அழியாத கோலங்கள் 2 - விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 -  விமர்சனம்

விமர்சனம் 30-Nov-2019 11:45 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: M.R.Barathy
Production: Valli Cine Arts
Cast: Prakash Raj, Revathy, Archana, Revathy, Mohan Ram, Vijay Krishna Raaj
Music: Aravind Sidhartha
Cinematography: Rajesh K.Nair
Editting: Mu.Kasi Viswanathan

அறிமுக இயக்குனர் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர், ஈஸ்வரி ராவ், மோகன் ராம், விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அழியாத கோலங்கள்-2’ பாலுமகேந்திரா இயக்கத்தில் 1979-ல் வெளியான ‘அழியாத கோலங்கள்’ படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘அழியாத கோலங்கள்-2’ படத்தின் கதை சுருக்கம் வருமாறு….

பிரபலமான இலக்கிய எழுத்தாளர் கௌரி சங்கர் (பிரகாஷ் ராஜ்). இவரது மனைவி சீதா (ரேவதி). கௌரி சங்கருக்கு சகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. இந்த விருதைப் பெற டெல்லி செல்லும் கௌரி சங்கர், அவ்விருதை பெற்றுக்கொண்டு நேராக தனது மனைவிக்கு தெரியாமல் சென்னையிலுள்ள தனது சிநேகிதி மோகனாவை (அர்ச்சனா) பார்க்க வருகிறார். கணவரை இழந்து, தனியாக வசித்து வரும் மோகனா, 24 ஆண்டுகள் கழித்து தன்னை பாரக்க வரும் கௌரி சங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். இரவு உணவுக்குப் பிறகு தங்களது வாழ்க்கை அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள். எழுத்துலகில் தான் பெற்ற எல்லா சிறப்புகளுக்கும் நீதான் காரணம் என்று மோகனாவிடம் சொல்கிறார் கௌரி சங்கர்.

இந்நிலையில் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு கௌரி சங்கர் இறந்து விடுகிறார். பிரபல எழுத்தாளரான கௌரி சங்கர் மோகனா வீட்டில் இறந்த விஷயம் ஊர் முழுக்க பரவ, போலீஸ் மோகனாவை விசாரிக்கிறது! மக்கள் பார்வையில் மோகனா கௌரி சங்கரின் கள்ளக்காதலியாகிறார்! மோகனாவை பார்க்க கௌரி சங்கரின் மனைவி சீதா மோகனா வீட்டுக்கு வருகிறார். அதன பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை!

அடிதடி, குத்துப்பாட்டு, காமெடி டூயட் என்று எந்த கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் நான்கைந்து கதாபாத்திரங்களை வைத்து நட்பையும், காதலையும் மையப்படுத்தி அறிமுக இயக்குனர் எம்.ஆர்.பாரதி திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இப்படம் நிஜ வாழ்வியல் படைப்புகளை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! ஒரு சில காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் அமைந்திருப்பது, ஒரு சில லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை தவிர்த்தால் இந்த ‘அழியாத கோலங்கள்-2’ அழகியலான ஒரு கோலமாகவெ அமைந்துள்ளது என்று சொல்லலாம்!

எழுத்தாளராக வரும் பிரகாஷ் ராஜ், இவரது மனைவியாக வரும் ரேவதி, பிரகாஷ் ராஜின் சிநேகிதியாக வரும் அர்ச்சனா, போலீஸ் அதிகாரியாக வரும் நாசர், டாக்டராக வரும் மோகன்ராம், உள்ளூர் அரசியல் பிரமுகராக வரும் விஜய் கிருஷ்னராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே படத்தில் வாழ்ந்துள்ளனர்.

நட்பையும், காதலையும் ஒருங்கிணைத்து ரசிக்கும்படி இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய விதமாக திரைக்கதையாக்கட்ட இப்படத்திற்கு ராஜேஷ் எம்.நாயரின் ஒளிப்பதிவு, அரவிந்த் சித்தார்த்தாவின் இசை, வைரமுத்து எழுதியுள்ள கருத்துள்ள ஒரு பாடல், மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு ஆகியவையும் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில், நிஜ வாழ்க்கையில் நடக்கக் கூடிய அழகிய நட்பு, காதல் காவியமாக உருவாகியுள்ளது இந்த படம்!

(வழக்கமாக இதுபோன்ற படைப்புகளுக்கு ‘ரேட்டிங்’ வழங்கப்படுவதில்லை. அந்த வரிசையில் இந்த ‘அழியாத கோலங்கள்-2’ படத்திற்கும் ரேட்டிங் தரப்படவில்லை!).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

60 வயது மாநிறம் ட்ரைலர்


;