ஹீரோ – விமர்சனம்

கருத்துக்களை மட்டுமே அள்ளி வீசும் ஹீரோ!

விமர்சனம் 21-Dec-2019 5:59 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: PS Mithran
Production: KJR Studios
Cast: Sivakarthikeyan, Kalyani Priyadarshan Arjun Sarja, Abhay Deol,Robo Shankar
Music: Yuvan Shankar Raja
Cinematography: George C Williams
Editor:Anthony L Ruben

‘இருபுத்திரை’ படம் மூலம் கவனம் பெற வைத்த இயக்குனரான பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அறிமுகம் கல்யாணி ப்ரியதர்சன், அர்ஜுன், அபய் தியோல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள ‘ஹீரோ’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சிறுவயதில் இருக்கும் சிவகார்த்திகேயன் டிவியில் வரும் சக்திமேன் கேரக்டரை பார்த்து எதிர்காலத்தில் தானும் அது மாதிரி ஒரு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் 12-வது வகுப்பில் முதல் மாணவராக தேர்வாகும் சிவகார்த்திகேயன் தன் அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது சான்றிதழை விற்றுவிடுகிறார். இதனை தொடர்ந்து சூழ்நிலை காரணமாக பணம் என்ற லட்சியத்துடன் போலி சான்றிதழ்களை அச்சடித்து விற்றும், கல்லூரிகளுக்கு மாணவர்களை பிடித்து கொடுத்தும் வாழ்க்கையை ஓட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தன்னை போலவே படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் ஒரு மாணவிக்கு நேர்மையாக கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்க முயற்சிக்கையில், நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நல்ல ஐடியாக்களை கொண்டும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு எதிராக செயல்படும் கல்வியாளரும், தொழிலதிபருமான அபய் தியோல் சிவகார்த்திகேயன் வாழ்க்கயில் குறுக்கிட, அவனை அழிக்க, விஞ்ஞானியான அர்ஜுன் துணையுடன் ‘சூப்பர் ஹீரோ’ அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன் செய்யும் சாகசங்களே ‘ஹீரோ’.

படம் பற்றிய அலசல்


மாணவர்களின் திறமையை மார்க்கை வைத்து எடைபோடும் சிஸ்டத்தை மாற்ற வேண்டும், நமது கல்வி முறையிலுள்ள சிஸ்டத்தை மாற்ற வேண்டும், அப்படி மாற்றி மாணவர்களுக்கு இருக்கும் திறமையை ஊக்கப்படுத்தினால்தான் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வரும், அதன் மூலம் நாடு வளர்ச்சி அடையும் என்ற கருத்தை ‘ஹீரோ’ மூலம் சொல்ல வந்துள்ளார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். ஆனால் அந்த கருத்தை ஹீரோ அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன் மூலமாக சொல்லியுள்ள விதத்தில் தான் எந்த லாஜிக்கும் இல்லை. சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் வரையிலான காட்சிகளும் கதையின் போக்கும் சுவாரஸ்யம் தரும் வகையில் அமைந்து ரசிக்க வைத்தது என்றால் அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் முகத்தில் ஒரு மாஸ்க் அணிந்ததும் அவருக்கு சூப்பர் ஹீரோ பவர் கிடைப்பது, குழந்தைகளின் கண்டு பிடிப்புகளை வைத்து, வில்லனை எளிதாக வீழத்த முயற்சிப்பது, யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் விஞ்ஞானியான அர்ஜுன் கீழ் நிறைய மாணவர்கள் புதிய புதிய கண்டு பிடிப்புகளுடன் படித்து வருவது போன்ற காட்சிகளில் எல்லாம் சிறிதும் நம்பகத்தன்மை இல்லாததால் ‘ஹீரோ’வுடன் படம் பார்ப்பவர்களால் ஒன்றி பயணிக்க முடியவில்லை! இருந்தாலும் ‘சுயமாக சிந்தித்து செயல்ப்படும் ஒவ்வொருவரும் ஹீரோவே’ என்ற கருத்தை மாணவர்களிடத்தில் பதிய வைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஆகியவை பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு


சூப்பர் ஹீரோவாக வரும் சிவகார்த்திகேயன் கேரக்டரும், நடிப்பும் சொல்லும்படியாக அமையவில்லை. படம் முழுக்க அறிவுரைகளை கூறும் விதமாகவே அவரது கேரக்டர் அமைந்திருப்பதால் கவனம் பெறவில்லை. சிவகார்த்திகேயனின் காதலியாகவும், சமூக சேவகியாகவும் வரும் அறிமுகம் கல்யாணி ப்ரியதர்சன் கேரக்டர் கதையோடு ஒட்டவேயில்லை. இருந்தாலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் கல்யாணி. இந்த படத்தில் வரும் கேரக்டர்களில் அதிகம் கவனம் பெறுவது அர்ஜுன் ஏற்று நடித்துள்ள விஞ்ஞானி கேரக்டர் தான். அவர் பேசும் வசனங்களும், அதிலுள்ள கருத்துக்களும் வரவேற்க கூடியதே! கல்வியாளராக, வில்லனாக வரும் அபய் தியோல் தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தை காட்டி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் எல்லா விஷயங்களிலும் வில்லனாக இருப்பது ஏனோ என்று தெரியவில்லை. இவர்கள் தவிர சிவகார்த்திகேயனின் அப்பாவாக அழகம் பெருமாள், நல்ல மார்க் எடுத்த மாணவியாக வரும் இவானா, அவரது தந்தையாக வரும் குமரவேல், சிவகார்த்திகேயன் நண்பராக வந்து ஒரு சில காட்சிகளுடன் காணாமல் போகும் ரோபோ சங்கர், போலீஸ் அதிகாரியாக வரும் பிரேம் என்று படத்தில் ஏகப்பட்ட பேர் நடித்திருக்கிறார்கள்.

பலம்


1.சொல்ல வந்த கருத்து

2.அர்ஜுன் கதாபாத்திர வடிவமைப்பு

3. முதல் பாதி

பலவீனம்


1.சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறிய பிறகான காட்சிகள்

2. நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகள்

3. கதையுடன் ஒட்டாத ஹீரோயின் கேரக்டர்

மொத்தத்தில்…


பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘இரும்புத்திரை’ தந்த சுவாரஸ்யமோ விறுவிறுப்போ இப்படத்தில் இல்லை என்றாலும் நம் நாட்டு கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தையும், திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் வரவேற்கலாம்!

ஒருவரி பஞ்ச் : கருத்துக்களை மட்டுமே அள்ளி வீசும் ஹீரோ!


ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;