ராஜாவுக்கு செக் – விமர்சனம்

வஞ்சகர்களிடமிருந்து  மகளை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் கதை!

விமர்சனம் 24-Jan-2020 1:25 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sai Rajkumar
Production: Pallatte Kokkatt Film House
Cast: Cheran Pandian, Nandana Varma
Music: Vinod Yajamanya
Cinematography: MS Prabhu
Editor: CS Prem Kumar

‘மழை’ படத்தை இயக்கிய ராஜ்குமார், சாய்ராஜ்குமார் என்ற பெயரில் இயக்க, சேரன், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, இர்ஃபான் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ எப்படி?

கதைக்களம்

புலனாய்த்துறையில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சேரன்! இளம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் நான்கு பெரிய இடத்து இளைஞர்களுக்கு ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்கிறார் சேரன். ஒரு வருட ஜெயில் தண்டனை முடிந்து வெளியில் வரும் அந்த நான்கு இளைஞர்களில் ஒருவரான இர்ஃபான் சேரனின் மகள் நந்தனா வர்மாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுகிறார். தாங்கள் ஒரு வருடம், ஜெயிலில் அனுபவித்த வேதனைகளை நந்தனா வர்மாவை வைத்து சேரனை ஒரு இரவில் அனுபவிக்க வைக்க அந்த நான்கு இளைஞர்கள் செய்யும் கொடூர செய்லகள், அதையெல்லாம் பார்க்கும் சேரன் அந்த நான்கு இளைஞர்களிடமிருந்து தன் மகளை காப்பற்ற போராடும் போராட்டங்களே ‘ராஜாவுக்கு செக்’.

படம் பற்றிய அலசல்

இளம் பெண்களை கடத்திச் சென்று தங்களது இச்சைகளுக்கு இரையாக்கும் பணபலம், ஆள் பலம் படைத்த பெரிய இடத்து இளைஞர்கள், அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்ற கருத்துடன் இளம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது ‘ராஜாவுக்கு செக்’. படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்து தொற்றிக்கொள்ளும் பரபரப்பு படம் முழுக்க நம் மனதைக் கட்டிப் போடும் விதமாக திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். கதாநாயகனாக வரும் சேரனுக்கு இருக்கும் தூக்க வியாதி, குடும்ப சிக்கல், தொழில் நேர்த்தியால் ஏற்படும் ஆபத்து என்று பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து அதை விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்த்திய இயக்குனர் சாய் ராஜ்குமார், லாஜிக் விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தி, மது அருந்தும், புகைப்பிடிக்கும் காட்சிகளை கொஞ்சம் குறைத்து படமாக்கி இருந்தால் ‘ராஜாவுக்கு செக்’ இன்னும் விறுவிறுப்படைந்திருக்கும். போலீஸ் அதிகாரியாக வரும் சேரனுக்கு இருக்கும் நோய் கதையோடு ஒட்டவில்லை! அப்பா கண் முன்னாலேயே மகள் கொடுமைப்படுத்தப்படுவது, மகளை காப்பாற்ற முடியாமல் தந்தை தவிப்பது என்று நகரும் கதை அமைப்பு கொண்ட இப்படம் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். வினோத் யஜமான்யாவின் பின்னணி இசை, எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, சி.எஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷங்கள் ‘ராஜாவுக்கு செக்’கின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

சேரனுக்கு இப்படத்தில் கனமான பாத்திரம். குடும்ப சிக்கலில் தவிக்கும் கணவர், மகளின் பாசத்துக்காக ஏங்கும் அப்பா, நேர்மையாக செயல்படுவதால் சிக்கல்களை சந்திக்க நேரும் போலீஸ் அதிகாரி என்று பல்வேறு பரிமாணங்களில் சேரன் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தன் மகள் நான்கு இளைஞர்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளை டி.வி.முன் இருந்து பார்த்துக்கொண்டு செய்வதறியாமல் தவிக்கும் காட்சிகளில் சேரன் ஒரு அப்பாவுக்கு ஏற்படும் உணர்வுகளை, வேதனைகளை அழகாக பிரதிபலித்து நடித்துள்ளார். படத்தின் கதாநாயகி யார் என்றால் சேரனின் மகளாக வரும் நந்தனா வர்மாதான். நடிப்பிலாகட்டும், தோற்றத்திலாகட்டும் நம்மை கட்டிப் போடுகிறார் நந்தனா வர்மா! மாடலிங் செய்யும் பெண்ணாக வந்து கதையில் திருப்பதை ஏற்படுத்தும் ஸ்ருஷ்டி டாங்கே, சேரனின் மனைவியாக வரும் சரயூ மோகன், வில்லனாக வரும் இர்ஃபான் மற்றும் அவரது கூட்டளிகள் என்று எல்லோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை

2. சேரன், நந்தனா வர்மா

3. மெசேஜ்

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள், சேரனுக்கு இருக்கும் நோய் கதையுடன் ஒட்டாதது!

2. அதிகபடியான மந்து அருந்தும், புகைப் பிடிக்கும் காட்சிகள்!

மொத்தத்தில்…

இந்த நவீன் உலகத்தில் இளம் பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்!

ஒருவரி பஞ்ச் : வஞ்சகர்களிடமிருந்து மகளை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் கதை!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;