சாம்பியன் – விமர்சனம்

சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுகம் விஷ்வா, மிருணாளினி, சௌமிகா, நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சாம்பியன்’ எப்படி?

விமர்சனம் 13-Dec-2019 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Suseenthiran
Production:Kalanjiyam Cine Arts
Cast: Vishwa, Manoj Bharathiraja, Mirnalini, Narain
Music: Arrol Corelli
Cinematography: Sujith Sarang
Editor: Thiyagu

கதைக்களம்

இறந்துபோன மனோஜ் பாரதியின் மகன் விஷ்வா. கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய மனோஜ் பாரதியை போலவே விஷ்வாவுக்கும் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் அதிகம்! தனது கணவர் மனோஜ் பாரதியை போன்று தனது மகன் விஷ்வாவும் கால்பந்தாட்டத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விஷ்வாவை கால்பந்தாட்டம் விளையாட அனுமதிக்க மறுக்கிறர் அவரது அம்மா வாசவி! ஆனால் தந்தையின் கனவை நிறைவேற்ற தாய்க்கு தெரியாமல் கால்பந்தாட்டம் ஆடுகிறார் விஷ்வா. இந்திய அளவில் கால்பந்தாட்டம் ஆடி பெரிய ப்ளேயராக வேண்டும் என்று நினைக்கும் விஷ்வா, அதற்காக மனோஜ் பாரதியின் நண்பரும், ஃபுட்பால் விளையாட்டு பயிற்சியாளருமான நரேனிடம் பயிற்சிபெற செல்லும் நிலையில் விஷ்வாவுக்கு தனது தந்தை விபத்தில் இறக்கவில்லை என்றும் அது திட்டமிட்ட கொலை என்றும் தெரிய வருகிறது. இதனால் கோபமுறும் விஷ்வா, கால்பந்தாட்டத்தை மறந்து தன் தந்தயை கொலை செய்தவரை பழி வாங்க துடிக்கிறார். இறுதியில் விஷ்வா தந்தையை கொன்றவரை பழி வாங்கினாரா? பெரிய ஃபுட்பால் ப்ளேயராகி தனது தந்தையின் கனவை நிறிவேற்றினாரா? என்பதே ‘சாம்பியனி’ன் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

வட சென்னை பகுதியில் நடக்கும் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து, அதில் காதல், செண்டிமெண்ட், அடிதடி, ஆக்‌ஷன் என்று கலந்து ‘சாம்பிய’னை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். கால்பந்தாட்டத்தில் முன்னேற வேண்டிய ஒரு திறமையான இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசத்தாலும், பழி வாங்துல்களாலும் பாதை மாறி பயணிக்கிறது என்ற கருத்தை சொல்ல வந்துள்ளது ‘சாம்பியன்’. ஃபுட்பால் விளையாட்டை பற்றிய விளக்கங்களுடன் சுவாரஸ்யமாக துவக்கும் படம், பிறகு ஃபுட்பால் விளையாட்டை ஓரம் கட்டி வைத்துவிட்டு ஹீரோ தன் தந்தையை கொன்றவரை பழிவாங்க களத்தில் குதிப்பதிலிருந்து வேறு ஒரு பாதையில் பயணிப்பதால் சுவாரஸ்யம் குறைந்து இது ஸ்போர்ட்ஸ் படமா இல்லை பழி வாங்கும் கதையா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திறமை இருந்தாலும் தான் நினைக்கும் இலக்கை அடைய வேண்டுமானால் அதற்கு தகுந்த ஊக்கமும் சூழ்நிலையும் அமைய வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலியின் இசை, சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, தியாகுவின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்கள் கை கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் விஷ்வா, கால்பந்தாட்ட காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடிப்பில் புதுமுகம் மாதிரி தெரியவில்லை. ஆனால் எமோஷ்ன் காட்சிகளிலும் அடிதடி காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஃபுட்பால் விளையாட்டில் சிறந்தவராக வரவேண்டும் என்று விஷ்வாவை ஊக்கப்படுத்துபவராகவும், விஷ்வாவை காதலிப்பவராகவும் வரும் சௌமிகா, விஷ்வாவின் தோழியாக வரும் மிருணாளினி, ஃபுட்பால் கோச்சாக வரும் நரேன் ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். வில்லனாக வரும் ‘ஸ்டன்’ சிவாவின் தோற்றமும், நடிப்பும் மிரட்டல் ரகம்! இவர்கள் தவிர படத்தில் வரும் ஏனைய கேரக்டர்களில் நடித்திருப்பவர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.முதல் பாதி

2.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.இரண்டாம் பாதி

2.கதை ஃபுட்பால் விளையாட்டிலிருந்து வேறு ரூட்டில் பயணிப்பது…

மொத்தத்தில்..

சுசீந்திரன் இதற்கு முன் இயக்கிய ஸ்போர்ட்ஸ் படங்களான ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ முதலான படங்களில் இருந்த நேர்த்தியான திரைக்கதை அமைப்பும், விறுவிறுப்பான ஆட்டமும் இப்படத்தில் மிஸ்ஸிங்! இருந்தாலும் ஒரு இளைஞன் நினைத்த இடத்தை அடைய வேண்டுமானால் அதற்கு அவனுக்கு தேவையான ஊக்கமும், சூழ்நிலையும் அமைய வேண்டும் என்ற கருத்தை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காது!

ஒரு வரி பஞ்ச் : பந்துடன் பகையும் இணந்து ஆடும் ஆட்டம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;