பச்சை விளக்கு – விமர்சனம்

சொன்ன விதத்தில் சில குறைகள் இருந்தாலும், வரவேற்க வேண்டிய  முயற்சி!

விமர்சனம் 4-Jan-2020 4:16 PM IST Top 10 கருத்துக்கள்

PRODUCTION : DIGI THING MEDIA WORKS

DIRECTION : DR.MARAN

CAST : DR.MARAN ,DHEESHA, SRI MAHESH, TAARA, NANDHA KUMAR

MUSIC : ‘VEDHAM PUDITHU’ DEVENDHIRAN

CINEMATOGRAPHY : BALAJI

EDITOR : SAI SURESH

பி.எச்.டி.படித்து டாக்டர் பட்டம் பெற்றவரும், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ அகிய இரு குறும் படங்களை இயக்கியவருமான டாக்டர் மாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கதாநாயகனாகவும் நடித்து இயக்கியுள்ள ‘பச்சை விளக்கு’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், சாலை விதிகள் பற்றி பி.எச்.டி. படித்து டிராஃபிக் வார்டனாகவும் இருப்பவர் டாக்டர் மாறன். இவர் சாலையில் சமூக சேவை செய்து கொண்டிருக்கும்போது ஹெல்மெட் அணியாமல் வரும் தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்குகிறார். இதனை தொடர்ந்து நடக்கும் சந்திப்புகளில் டாக்டர் மாறன் மீது ஈர்பு ஏற்படுகிறது தீஷாவிற்கு! இதனை தொடர்ந்து டாக்டர் மாறனும், தீஷாவும் காதலித்து வரும் நிலையில் தீஷாவின் தங்கை தாரா ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். இதையறியும் டாக்டர் மாறன் தீஷாவின் தங்கையை அந்த கும்பலிடம் இருந்து கப்பாற்ற முயற்சிக்க, மாறன் பல சவால்களை சந்திக்க வேண்டி வருகிறது. அந்த சவால்களை டாக்டர் மாறன் எப்படி தனது புத்திசாலித்தனத்தால் சமாளித்து தீஷாவின் தங்கையை காப்பாற்றி, மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை ஒழித்துக்கட்டுகிறார் என்பதே ‘பச்சை விளக்’கின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

‘விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது’ என்ற கருத்தை வைத்து இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் டாக்டர் மாறன்! ஆனால் அதை ஒரு சினிமாவுக்கு தேவையான சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து ரசிக்கும் படி சொல்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை டாக்டர் மாறன். படத்தின் பெரும் பகுதியும் சாலையில் பயணிகள் பயணிக்கும்போது கவனிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் பற்றியே பேசுவதால் ஏதோ ஒரு டாகுமெண்டரி படத்தை பார்க்கிற உணர்வையே ‘பச்சை விளக்கு’ தருகிறது. அதிலும் டிராஃபிக் சட்டத் திட்டங்கள் பற்றி பேச துவங்கிய படம் இடை வேளைக்கு பிறகு காதலிப்பது போல் நடித்து இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய கதையாக வேறு ஒரு களத்தில் பயணிக்க துவங்க, இளம் பெண்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்த வருகிறது. சிரிக்க வைக்கும் ஒரு சில காமெடி காட்சிகளுடன் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வந்துள்ளமைக்காக இப்படத்தை வரவேற்கலாம்!

இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் ‘வேதம் புதிது’ தேவேந்திரனின் இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது. ஆனால் பின்னணி இசையில் போதுமான கவனத்தை செலுத்தவில்லை தேவேந்திரன். அதைப்போல படத்தொகுப்பு செய்துள்ள சாய் சுரேஷ், ஓளிப்பதிவு செய்துள்ள பாலாஜி ஆகியோரின் பணிகளும் குறிப்பிடும்படியாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக நடித்து, படத்தை இயக்கியுள்ள டாக்டர் மாறனின் முயறிசி பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் நடிப்பு, இயக்கும் இரண்டிலும் மாறன் இன்னும் பயிற்சி பெற வேண்டும்! கதையின் நாயகியாக வரும் தீஷா நடிப்பில் குறை வைக்கவில்லை. இவரது தங்கையாக வரும் தாரா மற்றும் கல்லூரி மாணவனாக வரும் ஸ்ரீமகேஷ், கல்லூரி பேராசிரியரக வரும் மனோபாலா, டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக வரும் இமான் அண்ணாச்சி, பெண்களை மிரட்டி பணம பறிக்கும் கும்பல் தலைவனாக வரும் நந்தகுமார் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.சொல்லியிருக்கும் கருத்துக்கள்

2. ஒரு சில காமெடி காட்சிகள்

பலவீனம்

1.திரைக்கதை அமைப்பு, இயக்கம்

2. டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்

சாலை விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும், காதல் மற்றும் கேமரா மொபைல் ஃபோன் மூலம் வஞ்சிக்கப்படும் இளம் பெண்கள் பற்றியும் பேச வந்துள்ள இப்படம் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டிருப்பதால் வரவேற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் :

சொன்ன விதத்தில் சில குறைகள் இருந்தாலும், வரவேற்க வேண்டிய முயற்சி!

ரேட்டிங் : 3.5/10

#DrMaran #Dheesha #SriMahesh #Taara #NandhaKumar #VedhamPudithuDevendhiran #Balaji #SaiSuresh #PachaiVilakkuMovieReview #PachaiVilakku

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;