பட்டாஸ் – விமர்சனம்

’பட்டாஸ்’ இன்னும் சத்தமாக வெடித்திருக்கலாம்!

விமர்சனம் 18-Jan-2020 2:55 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: RS Durai Senthilkumar
Production: Sathya Jyothi Films
Cast: Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra, Nassar & Munishkanth
Music: Vivek-Mervin
Cinematography: Om Prakash
Editor: Prakash Mabbu

‘கொடி’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷும், இயக்குனர் துரை செந்தில்குமாரும் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள ‘பட்டாஸ்’ வெடி சத்தம் எப்படி?

கதைக்களம்

‘அடிமுறை’ எனும் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையில் குருவாக இருப்பவர் நாசர். இவரது சிஷயர் தனுஷ்! நாசரின் மகன் நவீன் சந்திரா. நாசரின் சிஷ்யராக இருக்கும் தனுஷ் அடிமுறை கலையில் குருவின் நன்மதிப்பை பெற்றவர்! ஆனால் மகனான நவீன் சந்திராவோ அந்த தற்காபு கலை மீது ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் நாசருக்கு மகனை விட தனுஷ் மீதே அதிக பிரியம்! இது நவீன் சந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குப் போகும் நவீன் சந்திரா, தந்தை நாசரையும், அவரது சிஷ்யர் தனுஷையும் கொன்று விடுகிறார். நவீன் சந்திராவின் கொலை வெறியில் இருந்து தனுஷின் மனைவி சினேகாவும், குழந்தையும் தப்பித்து விடுகிறார்கள். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் சினேகா ஜெயிலுக்கு போக, மகன் (தனுஷ்) ஒரு திருடனிடம் திருடனாக வளர்கிறார். ஜெயில் தண்டனை முடிந்து வெளியில் வரும் சினேகா தன் கணவரை கொன்ற நவீன் சந்திராவை பார்த்துவிட, சினேகா அவரை என்ன செய்தார்? சினேகா ஜெயிலுக்கு போக காரனமாண அந்த சம்பவம் என்ன? சினேகாவும் மகன் தனுஷும் இணைந்தார்களா? என்ற கேள்விகளுக்கான விடைகளை தரும் படமே ‘பட்டாஸ்’.

படம் பற்றிய அலசல்

அதிகம் யாருக்கும் தெரியாத ’அடி முறை’ என்ற தற்காப்பு கலை விஷயத்தை கையிலெடுத்த இயக்குனர் துரை செந்தில் குமாருக்கு முதலில் ஒரு பாராட்டு தெரிவிக்கலாம். அந்த விஷயத்தை இரண்டு காலகட்டங்களிலாக கதையாக நகர்த்தியிருக்கிற துரை செந்தில்குமார் இயக்கத்தில் படத்தின் ஆரம்ப காட்சிகள் எந்தவித கவன ஈர்ப்பும் இல்லாமல் மெதுவாகவே நகர்கின்றன! இடைவேளைக்கு 20 நிமிடங்கள் இருக்கும் நிலையில் கதை கொஞ்சம் வேகமும், சூடும் பிடிக்கிறது. அதன் பிறகு மகனே தந்தையை கொன்று விடுவது, அதன் பிறகு அந்த மகன் பெரிய கிக் பாக்ஸராக உருவெடுப்பது, நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் அம்மா , மகன் என்று நகரும் திரைக்கதையில் போதுமான எமோஷன்ஸும், சண்டை காட்சிகளில் விறுவிறுப்பும், லாஜிக் விஷயங்களும் இல்லாததால் ‘பட்டாஸ்’ வழக்கமான ஒரு படமாகவே பயணிக்கிறது. ‘அடி முறை’ என்ற தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் குருநாதர் நாசருக்கும், சிஷ்யர் தனுஷுக்கும் இடையிலான காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய இயக்குனர் துரை செந்தில் குமார் வில்லன் நவீன் சந்திரா மற்றும் மகனாக வரும் தனுஷ் கேர்கடர்களை இன்னும் வலுவாக அமைத்தும், லாஜிக் விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியும் இயக்கியிருந்தால் ‘பட்டாஸ்’ அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் படமாக அமைந்திருக்கும். தற்கால காட்சிகள் ப்ளாஷ் பேக் காட்சிகள் என்று பயணிக்கும் படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. விவேக், மெர்வின் இசையில் பின்னணி இசை கவனம் பெறவில்லை. பாடல்கள் பரவாயில்லை ரகம். படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு, கலை இயக்குனர் ஜி.துரைராஜ் ஆகியோர் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நடிகர்களின் பங்களிப்பு!

அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ்! ‘அடிமுறை’யின் வீரராக வரும் அப்பா தனுஷ் எதிரிகளை தெறிக்க விடுகிறார் என்றால் திருடனாக வரும் மகன் தனுஷ் தமாஷ், ஜாலி, அதிரடி என்று வேறுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அப்பா தனுஷின் மனைவியாக வரும் சினேகாவுக்கு இப்படத்தில் நல்ல கதாபாத்திரம். அடி முறை வித்தகராக வரும் சினேகா எதிரிகளுக்கு பாடம் புகட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனாக வரும் தனுஷ் விரும்பும் பெண்ணாக வரும் மெஹ்ரின் பிரசித்தாவுக்கு கதையில் திருப்பு முனையை ஏற்படுத்தும்விதமான கேரக்டர். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார் மெஹ்ரின்! மகன் தனுஷின் நண்பர் ‘பஞ்சர்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும், சதீஷ், மகன் தனுஷை திருடனாக வளர்க்கும் கேரக்டரில் நடித்திருக்கும் முனீஸ் காந்த் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள். வில்லனாக வரும் நவீன் சந்திராவுக்கு நல்ல கதாபாத்திரம். ஆனால் அவரது நடிப்பிலாகட்டும், வசனங்கள் பேசுவதிலாகட்டும் ஒரு வில்லனுக்குரிய வீரமும் கெத்தும் காணவில்லை.

பலம்

1.தற்காப்பு கலையான ‘அடிமுறை’யை மையப்படுத்தி இருப்பது!

2.அப்பா, மகனாக வரும் தனுஷ் மற்றும் சினேகா!

3. ஒளிப்பதிவு

பலவீனம்

1.படத்தின் முதல் அரைமணிநேரம்

2.எமோஷன்ஸ் மற்றும் விறுவிறுப்பு இல்லாத காட்சி அமைப்புகள்

3.பின்னணி இசை

மொத்தத்தில்…

‘அடிமுறை’ தற்காபு கலையை கையிலெடுத்த இயக்குனர் துரை செந்தில்குமார், திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பும், எமோஷன்ஸும் கொண்டு வந்திருந்தால் ‘பட்டாஸி’ன் சத்தம் இன்னும் ஓங்கி ஒலித்திருக்கும்!

ஒருவரி பஞ்ச் : ’பட்டாஸ்’ இன்னும் சத்தமாக வெடித்திருக்கலாம்!

ரேட்டிங் : 4.5/10

#Pattas #Dhanush #ThiraviyaPerumal #Sneha #MehreenPirzada #VivekMervin #RSDuraiSenthilKumar #SathyaJyothiFilms #PattasMovieReview #Adimurai #MartialArts #KickBoxing

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;