிறது. ஹீரோவாக நடித்து படத்திறகு இசையும் அமைத்திருக்கும் ஆதியின் இசையில் பாடல்களும், நடனங்களும் ரசிக்க முடிகிறது. வாஞ்சி நாதனின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான பங்களிப்பு செய்திருக்கிறது. ஆனால் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு சொல்லும்படியாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு!

ஆதி வழக்கம் போல இப்படத்திலும் துறுதுறு இளைஞராக தோன்றியுள்ளார். சிரிக்கக் கூடாத இடத்தில் ஆதிக்கு சிரிப்பு வருவது, அதை அடக்க ஆதி முயற்சிப்பது, தன்னை கொல்ல வரும் வில்லன்கள் முன்னால் சிரித்து எதிரிகளை குழப்பம் அடைய செய்வது போன்ற காட்சிகளிலும், ஐஸ்வர்யா மேனனுடனான காதல் காட்சிகளிலும் ஆதியின் நடிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யா மேனன் அழகாக இருக்கிறார்! நல்ல நடிப்புடன் அழகாக நடனமும் ஆடியுள்ளார். ரௌடிகளாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, முனீஸ் காந்த், ஷாரா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையுடன் ஒட்டவில்லை என்றாலும் அனைவரும் நடிப்பை பொறுத்தவரையில் குறை வைக்கவில்லை. இவர்களுடன் மந்திரியாக வரும் மாரி முத்து, மனநல மருத்துவராக வரும் பாண்டியராஜன், ஆதியின் அப்பவாக நடித்திருக்கும் படவா கோபி, ஐஸ்வர்யா மேனனின் அப்பாவாக வரும் அருள் டி.சங்கர் என்று படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.

பலம்

1.வித்தியாசமான கதை கரு

2.முதல் பாதி

2. ஒரு சில காமெடி காட்சிகள்

பலவீனம்

1.வலுவில்லாத திரைக்கதை அமைப்பு

2.இரண்டாம் பாதி

3.கதையுடன் ஒட்டாத சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

சிரிப்பு என்பது பல நோய்களை தீர்க்கக் கூடியது. அதே சிரிப்பு ஒரு நோயாக, ஒரு மனிதனுக்கு சோகம், துக்கம் ஏற்படும்போது வந்தால் என்னவாகும் என்பதை காமெடியாக சொல்ல வந்திருக்கும் இப்படம் லாஜிக் விஷயங்களை பற்றி யோசிக்காமல் சிரித்து மகிழக் கூடிய படமாக அமைந்துள்ளது.

ஒருவரி பஞ்ச் : சிரிப்பு நோய் வந்த ஒரு இளைஞனின் கதை!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;