சங்கத்தமிழன் – விமர்சனம்

ஊரையும், மக்களையும் காப்பாற்ற போராடும் சங்கத்தமிழன்!

விமர்சனம் 18-Nov-2019 1:30 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vijay Chandar
Production : Vijaya Productions
Cast : Vijay Sethupathi, Nivetha Pethuraj, Raashi Khanna, Soori
Music : Vivek-Mervin
Cinematography:R. Velraj
Editor: Praveen K. L


விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ், ரவி கிஷன், அஷுதோஷ் ராணா, நாசர், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ எப்படி?

கதைக்களம்

சென்னையில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் முருகன் என்கிற விஜய்சேதுபதி. இந்நிலையில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ரவி கிஷன் மகள் ராஷிகண்ணாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையில் காதல் உருவாகிறது. அதே நேரம் தேனி பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் தொழிலதிபர் ரவி கிஷன், காப்பர் தொழில்சாலை ஒன்றை கட்ட ஏற்பாடு நடக்கிறது. அங்கு காப்பர் தொழில்சாலை அமைந்தால் அது மக்கள் நலனை பாதிக்கும் என்பதால் அந்த தொழில்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் ஊர் மக்கள்! இந்த போராட்டத்தில் விஜய்சேதுபதி தலையிட வேண்டிய கட்டாயம் வருகிறது! அதற்கான காரணம் என்ன? அந்த ஊர் மக்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவு என்ன என்பதை ஃபளாஷ் பேக் காட்சிகளுடன் சொல்லும் படமே ‘சங்கத்தமிழன்’

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே நாம் பார்த்து பழக்கப்பட்ட கதையேயே இயக்குனர் விஜய்சந்தர் ‘சங்கத்தமிழனா’க தந்தள்ளார். அதை காதல், காமெடி, அதிரடி சண்டை காட்சிகள் என்று ஓரளவுக்கு ஜனரஞ்சகமாக தந்துள்ளார். படத்தின் முதல் பாதி, விஜய் சேதுபதி, சூரி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள், விஜய் சேதுபதி ராஷிகண்ணா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் என்று ஜாலியாக பயணிக்கும் திரைக்கதை, தேனி கிராமத்துக்கு நகர்ந்ததும் கொஞ்சம் சூடு பிடித்து விறுவிறுப்பாகிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை படத்தை பார்ப்பவர்களால் எளிதில் யூகிக்கும்படியாக திரைக்கதை அமைந்திருப்பதால் இரண்டாம் பாதி பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை.

ஊரில் தமிழ் ஆகவும் சென்னையில் முருகனாகவும் வரும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்த இயக்குனர் இருவருக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பதை ரசிகர்களுக்கு எளிதாக புரியும்படி விளக்கவில்லை! காப்பர் கம்பெனி வருவதால் மக்களுக்கும் நிலத்துக்கும் ஏற்படும் பிரச்சனைகளை வலியுறுத்தி அமைக்கப்பட்ட திரைக்கதையில் விஜய்சேதுபதியை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்திய இயக்குனர், திரைக்கதை அமைப்பிலும், கேரக்டர் வடிவமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தி இயக்கி இருந்தால் ‘சங்கத்தமிழன்’ மேலும் கவனம் பெற்றிருப்பான்! வேல்ராஜ் ஒளிப்பதிவில் சென்னை மற்றும் தேனி, குற்றாலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை அழகை மேலும் ரசிக்க முடிகிறது. விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை ஒரே இரைச்சல் ரகம்தான்! சில இடங்களில் வசனங்களை மீறிய இரைச்சல் சத்தத்தால் வசனங்கள் புரியவில்லை! படத்தொகுப்பு செய்துள்ள கே.எல்.பிரவீன் படத்தை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

முருகன் தமிழ் என்று இரண்டு மாறுபட்ட கெட்-அப்களில் வரும் விஜய்சேதுபதி அதை ஓரளவுக்கு வித்தியாசப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதி காமெடி, காதல் என்று ரசிக்க வைக்கும் விஜய்சேதுபதி இரண்டாம் பாதியில் அடிதடி சென்டிமென்ட் என்று கவனம் பெறுகிறார். தொழிலதிபர் ரவி கிஷனின் மகளாக வரும் ராஷிகண்ணா, விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளில் கவனம் பெறுகிறார். இரண்டாம் பாதி கிராமத்து ஃபளாஷ் பேக் காட்சியில் வரும் நிவேதா பெத்துராஜுக்கு பரிதாபத்தை அள்ளும் கேரக்டர்! கொஞ்ச நேரமே வந்தாலும் நிவேதா மனதில் இடம் பிடித்து விடுகிறார்! முக்கிய வில்லனாக வரும் ரவி கிஷன், சில இடங்களில் ‘ஓவர் ஆக்டிங்’ செய்திருப்பதை தவிரித்திருக்கலாம். எம்.எல்.ஏ.வாக வரும் அஷுதோஷ் ராணா தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டியுள்ளார். விஜய்சேதுபதியின் அப்பாவாக வரும் நாசரும் தனது அனுபவ ஆற்றலை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளார். இவர்களுடன் கதையில் முக்கியத்தும் இல்லாத கேரக்டர்களில் ‘மைம்’ கோபி, ஸ்ரீமன். சௌந்தர்ராஜா என்று பலர் நடித்துள்ளனர்.

பலம்

1.விஜய்சேபதி

2. ஜாலியாக பயணிக்கும் முதல் பாதி

3.ஒளிப்பதிவு

பலவீனம்

1.எந்த புதிய விஷயங்களும் இல்லாதது!

2.யூகிக்க கூடிய காட்சி அமைப்புகள்

3.பின்னணி இசை

மொத்தத்தில்…

‘சங்கத்தமிழன்’ கதையின் நோக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் அதை ஒரு சில புதிய விஷயங்களையாவது வைத்து சுவாரஸ்யமாக தருவதில் இயக்குனர் விஜய்சந்தர் போதுமான கவனம் செலுத்தவில்லை! அதனால் வழக்கமான ஒரு மசாலா படமாகவே அமைந்துள்ளது ‘சங்கத்தமிழன்’

ஒருவரி பஞ்ச் : ஊரையும், மக்களையும் காப்பாற்ற போராடும் சங்கத்தமிழன்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;