ஜடா – விமர்சனம்

குருநாதருக்காக கதிர் ஆடும் ‘செவன்ஸ்’ ஆட்டம்!

விமர்சனம் 7-Dec-2019 3:14 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Kumaran
Production: The Poet Studios
Cast: Kathir, Roshni Prakash, Yogi Babu & ‘Aadukalam’ Kishore
Music: Sam CS
Cinematography: AR Soorya
Editor: Richard Kevin A

மாறுபட்ட கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் கதிர் நடிப்பில் வெளியாகியுள்ள கால்பந்தாட்டம் பற்றிய படம் ‘ஜடா’. அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜடா’வின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

சென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் கதிர். இவரை எப்படியாவது தேசிய அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார் ‘கோச்’ அருண் அலெக்சாண்டர். இந்நிலையில் சென்னையில் 10 வருங்களுக்கு பிறகு நடக்க இருக்கும் ‘செவன்ஸ்’ எனும் விதிகள் இல்லாமல் விளையாடும் கால்பந்தாட்டத்தில் விளையாட முடிவு செய்கிறார் கதிர். கை, கால்களை கூட இழக்கக் கூடிய விதமாக ஆடும் இந்த ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கதிரின் பயிற்சியாளர் அருண் அலெக்சாண்டர் எடுத்துக் கூறியும், கால்பந்தாட்டத்தில் தனது முதல் குருவாக இருந்து இறந்துபோன கிஷோருக்காக செவன்ஸ் ஆட முடிவு செய்கிறார் கதிர். இதனை தொடர்ந்து சென்னையில் செவன்ஸ் ஆட்டம் ஆடிவந்த நிலையில், ஒரு சில போலீஸ் பிரச்சனைகளால் அரை இறுதி ஆட்டமும் இறுதி ஆட்டமும் சாத்தான்குளத்திற்கு இடம் பெயர்கிறது. இறுதி ஆட்டத்துக்காக சாத்தான்குளத்துக்கு செல்லும் கதிர் மற்றும் அவரது அணியினருக்கு அங்கு பல்வேறு மர்மங்கள் நிறைந்த அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது! அந்த மானுஷ்ய சம்பவங்கள் என்ன? அந்த சம்பவங்களை எதிர்கொண்டு கதிர் அணியினரால ஆட்டத்தில் பங்கு கொண்டு வெல்ல முடிந்ததா என்பதே மீதி கதை!

படம் பற்றிய அலசல்

கால்பந்தாட்டத்தில், அதிகம் யாருக்கும் தெரியாத ‘செவன்ஸ்’ என்ற ஆட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் குமரன். படத்தின் இடைவேளை வரை செவன்ஸ் ஆட்டத்தை மையப்படுத்தி சுவாரஸ்யப்படுத்திய இயக்குனர் குமரன், இடைவேளைக்கு பிறகு விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாத மர்மம், அமானுஷ்யம் என்று வேறு ஒரு ட்ராக்கில் கதையை பயணிக்க வைத்து இயக்கிய விதம் சுவார்ஸ்யத்தை தரவில்லை. முதல் பாதி ஏற்படுத்திய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்திருந்தால் ‘ஜடா’வின் ஆட்டம் செமையாக அமைந்திருக்கும். ஸ்போர்ட்ஸ் படங்கள் என்றால் அந்த விளையாட்டுடன் படம் பார்ப்பவர்களும் ஒன்றிப் போய் பயணிப்பது மாதிரியான உணர்வை தர வேண்டும். ஆனால் அது இந்த படத்தில் ரொம்பவும் மிஸ்ஸிங்! முதல்பாதி திரைக்கதையில் கதிரும் அவரது அணியினரும் எதிர் அணியினரை எதிர்த்து ஆடும் ஆட்டத்தில் இருந்த எனர்ஜியையும் விறுவிறுப்பையும் இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்திருந்தால் ‘ஜடா’ ஸ்போர்ட்ஸ் பட வரிசையில் தனி இடம் பிடித்திருக்கும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஏ.ஆர்.சூர்யா, இசை அமைத்துள்ள சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு செய்துள்ள ரிச்சர்ட் கெவின் ஆகியோரது பங்களிப்பு கதைக்கு தேவையான பங்களிப்பு செய்திருப்பதால் அது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

கால்பந்தாட்ட வீரராக வரும் கதிர் எப்போதும் தான் ஏற்கும் கேரக்டருக்காக நிறைய மெனக்கெடுவார். அந்த மெனக்கெடல் இந்த படத்திலும் பார்க்க முடிகிறது. ஆட்டத்தில் ஸ்கோர் செய்யும் கதிர், காதல் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கவனத்தை செலுத்த வேண்டும். கதிரின் காதலியாக ஒரு பாடல் மற்றும் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் ரோஷினி பிரகாஷ் நடிப்பை பொறுத்தவரை குறை வைக்கவில்லை. வில்லனாக வரும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தோற்றத்தில் மிரட்டியுள்ளார். மகனுக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட அனுமதி கிடைக்காத காரணத்தால் கிஷோரை பழிவாங்கும் காட்சியில் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார். கதிர் கூட சக கால்பந்தாட்ட வீரராக வரும் யோகி பாபு காமெடிக்கும், கோல் அடிக்கவும் உதவியிருக்கிறார். செவன்ஸ் ஆட்டத்தில் காலை இழந்த கால்பந்தாட்ட வீரராக வரும் லிஜீஷ் சம்பந்தப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள் கவனம் பெறுகிறது. கால்பந்தாட்ட பயிற்சியாளர்களாக வரும் கிஷோர், அருண் அலெக்சாண்டர் ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.முதல் பாதி

2.கதிர்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.பாதை மாறி பயணிக்கும் இரண்டாம் பாதி திரைக்கதை

2.இறுதி ஆட்டத்தில் கூட போதுமான விறுவிறுப்பும் பரபரப்பும் இல்லாதது…

மொத்தத்தில்…

கால்பந்தாட்டத்திலுள்ள ‘செவன்ஸ்’ ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஒரு சில குறைகள் தடுமாற்றங்கள் இருந்தாலும் அதிகம் யாருக்கும் தெரியாத ‘செவன்ஸ்’ ஆட்டத்தை பற்றி விரிவாக சொல்ல வந்துள்ள இப்படத்தை வரவேற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : குருநாதருக்காக கதிர் ஆடும் ‘செவன்ஸ்’ ஆட்டம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;