தம்பி – விமர்சனம்

பாசக்கார ‘தம்பி’

விமர்சனம் 21-Dec-2019 3:14 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Jeethu Joseph
Production: Viacom 18,Parallel Minds Productions
Cast: Karthi,Jyothika,Sathyaraj
Music: Govind Vasantha
Cinematography: R. D. Rajasekhar
Editor: VS Vinayak

கார்த்தியும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம், ‘பாபநாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனரான ஜித்து ஜோசஃப் இயக்கும் படம் என்று பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி வெளியாகியுள்ள ‘தம்பி’ அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்கும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதியில் ஊரே மதிக்கும் செல்வாக்கு மிகுந்த மனிதராக இருக்கும் சத்யராஜ், மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோருடன் வசித்து வருகிறார். அரசியல் களத்திலும் பிரபலமானவராக இருக்கும் சத்யராஜ், அந்த பகுதியிலுள்ள பழங்குடி இன மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் ஒரு கும்பலுக்கு எதிராக போராடி வருகிறார். இந்நிலையில் பதினைந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனாக அந்த வீட்டுக்கு வருகிறார் கார்த்தி! அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், திருப்பங்களுமே ‘தம்பி’

படம் பற்றிய அலசல்

மலையாள ‘மெம்மரீஸ்’, ‘திருசியம்’, தமிழ் திருசியமான ‘பாபநாசம்’ முதலான படங்கள் மூலம் மிகவும் கவனம் பெற்ற இயக்குனரான ஜித்து ஜோசஃப் இயக்கியுள்ள இந்த படமும் அவரது பாணியிலான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. கோவாவில் ‘ஃப்ராடு’ வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வரும் கார்த்தி, சத்யராஜ் மகனாக, ஜோதிகாவின் தம்பியாக மேட்டுப் பாளையத்துக்கு வந்ததும் ‘தம்பி’யின் கதை சூடு பிடிக்கிறது. அதுவரையிலான படத்தின் முதல் பாதி கதை கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை நமக்கு அளித்தாலும் அதன் பிறகு, கதையில் ஏற்படும் யாரும் யூகிக்க முடியாத அடுத்தடுத்து நிகழும் சில திருப்பங்கள், சம்பவங்கள் மூலம் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்கி சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஜித்து ஜோசஃப். சந்தர்ப சூழ்நிலையால் நடந்தேறும் ஒரு சோகமான சம்பவம், அதனை தொடர்ந்து அந்த சம்பவத்தை மறைக்க மேற்கொள்ளும் சில விஷயங்கள் என்று பயணிக்கும் ‘தம்பி’யின் திரைக்கதையில் முதல் முக்கால் மணிநேர திரைக்கதை கோவாவில் பயணிக்கிறது. அங்கு பிழைப்புக்காக சிறு சிறு தவறுகள் செய்யும் கார்த்தி சம்பந்தப்பட்ட ஜாலியான காட்சிகளுடன் பயணிக்க துவங்கும் திரைக்கதை பிறகு பக்கா ஒரு த்ரில்லர், சஸ்பென்ஸ் படத்துக்கான விஷயங்களுடனும் செண்டிமெண்ட் காட்சிகளுடனும் பயணித்து ரசிக்க வைக்கிறது. மர்மங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த காட்சிகளாக பயணிக்கும் இந்த கதையை வலுவூட்டியிருப்பதில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பாளர் வி.எஸ்.விநாயக் ஆகியோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் ‘96’ படம் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த கோவிந்த் வசந்தா இசையில் அமைந்துள்ள பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றை கவனத்தை ஈர்க்கவில்லை. இது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும் ‘தம்பி’ யாருக்கும் ஏமாற்றத்தை அளிக்காது!

நடிகர்களின் பங்களிப்பு

கோவாவில் பிழைப்புக்காக சிறுசிறு தவறுகளை செய்யும் துறுதுறு இளைஞனாகவும், மேட்டுப் பாளையத்தில் அக்கா பாசத்துக்கு அடங்கிய பாசக்கார தம்பி சரவணனாகவும் கார்த்தி இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் சிறந்த நடிப்பை வழங்கி ரசிக்க வைத்துள்ளார். தம்பியை இழந்து வாடும் அக்காவாகவும், அந்நியாயத்துக்காக குரல் கொடுப்பவராகவும், ஏழைகளிடத்த்ல் பாசத்தை காட்டுபவராகவும் வரும் ஜோதிகாவும் தனது கேரக்டரை தனது இயல்பான நடிப்பால் சிறப்பாக்கியிருக்கிறார். பொறுப்புள்ள குடும்ப தலைவராகவும், ஜோதிகாவின் தந்தையாகவும், தன்னை சார்ந்த ஊர் மக்களுக்கு பாதுகாவலனாகவும் வரும் சத்யராஜ் தனது அனுபவ ஆற்றலை இந்த படத்திலும் சரியாக பதிவு செய்துள்ளார். கார்த்தியை காதலிக்கும் டாக்டராக வரும் நிகிலா விமலுக்கு சொல்லும்படியாக கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் நடிப்பை பொறுத்தவரையில் நிகிலா ல் நூறுசதவிகித பங்களிப்பை வழங்கியுள்ளார். கோவா போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசு, மேட்டுப் பாளையம் போலீஸ் அதிகாரியாக வரும் ஆன்சன்பால், சத்யராஜின் மனைவியாக வரும் சீதா, பேச முடியாத பாட்டியாக வந்து கார்த்தியை தனது பார்வையாலேயே மிரட்டும் சவுக்கார் ஜானகி, கார்த்திக்கு ‘டஃப்’ கொடுக்கும் சிறுவனாக வரும் அஸ்வத், கதையில் திருப்பதை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்திருக்கும் ரமேஷ் பேரடி, கோவாவில் கார்த்தியின் நண்பராக வரும் ரமேஷ் திலக் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரின் கதாபாத்திரங்களையும் சிறப்பாக வடிவமைத்து அவரக்ளை சிறப்பாக நடிக்க வைக்கவும் செய்துள்ளார் இயக்குனர் ஜித்து ஜோசஃப்.

பலம்

1.எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக பயணிக்கும் இரண்டாம் பாதி!

2.கதாபாத்திர வடிவமைப்பும், அவர்களது பங்களிப்பும்

3.ஒளிப்பதிவு

பலவீனம்

1.ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தரும் முதல் முக்கால் மணிநேர திரைக்கதை!

2.இசை

மொத்தத்தில்…

யாரும் யூகிக்க முடியாத விதமாக அடுத்தடுத்து சில ட்விஸ்டுகளை தந்தும் ஒரு சில த்ரில் அனுபவங்களை தந்தும் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, முதன் முதலாக இணைந்து அக்கா, தம்பியாக நடித்துள்ள இப்படம் அவர்களது ரசிகர்களை தவிர்த்து அனைவரையும் கவரும் என்பது நிச்சயம்!

ஒரு வரி பஞ்ச் : பாசக்கார ‘தம்பி’

ரேட்டிங் : 5/10

#Thambi #Donga #Karthi #Jyotika #Sathyaraj #JeethuJoseph #NikhilaVimal #ThambiMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;