எனை நோக்கி பாயும் தோட்டா - விமர்சனம்

குறி தப்பிய தோட்டா!

விமர்சனம் 30-Nov-2019 4:55 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Gautham Menon
Production: Ondraga Entertainment & Vels Film International
Cast: Dhanush, Megha Akash, Sasikumar,Senthil Veerasamy & Sunaina
Music: Darbuka Siva
Cinematography: Jomon T. John, Manoj Paramahamsa & S.R. Kathir
Editor: Praveen Antony

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், சுனைனா முதலானோர் நடித்து பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி நேற்று வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் பாய்ச்சல் எப்படி? இருக்கிறது?

கதைக்களம்

சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவன் தனுஷ்! இவர் படிக்கும் கல்லூரியில் ஒரு படத்தின் ஷூட்டிங் நடக்க, அந்த படத்தில் நடிக்கும் நடிகை மேகா ஆகாஷுக்கு தனுஷை கண்டதும் அவர் மீது காதல் வருகிறது! அதனை தொடர்ந்துள்ள சந்திப்பில் தனுஷுக்கும் மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது! இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தனுஷ், தனது அப்பா, அம்மா, தங்கை வசித்து வரும் தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு மேகா அகாஷை அழைத்து சென்று அவர்களிடம் தான் மேகா ஆகாஷை திருமனம் செய்ய இருப்பதை சொல்கிறார். தனுஷின் குடும்பத்தினரும் அதற்கு சம்மதிக்கும் நிலையில், மேகா அகாஷை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் அவரது கார்டியனான செந்தில் வீராசாமி பொள்ளாச்சிக்க்கு வந்து மேகா ஆகாஷை அழைத்துச் செல்கிறார். நான்கு வருடங்கள் ஓடிய நிலையில் தனுஷிற்கு மும்பையிலிக்கும் மேகா ஆகாஷிடமிருந்து ஃபோன் வருகிறது. மேகா ஆகாஷின் அழைப்பின் பேரில் அவரை பார்க்க தனுஷ் மும்பை செல்ல, அங்கு தனுஷின் வாழ்க்கையையே புரட்டி போடுகிற மாதிரி சில விஷயங்கள் நடக்கிறது! அந்த விஷயங்கள் என்ன என்பதே படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வரும் காதலித்த பெண், அவருக்கு பின்னால் இருக்கும் ரௌடி, மற்றும் சில வில்லங்க விஷயங்களால் பாதிக்கும் காதலன்… இந்த விஷயத்தை மையப்படுத்திய கதைதான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வும்! அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது வழக்கமான ஸ்டைலில் தந்துள்ளார். மேகா ஆகாஷுக்கு தனுஷை பார்த்ததும் காதல் வருவது, அவரை உடனே திருமனம் செய்ய முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் லாஜிக் இல்லை என்றாலும், தனுஷ், மேகா ஆகாஷ் சம்பந்தப்பட்ட முதல் பாதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

அதன் பிறகு, மேகா ஆகாஷின் அழைப்பின் பேரில் தனுஷ் மும்பை சென்றதும் கதை அடிதடி ஆக்‌ஷன் ட்ராக்கில் பயணிக்க துவங்குகிறது. இரண்டாம் பாதியில் எண்ட்ரியாகும் போலீஸ் அதிகாரியான தனுஷின் அண்ணன் சசிக்குமார், அவருக்கு தனது தம்பி தனுஷ் காதலிக்கும் பெண்தான் மேகா ஆகாஷ் என்று தெரியவந்து இருவரையும் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற அவர் முயற்சிப்பது, அதற்காக சசிக்குமார் மேற்கொள்ளும் போராட்டங்கள், சசிக்குமாரின் பின்னணி என்று எதிர்பாராத சில திருப்பங்களுடன் இரண்டாம் பாதி திரைக்கதை பயணிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி திரைக்கதை நேர்த்தி இல்லாமலும், சிறிதும் லாஜிக் இல்லாமலும், குழப்பத்தை தரும்விதமாகவும் அமைந்திருப்பதால் பெரிய சுவாரஸ்யம் தரவில்லை. படம் முழுக்க தனுஷின் ‘வாய்ஸ் ஓவரில்’ கதை பயணிப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ள விதம் எடுபடவில்லை. இதுபோன்ற குறைகளுடன் பயணிக்கும் இப்படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்து ரசிக்க வைத்திருப்பதில் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஜோமான் டி.ஜான், மனோஜ் பரம்ஹம்சா, எஸ்.ஆர்.கதிர் மற்றும் இசை அமைப்பாளர் தர்புகா சிவா ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தர்புகா சிவா ஏற்கெனவே ஹிட்டான ‘ஒரு வார்த்தை பேச…’ பாடல் உட்பட எல்லா பாடல்களும், பின்னணி இசையும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு!

‘ஒரு ஜோசியர் நான் 90 வயது வரைக்கும் வாழ்வேன்னு சொன்னார். ஆனா நான் செத்துட்டா என் பணம் திரும்ப வேணும்,. இல்லாவிட்டால் அந்த ஜோசியரை தேடிக்கண்டு பிடித்து சாவடிப்பேன்’’ என்று தனுஷின் வாய்ஸ் ஓவரில் துவங்கும் இந்த படத்திலும் தனுஷ் தனது வழக்கமான இயல்பான நடிப்பை வழங்கி தனது கேரக்டரை சிறப்பித்துள்ளார். நடிகையாக வரும் மேகா அகாஷ் அந்த கேரக்டருக்கு பொருந்தி சிறப்பாக நடித்துள்ளார். கார்டியன் என்ற பெயரில் தன்னை ஆட்டிப்படைத்து கொண்டிருப்பவரிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படும் காட்சிகளிலும் மேகா ஆகாஷ் கவனம் பெறும்படியான நடிப்பை வழங்கியுள்ளார். தனுஷின் அண்ணனாக வரும் சசிக்குமார் கேரக்டர் டீட்டெயிலாக அமையவில்லை என்றாலும் நடிப்பை பொறுத்தவரியில் சசிக்குமார் குறை வைக்கவில்லை. மேகா ஆகாஷின் கார்டியனாக வரும் செந்தில் வீரசாமியின் தோற்றமும், நடிப்பும் கச்சிதம். மும்பையில் இருக்கும் தனுஷின் தோழியாக வரும் சுனைனா, தனுஷின் அப்பாவாக வரும வேலா ராமமூர்த்தி, ஒரே ஒரு காட்சியில் வந்து மறைந்து போகும் ராணா என்று எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.தனுஷ்

2.முதல் பாதி

3.இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.படம் முழுக்க வரும் வாய்ஸ் ஓவர்

2.நேர்த்தி இல்லாத திரைக்கதை அமைப்பு

2.சசிக்குமார் கேரக்டர்

மொத்தத்தில்…

கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியாகியுள்ள இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகமே!

ஒருவரி பஞ்ச் : குறி தப்பிய தோட்டா!

ரேட்டிங் : 4/10

#ENPT #EnaiNokiPaayumThota #ENPTMovieReview #Dhanush #GVM #GauthamVasudevMenon #MeghaAkash #DarbukaSiva #VelsFilmInternational #OndragaEntertainment #EscapeArtists

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;