சைக்கோ - விமர்சனம்

மிஷ்கின் ரசிகர்களுக்கான படம்!

விமர்சனம் 25-Jan-2020 12:50 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Myskkin
Production: Double Meaning Production
Cast: Udhayanidhi, Ram, Aditi Rao Hydari, Nithya Menen & Raj Kumar
Music: Ilaiyaraaja
Cinematography: Tanvir Mir
Editor: N Arunkumar

‘துப்பறிவாளன்’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி, நித்யாமேனன், அதிதி ராவ், ராஜ், இயக்குனர் ராம் உட்பட பலர் நடித்திருக்கும் ‘சைக்கோ’ வழக்கமான த்ரில்லர் படமா? இல்லை வித்தியாச முயற்சியா?

கதைக்களம்

தான் காதலிக்கும் அதிதியை ‘இம்ப்ரஸ்’ செய்வதற்காக, வானொலி மூலம் அவர் கொடுக்கும் ‘க்ளூ’க்களை வைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் செல்கிறார் பார்வையற்றவரான உதயநிதி. அவர் அதிதியை சந்திக்க வரும் அதே தருணத்தில், இளம் பெண்களை கடத்தி தொடர் கொலைகள் செய்துவரும் ‘சைக்கோ’ கொலைகாரன் ஒருவன் அதிதியை கடத்துகிறான். காவல்துறைக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் அந்த ‘சைக்கோ’ கில்லரிடம் சிக்கியிருக்கும் தனது காதலியை மீட்க மாற்றுத்திறனாளியான உதயநிதி நடத்தும் போராட்டமே ‘சைக்கோ’.

படம் பற்றிய அலசல்

மேலோட்டமாகப் பார்த்தால் இதுவும் வழக்கமான ஒரு ‘சீரியல் கில்லர்’ திரைப்படம்தான். ஆனால், அதில் மிஷ்கின் உலகமும், அவர்தம் கதாபாத்திரங்களும்தான் ‘சைக்கோ’வை சற்றே வேறுபடுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பார்வையற்ற நாயகனும், அவருக்கு உதவும் நடமாடமுடியாத நித்யாமேனன் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவம். ‘ஏ’ சர்டிஃபிகேட் படம் என்பதால் முழுச்சுதந்திரத்துடன் தான் நினைத்த விஷயங்களை படமாக்கியிருக்கிறார் மிஷ்கின். குறிப்பாக இளம் பெண்கள் கொலை செய்யப்படும் காட்சிகளில் ஸ்கிரீனிலிருந்து ரசிகர்களின் முகத்திலேலேய ரத்தம் தெரிப்பதுபோல் கொடூரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆகப்பெரிய பலமாக இருப்பது இளையராஜாவின் பின்னணி இசை. தன்வீரின் ஒளிப்பதிவு மிஷ்கினின் எழுத்துகளுக்கு காட்சிகளாக உயிர்கொடுத்திருக்கிறது.

இப்படத்தை ‘சைக்கலாஜிக்கல் டிராமா’வாக மிஷ்கின் உருவாக்க நினைத்திருக்கிறாரோ என்னவோ, படத்தில் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளை அத்தனை மெத்தனமாகப் படமாக்கியிருக்கிறார். இதுபோன்ற கில்லர் வகையறா படங்களில் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது யதார்த்திற்கு அருகாமையிலுள்ள காட்சிகளையும், முடிந்தளவுக்கான லாஜிக் விஷயங்களையும்தான். ஆனால், இந்த விஷயங்கள் ‘சைக்கோ’வில் மொத்தமாக மிஸ்ஸிங். அதேபோல் தவிர்க்கக்கூடிய சில காட்சிகளை யோசிக்காமல் ‘எடிட்’ செய்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தை எடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ‘படம் சற்று நீளமோ’ என்ற உணர்வு வராமலிருந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

தொடர்ந்து படங்கள் சறுக்கி வந்த நிலையில், ‘சைக்கோ’வின் பார்வையற்றவர் கதாபாத்திரம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் உதயநிதி. அலட்டல் இல்லாத, யதார்த்மான நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார். படத்தின் நாயகன் உதய்தான் என்றாலும், படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ‘சைக்கோ’வாக நடித்திருக்கும் ராஜ்குமார்தான். பார்ப்பதற்கு அத்தனை வசீகரமாக இருக்கும் ராஜ், தனது கண்கள் மூலம் ஒரு சைக்கோவின் மொத்த பிம்பத்தையும் பிரதிபலிக்கிறார். வளமான எதிர்காலம் தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது. அதிதி, நித்யா மேனன் இருவரும் தங்களது கேரக்டர்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இதுபோன்ற கதாபாத்திரங்கள் தமிழ்ப்படங்களில் அரிதாகவே கிடைக்குமென்பதால் இருவருக்குமே ‘லக்கி சான்ஸ்’ எனறே கூறலாம். குறிப்பாக அதிதியின் கண்களில் அத்தனை அன்பு. இவர்களைத் தவிர இயக்குனர் ராம், நரேன், சிங்கம்புலி, பவா செல்லதுரை என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. இளையராஜா
2. நடிகர்களின் பங்களிப்பு
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களை அறவே தவிர்த்திருப்பது
2. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

வழக்கமான ‘த்ரில்லர்’ படத்தை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ‘சைக்கோ’ ஏமாற்றத்தை தரலாம். ஆனால், மிஷ்கின் உலகத்தில் ‘உலாவ’ நினைப்பவர்களுக்கு ‘சைக்கோ’ கண்டிப்பாக சுவாரஸ்யத்தைத் தரும் என்பது நிச்சயம். அதிலும் ‘க்ளைமேக்ஸி’ல் இக்கதை மூலம் சொல்லவரும் விஷயத்திற்காக ‘சைக்கோ’வை தியேட்டருக்குச் சென்று ரசிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச்: மிஷ்கின் ரசிகர்களுக்கான படம்!

ரேட்டிங் : 5/10

#Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #NithyaMenen #Ilaiyaraaja #Ram #Myskkin #PsychoMovieReview #DoubleMeaningProductions #TanvirMir #Arunkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;