காளிதாஸ் – விமர்சனம்

விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த பக்கா த்ரில்லர் காளிதாஸ்!

விமர்சனம் 14-Dec-2019 1:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sri Senthil
Production: Leaping Horse Entertainment, Incredible Productions and Dina Studios
Cast: Bharath, Ann Sheetal, Suresh Chandra Menon and Aadhav Kannadhasan
Music: Vishal Chandrasekhar
Cinematography: Suresh Bala
Editor: Bhuvan Srinivasan

‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சிக்காக குறும்படத்தை இயக்கிய அனுபவத்தோடு, ‘காளிதாஸ்’ படத்தின் மூலம இயக்குனராக களமிறங்கியுள்ளார் ஸ்ரீசெந்தில். இவரது இயக்கத்தில் பரத், அன் ஷீத்தல், சுரேஷ் சந்திர மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘காளிதாஸ்’ எப்படி?

கதைக்களம்

அடுக்குமாடி குடியிருப்பு! அதன் மாடியிலிருந்து ஒரு பெண் கீழே விழுந்து மரணம் அடைகிறார். துப்பு துலக்க போலீஸ் அதிகாரி காளிதாஸ் (பரத்) வருகிறார். அவர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மறுநாளே இன்னொரு பெண்ணும் அதே பாணியில் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். இந்த மரணங்களில் உள்ள மர்மங்கள் நீடிக்க, துப்பு துலக்க உயர் போலீஸ் அதிகாரியான ஜார்ஜும் (சுரேஷ் சந்திர மேனன்) வருகிறார். காளிதாஸுடன் இணைந்து ஜார்ஜும் தீவிரமாக விசாரனை நடத்தி வரும் நிலையீல், மீண்டும் ஒரு பெண் அதே பாணியில் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்க, இது கொலையா இல்லை தற்கொலையா என்று புலப்படாமல் திணறுகின்றனர்! இறுதியில் ஒரு பெண் தான் கொலையாளி என்று துப்பு கிடைக்க, அவளை பிடிக்க துரத்தும்போது அவளும் கொல்லப்படுகிறார். அதனை தொடர்ந்துள்ள தீவிர விசாரணையில் கொலையாளி சிக்க, அந்த கொலையாளி யார் என்று தெரிய வரும்போது பெரிய ஆச்சர்யம்!

படம் பற்றிய அலசல்

அடுத்து என்ன என்பதை சிறிதும் யூகிக்க முடியாத வகையிலும், பல திருப்பங்களுடனும் பரபரவென்று போகிற விதமாக ஒரு திரைக்கதையை அமைத்து, யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸுடன் காளிதாஸை இயக்கியிருக்கிறார் ஸ்ரீசெந்தில். இரண்டு போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இன்வெஸ்டிகேஷன் கதை! அதை ஆவேசமான சண்டை காட்சிகள் துரத்தல்கள் போன்ற வழக்கமான எந்த கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்லும் விதமாக படத்தௌஇ நேர்த்தியாக இயக்கியுள்ளார் ஸ்ரீசெந்தில்.

ஒரு பக்கம கடமை, இன்னொரு பக்கம் கடமை காரணமாக மனைவியை கவனிக்க முடியாத குற்ற உணர்வில் தவிக்கும் போலீஸ் அதிகாரி காளிதாஸ் கதையுடன் பயணிக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதையில் பரத் வீட்டில் குடியருக்க வரும் பப்பு (ஆரவ் கண்னதாசன்) சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்புபடியாக அமையாதது, ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகள் போன்ற சில குறைகள் இருந்தாலும் படத்தை இறுதி வரையிலும் படு த்ரில்லிங்காக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். படத்தின் விறுவிறுப்பான பயணத்திற்கு விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஒரு பக்கம் பலம் தருவதோடு அவரது இசையில் அமைந்துள்ள பாரதி பாடல் உட்பட அனைத்து பாடல்களும் இனிய சுகத்தை தருகிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்களும் காளிதாஸுக்கு கை கொடுத்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு பக்கம் கடமை உணர்வு, இன்னொரு பக்கம் மனைவியை கவனிக்க முடியாத குற்ற உணர்வு என இரண்டு விஷயங்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும் போலீஸ் அதிகாரியாக பரத் சிறப்பாக நடித்துள்ளார். பரத்தின் தோற்றமும், பாடி லாங்வேஜும் ஒரு நிஜ போலீஸ் அதிகாரியை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட பரத் என்ற நடிகரை நாம் மறந்து விட்ட நிலையில் அவருக்கும் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பரத்தின் மனைவியாக வரும் அன் ஷீத்தலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளா. கணவரிடம் எரிந்து விழும்போதும், விரகதாபத்தில் ஏங்கும்போதும், நண்பராக வரும் ஆரவ் கண்ணதாசனுடன் நெருங்கி பழகும்போதும் என நடிப்ப்ல் பன்முகம் காட்டி நடித்திருக்கிறார் அன் ஷீத்தல். பரத், அன்ஷீத்தல் வீட்டின் மொட்டை மாடியில் குடியிருக்கும் இளைஞராக வரும் ஆரவ் கண்ணதாசன் சம்பந்தபட்ட காட்சிகள் நம்பும்படியாக அமையவில்லை என்றாலும் நடிப்பை பொறுத்தவரை குறை வைக்கவில்லை ஆரவ். உயர் போலீஸ் அதிகாரி ஜார்ஜாக வரும் சுரேஷ் சந்திரமேனன், அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி, அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார். இவர்களுடன் படத்தில் நடித்திருக்கும் தங்கதுரை, பிரியதர்ஷினி, அம்மு ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.விறுவிறுப்பான திரைக்கதையும், யூகிக்க முடியாத கிளைமேக்ஸும்

2 பரத், அன்ஷீத்தல், சுரேஷ் மேனன்

3.இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.நம்பகத்தன்மை இல்லாது பயணிக்கும் ஆரவ் கண்ணதாசன் கேரக்டர்

2.ஒரு சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்…

கொலையாளி இவராயிருக்குமோ, அவராயிருக்குமோ என்று படத்தின் இறுதிவரையிலும் சஸ்பென்ஸுடன் கொண்டு சென்று, நாம் எதிர்பார்க்காத ஒருவரை கொலையாளியாக்கி சித்தரித்துள்ள இந்த ‘காளிதாஸ்’ த்ரில்லர் ரக பட ரசிகர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது.

ஒரு வரி பஞ்ச்: விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த பக்கா த்ரில்லர் காளிதாஸ்!

ரேட்டிங் :5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;