நான் அவளை சந்தித்தபோது – விமர்சனம்

உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டங்களை சொல்லும் படைப்பு!

விமர்சனம் 27-Dec-2019 6:31 PM IST Top 10 கருத்துக்கள்

Director : LG Ravichandar
Production:L. G. Ravichander
Cast : Santhosh Prathap, Chandhini, G Kumar, Parthiveeran Sujatha
Music : Hithesh Murugavel, Jai

‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படத்தை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நடித்து வெளியாகியுள்ள ‘நான் அவளை சந்தித்தப்போது’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சென்னையில் உதவி இயக்குனராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் பட வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிராமத்தில் குடிக்கார அப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டு சென்னை வரும் சாந்தினி, உறவினர் வீட்டு முகவரியை தொலைத்துவிட்டு பரிதவித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார் சந்தோஷ் பிரதாப்! சாந்தினியின் நிலையை பார்த்து அவரை பாதுகாப்பாக அவரது ஊருக்கு கொண்டு போய் விட செல்லும் சந்தோஷ் பிரதாபை அந்த ஊர் பெரியவர்கள் தவறாக நினைத்து சாந்தினியை அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். சாந்தினியுடன் ஒரு நாள் வாழ்ந்துவிட்டு சந்தோஷ் பிரதாப் சென்னை திரும்புகிறார். ஆனால் சாந்தினியின் நினைவுகள் எப்போதும் சந்தோஷ் பிரதாபை அலட்டி கொண்டிருக்க, சந்தோஷ் பிரதாப் சாந்தினி விஷயத்தில் என்ன முடிவெடுத்தார்? அவரது இயக்குனர் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

‘இந்த படத்தின் கதை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டது’ என்று கூறியுள்ள இப்படத்தின் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர், தனது வாழ்க்கை சம்பவங்களை ஓரளவுக்கு ரசிக்க கூடிய விதமாக இயக்கியுள்ளார். குறிப்பாக, சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருப்பவர்களின் வாழ்க்கை போராட்டங்களை யதார்த்தமாக படமாக்கியுள்ளார். இந்த படத்தின் கதை 1996-ல் நடப்பது மாதிரி இருப்பதால் அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருவதற்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பது படத்தின் சில காட்சிகளை பார்க்கும்போது தெரிய வருகிறது.

சந்தோஷ் பிரதாப், சாந்தினியுடன் ஊருக்கு வந்ததும் ஊர் பெரியவர்கள் அவர்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் கட்டாய திருமணம் செய்து வைக்கும் காட்சிகளில் எல்லாம் லாஜிக் இல்லை! இடைவேளை வரை கொஞ்சம் நாடகத்தன்மையுடன் பயணிக்கும் படம் இருவரது திருமணத்திற்கு பிறகு சூடு பிடித்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய பாசிட்டிவான கிளைமேக்ஸுடன் முடிவடைகிற விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஹித்தேஷ் முருகவேல் பாடல்களில் போதுமான கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. ஆனால், 1996-ல் நடப்பது மாதிரியான கதைக்கு தேவையான பின்னணி இசையை தந்துள்ளார். ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை மேலும் ரசிக்க முடிகிறது. படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ள ராஜாமுகமது நாடகத்தன்மையுடன் பயணிக்கும் முதல் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்படைந்திருக்கும்

நடிகர்களின் பங்களிப்பு

சினிமா வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர் கேரக்டருக்கு சந்தோஷ் பிரதாப் சரியாக பொருந்தி சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். கவர்ச்சி படங்களை எடுக்கும் தயரிப்பாளாரக வரும் இன்னசண்ட், சந்தோஷ் பிரதாபுக்கு கவர்ச்சி படத்தை இயக்கும் வாய்ப்பை வழக, அந்த வாய்ப்பை சந்தோஷ் பிரதாப் நிராகரிக்க, தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கும் சந்தோஷ் பிரதாபுக்கு மீண்டும் பட வாய்ப்பை வழங்கி அவரை இயக்குனராக்கும் காட்சிகளில் இன்னசெண்டும், சந்தோஷ் பிரதாபும் கவனம் பெறுபடியான நடிப்பை வழங்கியுள்ளனர். அப்பாவி கிராமத்து பெண்ணாக வரும் சாந்தினிக்கு பரிதாபத்தை அள்ளும் கேரக்டர். தான் செய்த தவறால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் பிரதாபின் கௌரவத்தை காப்பாற்ற சாந்தினி மேற்கொள்ளும் முயற்சிகள், அதனால் ஏற்படும் விபரீதங்கள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. சந்தோஷ் பிரதாபின் நண்பர்களாக கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், பாட்டியாக சாந்தி வில்லியம்ஸ், சாந்தினியின் அப்பாவாக ஜி.எம்.குமார், அம்மாவாக ‘பருத்தி வீரன்’ சுஜாதா, மற்றும் டி.பி.கஜேந்திரன், சுப்புராஜ், ‘காதல்’ சரவணன், ‘நாடோடிகள்’ ரங்கா என்று படத்தில் நிறைய பேர் நடித்துள்ளனர்.

பலம்

1.எடுத்துக்கொண்ட கதையை ரசிக்கும்படி சீராக சொல்லியிருப்பது

2.குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள்

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள்

2.நாடகத் தன்மையுடன் பயணிக்கும் முதல் பாதி!

மொத்தத்தில்…

சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருப்பவர்களின் வாழ்க்கை போராட்டங்களை காதல், குடும்ப செண்டிமெண்ட் ஆகிய விஷயங்களுடன் சொல்லியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது

ஒருவரி பஞ்ச் : உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டங்களை சொல்லும் படைப்பு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;