தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

இந்த காலத்துக்கு தேவையான கருத்தை கூறும் ‘ராசி’யான படம்!

விமர்சனம் 6-Dec-2019 5:37 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sanjay Bharathi
Production: Sree Gokulam Movies
Cast: Harish Kalyan, Digangana Suryavanshi, Reba Monica John, Munishkanth, Yogi Babu & Renuka
Music: Ghibran
Cinematography: PK Varma
Editor: Kubendran

ரசிகர்களிடம் கவனம் பெற்ற ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம், இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகமாகும் படம் என பல்வேறு சிறப்புக்களுடன் வெளியாகியுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ எப்படி?

கதைக்களம்

தனது இளம் வயதிலேயே தனது அப்பாவை இழக்கிறார் படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண்! அப்பா இறக்க காரணம், ஜாதக பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டதால் தான் என்ற விவரம் தனது தாத்தா மூலம் தெரிய வரும் ஹரீஷ் கல்யாணுக்கு அதன் பிறகு ஜாதகம் மீது பெரும் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்நிலையில் ஹரீஷ் கல்யாணுக்கு பெண் தேட, வேறு மொழி பேசும், கன்னி ராசி பெண் ஒருவர்தான் ஹரீஷ் கல்யாணுக்கு மனைவியாவார் என்று ஜோதிடர் சொல்கிறார். இதனை தொடர்ந்து பேண் தேடும் படலம் தொடர, ஹரீஷ் கல்யாண் தனது முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜானின் திருமணத்திற்கு பெங்களூர் செல்ல, அங்கு ரெபா மோனிகாவின் தோழியும் வானவியல் ஆராய்ச்சியாளருமான டிகங்கனா சூர்யவன்ஷியை சந்திக்கிறார்! முதல் சந்திப்பிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் துவங்கி, நெருங்கி பழகவும் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹரீஷ் கல்யாண் டிகங்கனாவிடம் ராசி என்ன எனப்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறர். ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட டிகங்கனா தனது ஒரே லட்சியம் செவ்வாய் கிரகத்துக்கு போவதுதான் என்றும், எனக்கு காதல், கல்யாணம், ஜாதகம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றும் குண்டை தூக்கி போட, அதிர்ச்சி அடையும் ஹரீஷ் கல்யாண் அதன் பிறகு என்ன செய்தார் என்பதே ‘தனுசு ராசி நேயர்களே”யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

ஜோதிடம், ராசி, ஜாதகப் பொருத்தம், செவ்வாய் தோஷம் போன்ற விஷயங்கள் மீதுள்ள நம்பிக்கையால், திருமணம் கை கூடாமல் அல்லல்படும் ஒரு இளைஞரின் கதையை சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையாக்கி இயக்கி ரசிக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி! அதிகமாக யாரும் தொடாத ஒரு விஷயத்தை கையிலெடுத்த இயக்குனர் சஞ்சய் பாரதி, அதை இளம் வயதினர் ஏதிர்பார்க்கும் எல்லா ஜனரஞ்சக விஷயங்களுடனும், நல்ல ஒரு மெசேஜுடனும் தந்துள்ளார்!

சினிமா நடிகராக வரும் ‘யோகி’ பாபு ஹரீஷ் கல்யாண் சம்பந்தப்பட்ட விஷயங்களை தனது பாணியில் நமக்கு விளக்கி கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை யுக்தி ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பான நெருங்கிய உறவு காட்சிகள், அடல்ட் காமெடி விஷயங்கள் குடும்பத்தினருடன் வந்து படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதை தவிர்த்திருக்கலாம். படத்தின் ஜாலியான கதைப் பயணத்திற்கு ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது. அதைப் போல பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு, குபேந்திரனின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்களும் குறையில்லாத பங்களிப்பு செய்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற ஹரீஷ் கல்யாண், இப்படத்தின் மூலம் மேலும் கவனம் பெறும்படி அதிலும் இளம் பெண்களிடம் கவனம் அதிக கவனம் பெறும்படி எல்லா விஷயங்களிலும் அதகளம் பண்ணியிருக்கிறார். கதையின் நாயகியாக வரும் அறிமுகம் டிகங்கனா சூர்யன்வன்ஷி அழகு, காதல், கவர்ச்சி, ஆட்டம், நடிப்பு என்று எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவதற்கான வாய்ப்புண்டு! ஹரீஷ் கல்யாணின் முன்னாள் காதலியாக வரும் ரெபா மோனிகா ஜானின் துறுதுறுப்பும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது. ஹரீஷ் கல்யாணின் பிரியாணி பிரியம் கொண்ட மாமாவாக வரும் முனீஸ்காந்த், மற்றும் நடிகராக வரும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும் அவர்களது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும்விதமாக அமைந்துள்ளது. இவர்களுடன் ஜோதிடராக பாண்டியராஜன், ஹரீஷ் கல்யாணின் அம்மாவாக ரேணுகா, தாத்தாவாக சங்கிலி முருகன், மற்றும் மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பலம்

1.கதைக்களம், இயக்கம்

2.ஹரீஷ் கல்யாண், ரெபா மொனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்ஷி, யோகி பாபு ஆகியோரின் பங்களிப்பு

3.மெசேஜ்

பலவீனம்

1.முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகள்

2.பெரிதாக கவனம் பெறாத பாடல்கள்

மொத்தத்தில்…

ஜோதிடத்தில் ந்ம்பிக்கை வைத்து வாழ்க்கையை பாழாக்காதீர்கள் என்றும், சாதிக்க நினைக்கும் பெண்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் என்றும் கருத்தை சொல்ல வந்துள்ள இப்படம் இந்த காலத்து இளசுகளுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது!

ஒருவரி பஞ்ச் : இந்த காலத்துக்கு தேவையான கருத்தை கூறும் ‘ராசி’யான படம்!

ரேட்டிங் : 5/10

#DRN #DhanusuRaasiNeyargale #DhanusuRaasiNeyargaleMovieReview #SanjayBharathi
#DiganganaSuryavanshi #RaizaWilson #RebaMonicaJohn #Ghibran #MasoomShankar #SreeGokulamMovies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;