‘V1’ MURDER CASE – விமர்சனம்

எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் க்ரைம், த்ரில்லர் படம்!

விமர்சனம் 26-Dec-2019 6:00 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Pavel Navageethan
Production:KalorfulParadigm Picture Official
Cast:Ram Arun Castro, Vishnupriya Pillai
Music:Roni Raphael
Cinematography:Krishna Sekhar TS
Editor:CS Prem Kumar


மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’, ‘வட சென்னை’ உட்பட பல படங்களில் நடித்துள்ள பாவேல் நவகீதன் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம் ‘V1 MURDER CASE’. அறிமுகம் ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளை, காயத்ரி, லிஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘V1 MURDER CASE’ எப்படி?

கதைக்களம்

சென்னையில் நர்மதா (காயத்ரி[ என்ற இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை சம்பவத்தை துப்பறிந்து கொலையாளியை கண்டு பிடிப்பதில் திணறுகிறது போலீஸ். இந்நிலையில் இந்த கொலை வழக்கை, போலீஸ் டிபார்ட்மெண்டிலிருந்து தடவியல் டிபார்ட்மெண்டுக்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரியான அக்னி (ராம் அருண் கேஸ்ட்ரோ) விசாரிக்க துவங்க, அவருக்கு லூனா ( விஷ்ணுப்ரியா பிள்ளை) என்ற பெண் போலீஸ் அதிகாரியும் துணை புரிய, இவர்கள் இருவரும் இணைந்து நர்மதாவின் கொலையாளியை எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே ‘V1 MURDER CASE’-ன் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்…

காதல், பாடல்கள், திணிக்கப்படும் காமெடி போன்ற எந்த கமர்ஷியல் விஷயங்களையும் திரைக்கதையில் திணிக்காமல் சொல்ல வந்த கதையை நேர்த்தியாக, அதுவும் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் விறுவிறுப்பை கையாண்டு ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் பாவேல் நவகீதன். திரைக்கதையில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கொலையாளி இவராக இருக்குமா, இல்லை அவராக இருக்குமா என்று யோசிக்க வைக்கும் விதமாகவே, திரைக்கதையை சில ட்விஸ்டுகளுடன் பயணிக்க வைத்துள்ள இயக்குனர், கொலையாளி இவர் தான் என்று தெரியப்படுத்தும் கிளைமேக்ஸ் எதிர்பாராதது! அதிகம் யாரும் கவனிக்காத சில சின்ன சின்ன தடயங்கள் மூலம் நிஜ கொலையாளியை போலீஸ் அதிகாரி அக்னி கண்டு பிடிக்கும் புலனாய்வு காட்சிகளை. யதார்த்தமாகவும், செம த்ரில்லிங்காகவும் ரசிக்க வைக்கும் விதமாக இயக்கிய பாவேல் நவகீதன் போலீஸ் அதிகாரி அக்னியாக வருபவருக்கு இருட்டால் ஏற்படும் நோய் பற்றிய விஷயங்களை இன்னும் கொஞ்சம் டீட்டெயிலாக சொல்லி இருந்தால் தனது இயக்குனர் அவதாரம் மேலும் பேசப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக புரிந்துகொண்டு ஒளிப்பதிவு செய்துள்ள கிருஷ்ணசேகர், இசை அமைத்துள்ள ரோனி ரஃபேல், படத்தொகுப்பு செய்துள்ள சி.எஸ்.பிரேம் குமார் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடும்படி அமைந்துள்ளது.

நடிர்களின் பங்களிப்பு

‘இருட்டு’ என்றாலே பாதிப்புக்குள்ளாகும் போலீஸ் அதிகாரி அக்னியாக நடித்திருக்கும் அறிமுகம் ராம் அருண் கேஸ்ட்ரோ, அலட்டல் இல்லாத அமைதியான போலீஸ் அதிகாரியாக யதாரத்தமாக நடித்துள்ளார். அவரது உடல்மொழியும், அலட்டல் இல்லாத பங்களிப்பும் அக்னி கேரக்டருக்கு சரியாக பொருந்தியுள்ளது. இவருடன் லூனா என்ற பெண் போலீஸ் அதிகாரியாக வரும் விஷ்ணுப்ரியா பிள்ளையும் அக்னி கேரக்டருக்கு ஈடு கொடுக்கும் விதமாக சிறப்பாக நடித்து கவனம் பெறுகிறார். கொலை செய்யப்படும் பெண் நர்மதாவாக நடித்திருக்கும் காயத்ரி, இவரது காதலனாக வரும் லிஜீஷ் இருவருக்கும் ஒரு சில காட்சிகளே என்றாலும் படம் பார்ப்பவர்களின் மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கிவிட்டு செல்கிறார்கள். இவர்கள் தவிர ஒரு சில காட்சிகளில் மைம் கோபி, லிங்கா ஆகியோரும் வந்து போகிறார்கள்.

பலம்

1.விறுவிறுப்பாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதையும், இயக்கமும்!

2.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.ஒரு சில லாஜிக் மீறல்கள்

2. இருட்டால் பாதிக்கப்படும் அக்னி கேரக்டர் குறித்த விளக்கம் இல்லாதது…

மொத்தத்தில்…

சிறந்த நடிகரான பாவேல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பி ரசிப்பவர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது!

ஒரு வரி பஞ்ச் : எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் க்ரைம், த்ரில்லர் படம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;