கே.டி (எ) கருப்புதுரை – விமர்சனம்

கே.டி (எ) கருப்புதுரை – விமர்சனம்

விமர்சனம் 22-Nov-2019 12:30 PM IST Top 10 கருத்துக்கள்

DIRECTION : MADHUMITHA
Cast : MU.RAMASAMY, NAG VISHAL, YOG JEPPI
MUSIC : KARTHIKEYA MURTHY
CINEMATOGRAPHY : MEYYENDIRAN KEMPURAJ
EDITED : VIJAY VENKATARAMANAN
PRODUCED : VIKRAM MEHRA, SIDHARTH ANAND KUMAR

தமிழில் ‘வல்லமை தாராயோ’, ‘கொலை கொலையா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கே.டி.’ திரைக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சிறந்த இயக்குனருக்கான இரண்டு விருதுகள் உட்பட பல விருதுகளை தட்டி வந்துள்ள ‘கே.டி’ எப்படி?

தென்மாவட்டங்களில் ‘தலைக்கு ஊத்தல்’ என சம்பவம் நடப்பதுண்டு! அதாவது படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களுக்கு இளநீரும், நல்லெண்ணையும் கொடுத்து ‘கருணை கொலை’ செய்வது! அந்த விஷயம் தான் இப்படத்தின் மைய கரு!

திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் நினைவிழந்த நிலையில் படுத்த படுக்கையையாக கிடக்கிறார் 80 வயதுடையை கருப்புத்துரை (மு.ராமசாமி). இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்! பல மாதங்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் இவரை கருணை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இந்நிலையில் திடீரென்று சுயநினைவு திரும்பும் கருப்புதுரை, பெத்த பிள்ளைகளே தன்னை கொன்று விட முடிவெடுத்திருப்பதை உணர்ந்து யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அந்த பயணத்தில் ஒரு கோயில் திண்ணையில் படுக்க செல்லும்போது அந்த கோயிலில் அனாதையாக வளர்ந்த 8 வயது குட்டி (நாக் விஷால்) என்ற பையனுக்கும் இவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகிறது. அதன் பிறகு கருப்புதுரைக்காக குட்டியும், குட்டிக்காக கருப்புதுரையும் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது நட்புக்கு குறுக்கே சில பிரச்சனைகளும் உருவாகிறது! அந்த பிரச்சனைகளை இவர்களால் சந்திக்க முடிந்ததா? இருவரது நட்பும் தொடர்ந்ததா என்பதே ‘கே.டி’யின் கதைக்களம்!

இந்த படத்தை இயக்கியிருக்கும் மதுமிதா 8 வயது சிறுவனுக்கும் 80 வயது முதியவருக்கும் இடையிலான நட்பு, பாசத்தை யதார்த்தமாக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். சொத்துக்காக ஆசைப்பட்டும், படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பாவை கவனிக்க முடியாமலும் தவிக்கும் அவரது மகன்களும் மகள்களும் பெற்ற தந்தையை கருணை கொலை செய்து விட முடிவெடுப்பது, இந்த முடிவை கேட்டு, தந்தை வேதனையுடன் தனது வீட்டை விட்டு வெளியேறுவது, அப்படி வெளியேறி செல்கையில் ஒரு அனாதை சிறுவனின் பாசத்துக்கு அடிமையாகி தொடர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையுடன் வாழ்க்கையை நகர்த்துவது என்று நிஜ மனித உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விருதுகள் கிடைத்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை! முதியவராக வரும் கருப்புத்துரைக்குள் இருக்கும் நிறைவேறாத காதல் விஷயத்தையும் ரசிக்கும் படி கதைக்குள் நுழைத்த இயக்குனர் மதுமிதா நம் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் விதமாக ஒவ்வொரு விஷயத்தையும் யதார்த்தம் நிறைந்த காட்சிகளாக தந்து ரசிக்க வைத்துள்ளார். அதில் குறிப்பிடும்படியாக கருப்புதுரைக்கு மட்டன் பிரியாணி என்றால் பிரியம்! அந்த மட்டன் பிரியாணியை வைத்தே முதல் பாதி கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பது பிரமாதம்!

கருப்பு துரையாக நடித்திருக்கும் மு.ராமசாமி, குட்டியாக நடித்திருக்கும் சிறுவன் நாக் விஷால் இந்த கதைக்கு சரியான தேர்வு! ‘ஜோக்கர்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள மு.ராமசாமிக்கு ஈடு கொடுக்கும் விதமாக குட்டியாக வரும் நாக் விஷாலும் யதார்த்தமாக நடித்து கைத்தட்டல்கள் பெறுகிறார். மதுரையை சேர்ந்த நாக் விஷாலுக்கு இது முதல் படமாம்! நம்ப முடியவில்லை! படம் முழுக்க கருப்புத்துரை, குட்டி கேரக்டர்கள் பயணிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் படம் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது. ஆனால் அதை மதுமிதாவுடன் சபரிவாசன் சண்முகம் இணைந்து எழுதியிருக்கும் சுவாரஸ்யம் தரும் வசனங்கள் சரி செய்து விடுகிறது!

முக்கியமான ஒரு கேரக்டரில் யோக் ஜேப்பியும் நடித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை மெய்யேந்திரன் கெம்புராஜ் கவனித்திருக்க, கார்த்திகேய மூர்த்தி இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை விஜய் வெங்கட்ரமணன் கவனித்துள்ளார். இவர்களது பங்களிப்பும் ‘கருப்பு துரை’யின் இயல்பான பயணத்திற்கு துணை புரிந்துள்ளன. ஆனால் இதுபோன்ற ஒரு தரமான படத்துக்கு ‘கே.டி.’என்ற டைட்டில் எதற்கு வைத்தார்கள் என்பது தான் புரியவில்லை!

(வழக்கமாக இதுபோன்ற படைப்புகளுக்கு ‘ரேட்டிங்’ வழங்கப்படுவதில்லை. அந்த வரிசையில் இந்த ‘கே.டி(எ) கருப்பு துரை’க்கும் ரேட்டிங் வழங்கப்படவில்லை).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;