இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

ஆயுதம் இல்லா உலகிற்கான அறைகூவல்!

விமர்சனம் 5-Dec-2019 8:24 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Athiyan Athirai
Production: Neelam Productions
Cast: Attakathi Dinesh, Anandhi, Riythvika, Lijeesh, John Vijay, Ramesh Thilak, G. Marimuthu and Munishkanth
Music: Tenma
Cinematography: Kishore Kumar
Editor: Selva RK

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. பா.ரஞ்சித்தின் சிஷயர், அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள ‘குண்டு’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

காயிலான் கடையில் (பழைய இரும்பு கடை…) லாரி ஓட்டுனராக வேலை செய்பவர் ‘அட்டகத்தி’ தினேஷ். கடலில் இருந்து கடற்கரை ஒதுங்கிய ‘குண்டு’ ஒன்றை போலீஸ் கைபற்றுகிறது. அந்த குண்டை குடிக்கார பையல் ஒருவர் திருடி சென்று தினேஷ் வேலை செய்யும் காயிலான் கடையில் விற்று விடுகிறார். தினேஷ் அந்த குண்டு உட்பட்ட பழைய இரும்பு சாமான்களை லாரியில் ஏற்றி பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்கையில், அந்த குண்டை கைபற்ற ஆயுத வியாபரி ஜான் விஜய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரி லிஜீஷ் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். அதே நேரம் போலீஸ் ரகசியமாக கையாண்டு வரும் அந்த குண்டு பற்றிய நிஜ விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் பத்திரிகையாளரும், சமூக போராளியுமான ரித்விகா! ஒரு கட்டத்தில் தான் ஓட்டி சென்று கொண்டிருக்கும் லாரியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்க கூடிய குண்டு இருப்பதை அறிந்து பதறி போகும் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார்? அந்த குண்டை கைபற்ற தரத்தி வந்தவர்களால் குண்டை கைபற்ற முடிந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கான விடைகளை தருகிறது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

படம் பற்றிய அலசல்

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த நிலையில் வெடிக்காத நிலையில் இருந்த ஏராளமான வெடி குண்டுகளை கடலில் மூழ்கடிக்கப்பட, காலப்போக்கில் அந்த குண்டுகள் நாட்டின் பல்வேறு கடற்கரைகளில் ஒதுங்கி, மனித உயிர்களை பலி வாங்கியது. இந்த விஷயத்தையும், காயிலான் கடைகளில் எந்த பாதுகாப்பும், எந்த அரசாங்க உதவிகளும் இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ‘ஆயுதம் இல்லா உலகை படைப்போம்’ என்ற கருத்தையும் சொல்ல வந்துள்ளார் இப்படத்தை இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை!

அறிமுகம் அதியன் ஆதிரை எடுத்துக்கொண்ட கதையும், சொல்ல வந்த கருத்துக்களும் வரவேற்க கூடியதே! ஆனால் மேற்சொன்ன விஷயங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்ட திரைக்கதையில் நேர்த்தி இல்லை! ஆயுத வியாபாரியாக வரும் ஜான் விஜய் கேரக்டர், தினேஷை, டீச்சராக வரும் ஆனந்தி காதலிப்பதால் வரும் கௌரவ பிரச்சனைகள் முதலான விஷயங்கள் கதையோடு ஒட்டவில்லை. இதனால் சொல்ல வந்த கதை ஒரே இலக்கை நோக்கி பயணிக்காமல் திசை மாறி பயணிப்பது மாதிரியான உணர்வையே தருகிறது. இருந்தாலும் காயிலான் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வெடிக்காத குண்டுகளால் உள்ள பேராபத்துக்கள், ஆயுதம் இல்லா உலகை உருவாக்குவதன் அவசியம் முதலான புதிய விஷயங்களை தனது முதல் படத்தின் மூலம் வலியுறுத்தி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரையின் முயற்சி பாராட்டும்படி அமைந்துள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் பதற்றத்துடன் பயணிக்கும் திரைக்கதையில் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள், இரண்டு பாடல்கள் ரிலாக்ஸ் தரும் விதமாக அமைந்துள்ளது. சொல்ல வந்த கதையை நேர்த்தியான கதாபாத்திர வடிவமைப்பின் மூலமாகவும் யதாரத்தமாகவும் தர முயற்சித்துள்ள இயக்குனரின் எண்ணங்களுக்கு சரியாக ஈடு கொடுத்து காட்சிகளை படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். அதைப் போலவே அறிமுக இசை அமைப்பாளர் தென்மாவின் பின்னணி இசை, செல்வாவின் படத்தொகுப்பு, தா.ராமலிங்கத்தின் கலை இயக்கம் ஆகியவையும் சிறப்பாக அமைந்து ‘குண்டு’க்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

‘அட்டகத்தி’ தினேஷுக்கு மற்றுமொரு நல்ல படம் கிடைத்திருக்கிறது. அப்பாவின் நினைவுகளுடன் காயிலான் கடை லாரி டிரைவராக வரும் தினேஷ், தொழிலில் உள்ள பிரச்சனைகளை, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த பெண்ணை காதலிக்க, அதனால் வந்த பிரச்சனைகளை சந்திக்கும் வெள்ளந்தியான இளைஞனின் மேனரிசங்களை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளார். தினேஷ் காதலிக்கும் டீச்சராக வரும் ஆனந்தியும் தனது இயல்பான நடிப்பால் வசீகரிக்கிறார். காயலான் கடை அதிபராக வரும் மாரிமுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். லாரியில் தினேஷுக்கு உதவியாளராக வரும் முனீஸ்காந்த், போலீஸ் அதிகாரியாக வரும் லிஜீஷ், ஆயுத வியாபாரியாக வரும் ஜான் விஜய், சமூக போராளியாக வரும் ரித்விகா, குடிக்கார இளைஞராக வரும் ஹரி கிருஷ்ணன், கயலான் கடை தொழிலாளியாக வரும் ரமேஷ் திலக் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் அதியன் ஆதிரை!

பலம்

1.புதிய கதைக்களம்

2.டெக்னிக்கல் விஷயங்கள்

3.சொல்லப்பட்ட மெசேஜ்

பலவீனம்


1.திரைக்கதையில் நேர்த்தி இல்லாதது..

2.கதையோடு ஒட்டாமல் பயணிக்கும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் அதியன் ஆதிரை காயிலான் கடையில் வேலை பார்த்தவர் என்பதால் அவர் சந்தித்த சில விஷயங்களை வைத்து ஒரு புதிய களத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மாறுபட ஒரு அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்!

ஒருவரி பஞ்ச் : ஆயுதம் இல்லா உலகிற்கான அறைகூவல்!

ரேட்டிங் : 5.5/10

#IrandamUlagaporinKadaisiGundu # PaRanjith #AthiyanAadhirai #NeelamProduction # Dinesh #IUKGFromDecember6th #Tenma #IUKGMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;