சில்லுக்கருப்பட்டி – விமர்சனம்

(இந்த படத்திற்கு ரேட்டிங் தவிர்க்கப்பட்டுள்ளது…)

விமர்சனம் 26-Dec-2019 12:43 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Halitha Shameem
Production: Divine Productions
Cast: Samuthirakani,Sunaina,Nivedhithaa Sathish Leela Samson,Sara Arjun,Sree Ram
Pradeep Kumar
Cinematography:Abinandhan Ramanujam,Manoj Paramahamsa vijay karthik,yamini yagnamurthy
Editor:Halitha Shameem

‘பூவரசம் பீப்பி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனரான ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இந்த படத்தை சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இப்படம் மீது மேலும் எதிர்பார்பு உருவாகியது. அந்த எதிர்பார்ப்பை ‘சில்லுக்கருப்பட்டி’ நிறைவேற்றியுள்ளதா என்று பார்ப்போம்!

படத்தில் நான்கு கதைகள்… ஒவ்வொன்றும் வேறு வேறு களம்! அடித்தட்டு மக்கள் பற்றிய கதையிலிருந்து துவங்குகிறது படம்!

குப்பை மேடுகளில் கிளறி கிடைக்கும் பொருட்கள் மூலம் வாழ்க்கை நடத்தும் சிறுவன் மாஞ்சா (ராகுல்). குப்பைகளை கிளறும்போது அவனுக்கு ஒரு விலை உயர்ந்த மோதிரம் கிடைக்கிறது. அந்த மோதிரத்துக்கு சொந்தக்காரி மிட்டி (சாரா அர்ஜுன்) என்ற சிறுவயது பெண். பணக்கார வீட்டு பெண்ணான மிட்டியை மானசீகமாக விரும்பும் மாஞ்சா, அந்த மோதிரத்தை அவளிடம் ஒப்படைக்க விரும்புகிறார். அதற்காக மாஞ்சா படும் பாடுகள்தான் முதல் கதையின் கதைக்களம்!

சேரி வாழ் மக்களின் சின்னச் சின்ன ஆசைகள் கூட அந்த குப்பை மேட்டிலிருந்து கிடைக்கிற பொருடகளால்தான் நிறைவேறுகிறது என்பதை ஒரு ஷாம்பூ பாட்டில் மூலம் சொல்லும் இயக்குனர், முதல் கதையையே நம்மை அடுத்தடுத்த கதைகளை பார்க்கத் தூண்டும் விதமாக அருமையாக தந்து அசத்தியுள்ளார். மாஞ்சா என்ற சிறுவனுடன் வரும் மற்ற சிறுவர்கள், பணக்கார வீட்டு சிறுமியாக வரும் சாரா அர்ஜுன் ஆகியோரை சிறப்பாக நடிக்க வைத்த இயக்குனர் ஒவ்வொரு கேர்க்டர் மூலமும் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார்.

இரண்டாவது கதை - மீம் கிரியேட்டரான முகிலனுக்கு (மணிகண்டன்) கேன்சர் நோய்! இதனால் இறந்து விடுமோ என்ற பயத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் ஷேர் டாக்ஸி பயணத்தில் மது (நிவேதிதா சதீஷ்) என்ற இளம் பெண்ணின் நட்பு கிடைக்க, அந்த நட்பு பிறகு காதலாக மாறி, மதுவின் அரவணைப்பு, அன்பு முகிலனின் கேன்சர் நோய்கே மருந்தாகும் காதல் கதை! இந்த காலத்து இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறைகளை சொல்லும் இந்த கதையும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. முகிலனாக வரும் மணிகண்டன் மதுவாக வரும் நிவேதிதா சதீஷ் அந்த கதாபாத்திரங்களுன் ஒன்றி யதார்த்தமாக நடித்துள்ளனர்.

