ஓ மை கடவுளே – விம்ரசனம்

பிரிந்தவர்களை இணைத்து வைக்கும் கடவுள் கதை!

விமர்சனம் 15-Feb-2020 1:46 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Ashwath Marimuthu
Production: Happy High Pictures
Cast: Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan, Sha Ra & M. S. Bhaskar
Music: Leon James
Cinematography: Vidhu Ayyanna
Editor: Boopathy Selvaraj


அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வானி போஜன், விஜய்சேதுபதி முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படம் எப்படி?

கதைக்களம்

அசோக் செவன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். தெரியாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்வதைவிட, தன்னை முழுவதுமாக தெரிந்த அசோக் செல்வனை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ரித்திகா சிங், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?’ என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார். அசோக் செல்வன் அரைகுறை சம்மதத்துடன் ரித்திகா சிங்கை திருமணம் செய்கிறார். பல வருடங்களாக தோழியாக பார்த்த ரித்திகா சிங்கை மனைவியாக பார்க்க அசோக் செல்வனுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அசோக் செல்வனின் இன்னொரு பால்யகால தோழியான வானி போஜன் இவர்களது வாழ்க்கையில் குறுக்கே வருவதாலும் வேறு சில பிரச்சனைகளாலும் அசோக் செல்வனுக்கும் ரித்திகா சிங்குக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவகாரத்து பெற குடும்பநல நீந்திமன்றத்தில் ஆஜராகிறார்கள். இந்நிலையில் அசோக் செல்வன் முன் கடவுள்களாக வருகிறார்கள் விஜய்சேதுபதியும், ரமேஷ் திலகும்! அதன் பிறகு என்ன நடக்கிறது எனதே மீதிக் கதை!

படம் பற்றிய அலசல்

இன்றைய நாகரிக உலகில் இளம் தலைமுறையினரின் காதல், நட்பு, திருமணம், அதன் பிறகு ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மூலமாக வரும் பிரச்சனைகள் ஆகிய விஷயங்களை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் புதிய பாணியில் சொல்லி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து! முதல் பாதி காதலும் மோதலுமாக கடந்து போக, அதன் பிறகு கடவுள்களாக வரும் விஜய்சேதுபதி, ரமேஷ் திலக் ஆகியோரின் எண்ட்ரிக்கு பிறகு கதை வேறு ஒரு தளத்தில் பயணித்து ரசிக்க வைத்து நியாயம் சேர்க்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம் சொல்ல வந்த கதையை நேர்த்தியாகவும் ரசிக்கும் விதமாக சொல்லியிருப்பதும், அதில் அசோக் செல்வன், ரித்திகா, ஷாரா, வாணி போஜன், விஜய் சேதுபதி முதலானோர்களின் சிறந்த பங்களிப்பும் தான்!

திருமணத்திற்கு பிறகு அசோக் செல்வன், ரித்திகா சிங் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒவ்வொருவரது பக்கத்திலும் இருக்கும் நியாயங்கள் ஆகியவற்றை நம்பும்படியாக படமாக்கிய இயக்குனர் வாணி போஜனுக்கும், அசோக் செல்வனுக்கும் இடையில் இருக்கிற நட்பு பற்றிய காட்சிகளை இன்னும் அழுத்தமாகவும், லாஜிக் விஷயங்களுடனும் பதிவு செய்து, படத்தில் வரும் அதிகபடியான வசனங்களை குறைத்து இயக்கி இருந்தால் ‘ஓ மை கடவுளே’யின் பயணம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காதல், லட்சியம் ஆகியவற்றில் தோற்றுப் போன வானி போஜன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த ரித்திகா சிங் ஆலோசனைபடி அசோக் செல்வன் மேற்கொள்ளும் முயற்சிகள், அதன் முடிவு சுவாரஸ்யம்! லியோன் ஜேம்ஸின் இசை, பூபதி செல்வராஜின் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு, ஏனைய டெக்னிக்கல் விஷயங்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு பங்களிப்பு செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு நாகரிக இளைஞனாக வரும் அசோக் செல்வன் நட்பின் வலிமை, காதலின் ஆழம் உட்பட எல்லா உணர்வுகளையும அழகாக பிரதிபலித்து சிறப்பாக நடித்துள்ளார். அசோக் செல்வனின் தோழியாக இருந்து, மனைவியாகும் ரித்திகா சிங்கும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி சிறப்பாக நடித்துள்ளார். அசோக் செல்வன் மீது காட்டும் அன்பு, காதல், தன் கணவரிடம் நெருங்கி பழகும் வாணி போஜனால் ஏற்படும் கோபம் என்று படம் முழுக்க வரும் ரித்திகா சிங் அனைவரது மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கியுள்ளார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன், வாழ்க்கையில் எல்லாம் இழந்தவராக, அமைதியானவராக வரும், வாணி போஜனுக்கும் இப்படத்தில் அருமையான கேரக்டர்! அனைவரையும் கவரும்படியான நடிப்பை வழங்கியுள்ளார். கடவுள்களாக தோன்றி கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டர்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், கதையில் சினிமா இயக்குனராகவே ஒரு காட்சியில் வரும் கௌதம் வாசுதேவ் மேனன்,அசோக் செல்வனின் நண்பராக வரும் ஷாரா, ரித்திகா சிங்கின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் படத்தின் இதர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் என்று எல்லோரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.கதை சொன்ன விதம்

2. நடிகர்களின் பங்களிப்பு

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.ஒரு சில லாஜிக் விஷயங்கள்

2.அதிகபடியான வசனங்கள்

மொத்தத்தில்…

கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருந்தால் சமுதாயத்தில் அதிகரித்து வரும் விவாகரத்து விஷயங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பதை சொல்ல வந்திருக்கும் இப்படம் அனைவரையும் கவர்ந்து இழுக்க வாய்ப்பிருக்கிறது!

ஒரு வரி பஞ்ச் : பிரிந்தவர்களை இணைத்து வைக்கும் கடவுள் கதை!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;