மூன்றாவது கதை 60 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய மனைவியை இழந்த நவநீதனுக்கும் (க்ராவ்மகா ஸ்ரீராம்), கிட்டத்தட்ட அதே வயதுடைய, திருமணம் செய்யாது தனியாக வாழ்ந்து வரும் யசோதாவுக்கும் (லீலா சாம்சன்) இடையில் உருவாகும் அன்பு, பாசத்தால் அவர்களது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை சொல்லும் அருமையான வாழ்க்கை பதிவு! கடற்கரையில் அமர்ந்து மெய்மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் இளம் காதலர்களை பார்த்து நவநீதன் யசோதாவிடம், ‘நாமும் இப்படி…’ என்று சொல்ல, யசோதா நவநீதனை பார்த்து முகம் சுழித்து ஒதுங்கினாலும், அன்புக்கு ஏங்குகிறவர்களின் பரிதவிப்பை, யதார்த்த விஷயங்களை அழகாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் ஹதா ஷமீம்! இந்த கதைக்கான நடிகர்கள் தேர்வு, அவர்களை நடிக்க வைத்த விதம் அருமை!

நான்காவது கதை, மூன்று பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தி வரும் தனபால் (சமுத்திரக்கனி), அமுதினி (சுனைனா) தம்பதியர் பற்றியது! தினமும் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால் தான் சமுத்திரக்கனிக்கு தூக்கமே வரும். குடும்ப சுமையை முழுவதும் தன் தோளில் சுமந்து குடும்பத்தை நடத்தி வரும் அமுதினி, தன் கணவர் தனபாலிடம் இருந்து எதிர்பார்க்கும் அரவணைப்பு, கவனிப்பு கிடைக்காமல் போக, இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடக்கிறது. இதனால் நிம்மதி இழந்து தவிக்கும் சமுத்திரக்கனி, எப்படி தன் தவறுகளை உணர்ந்து மனைவிக்கு அவர் விரும்பும் கணவராகிறார் என்பதை குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பம் மூலம் அழகாக பதிவு செய்துள்ளர் இயக்குனர். இந்த கதையில் வரும் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், கூடல் என்று கதையை முழுக்க சுவாரஸ்யப்படுத்தியுள்ள இயக்குனர் ஹலீத ஷமீம் இந்த கதையின் மூலம், தாம்பத்ய வாழ்க்கை ‘ஸ்மூத்’தாகவும், இனிமையாகவும் செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற நல்ல கருத்தையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். ]

பெரும்பாலான படங்களிலும் அறிவுரை வழங்குபவராக நடித்து வரும் சமுத்திரக்கனி இப்படத்தில் மாறுபட்ட கேரக்டரில் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார். அன்புக்கு ஏங்கும் மனைவியாக சுனைனாவும் தனது கதாபாத்திரத்துக்கு தேவையான சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவர்களது மூன்று பிள்ளைகளாக வருபவர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

இயக்குனர் ஹலீதா ஷமீம் நினைத்த விஷயங்களை திரையில் அப்படியே கொண்டு வர, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி ஆகியோர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அதைப் போல பிரதீப் குமாரின் பின்னணி இசையும் சில்லுக்கருப்பட்டிக்கு பலம் சேர்த்துள்ளதோடு, ‘அகம் தானா..’ என்று வரும் பாடலும் ரசிக்க வைக்கிறது.

குடும்பத்துடன் சென்று பாரக்க கூடிய தரமான படங்கள் வருவதில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது ‘சில்லுக்கருப்பட்டி’. குடும்பத்துடன் தியேட்ருக்கு செல்லுங்கள் ஒரே டிக்கெட்டில் நான்கு கதைகளை கொண்ட ‘சில்லுக்கருப்பட்டி’யை நிச்சயம் ருசிக்கலாம்!

(இந்த படத்திற்கு ரேட்டிங் தவிர்க்கப்பட்டுள்ளது…)

#2DEntertainment #Suriya #RajSekarPandian #SilluKaruppatti #Halitha #DivineProductions #Samuthirakani #Sunaina #SaraArjun #LeelaSamson #Sathish #Nivedhitaa #PradeepKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;