ஆக்‌ஷன் – விமர்சனம்

‘லாஜிக்’கில்லாத அதிரடி ‘ஆக்‌ஷன்’ படம்!

விமர்சனம் 16-Nov-2019 12:30 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sundar C

Production: Trident Arts

Cast: Vishal, Tamannaah, Aishwarya Lekshmi, Akanksha Puri,

Chaya Singh, Ramki, Kabir Duhan Singh & Yogi Babu

Music: Hiphop Tamizha

Cinematography: Dudley

Editor: N. B. Srikanth
‘ஆம்பள’ படத்தை தொடந்து சுந்தர்.சி.யும், விஷாலும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ஆக்‌ஷன்’. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ளதா இந்த ஆக்‌ஷன்?

கதைக்களம்

தமிழக முதலமைச்சராக இருக்கும் பழ கருப்பையாவின் மகன்கள் ராம்கி, விஷால். இவர்களில் ராம்கி துணை முதல்வராக இருக்கிறர். விஷால் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ராம்கியின் நண்பரும், தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன் தமிழக அரசுத்திட்டம் ஒன்றை செயல்படுத்த, 4000 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி விடுகிறார். இந்நிலையில் பழகருப்பையா தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய கட்சி தலைவர் ஒருவரும் கலந்துகொண்டிருந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது. இதில் தேசிய கட்சி தலைவர், விஷால் திருமணம் செய்யவிருந்த ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் பலியாவதோடு விஷாலின் அண்ணன் ராம்கியும் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்படுகிறார்! இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இராணுவ அதிகாரியான விஷாலும் இன்னொரு இராணுவ அதிகாரியான தமன்னாவும் களத்தில் இறங்க, பாகிஸ்தானில் இருக்கும் மாலிக் என்ற படு பயங்கர தீவிரவாதிதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை கண்டறிகிறார்கள்! இதனை தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள மாலிக்கின் கோட்டைக்குள் எப்படி விஷாலும், தமன்னாவும் நுழைந்து அவனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை வழங்குகிறர் என்பதே ‘ஆக்‌ஷன்’ படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

இதுவரை காமெடி குடும்ப கதைகளை கையிலெடுத்து இயக்கி வந்த சுந்தர்.சி., விஷாலை வைத்து மிக ஸ்டைலான ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்தை தரவேண்டும் என்றும் இந்த படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார். ஆனால் சுந்தர்.சி. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மெனக்கெட்டது மாதிரி, கதை, திரைக்கதைக்காக மெனக்கெட்டது மாதிரி தெரியவில்லை. அதிரடி சண்டை காட்சிகளுடன் லண்டன் அசர்பைஜான் பாகிஸ்தான் என்று பயணிக்கும் கதையில் வரும் திருப்பங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதை நம்மால் எளிதில் யூகிக்க முடிவது, மாலிக் என்ற தீவிரவாதியாக வரும் கபீர் துஹான் சிங் கேரக்டரை வலுவாக அமைக்காதது போன்றவை திரைக்கதையின் பெரிய பலவீனம். அதைப் போல பாகிஸ்தான் போன்ற ஒரு எதிரி நாட்டுக்குள் எளிதாக நுழைந்து, அங்கு அவர்களது தொழில்நுட்ப விஷயங்களை எளிதாக ஹேக் செய்வது போன்ற விஷயங்களில் நம்பகத்தன்மை இல்லாதது என்று பலவேறு பலவீனங்களுடன் திரைக்கதை பயணிப்பதால், ஆக்‌ஷன் எதிர்பார்த்த சுவாரஸ்த்தை தரவில்லை. இப்படத்திற்காக பரபரப்பான அதிரடி சண்டை காட்சிகளை அமைத்த அன்பறிவ், மற்றும் அந்த காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளர் டட்லி ஆகியோரது பங்களிப்பு இப்படத்தில் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியின் பின்னணி இசையும், ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்புக்கு மேலும் துணை புரிந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

முழுக்க முழுக்க ஆக்‌ஷனோடு பயணிக்கும் இந்த படத்தில் விஷால் ரொம்பவும் மெனக்கெட்டு, ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியும் வெளிப்படுத்துகிறது. வெறும் காதல் காட்சிகளுக்கு பயன்படும் நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் அதிரடி ஆக்‌ஷனிலும் அதகளம் பண்ணியிருக்கிறார் தமன்னா. பேயிங் கில்லராக வரும் அகன்ஷா புரி கொஞ்ச நேரமே வந்தாலும் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் கிளாமரில் அதிரடி காட்டி ரசிக்க வைத்துள்ளார். விஷாலின் மைத்துனராக வந்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கும் ஷாரா, விஷால் விரும்பும் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் அண்ணனாக வரும் ராம்கி, அண்ணியாக வரும் சாயாசிங், முதல் அமைச்சராக வரும் பழ கருப்பையா, உயர் இராணுவ அதிகாரியாக வரும் சயாஜி ஷிண்டே, மாலிக்காக வரும் கபீர் துஹான் சிங் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டருக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.கம்ப்யூட்டர் ஹேக்கராக வரும் யோகி பாபு ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் என்றாலும் சிரிக்க வைக்கிறார்.

பலம்

1.விஷால்,தமன்னா

2.ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு

3.அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள்

பலவீனம்

1.லாஜிக் விஷங்கள்

2.நம்பகத்தன்மை இல்லாத திரைக்கதை

மொத்தத்தில்…

இந்தியாவுக்கு எதிராக செயல்ப்படும் ஒரு தீவிரவாதியை கண்டுபிடித்து அழிக்க ஒரு இராணவ அதிகாரி மேற்கொள்ளும் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : ‘லாஜிக்’கில்லாத அதிரடி ‘ஆக்‌ஷன்’ படம்!

ரேட்டிங் : 4.5/10

#Action #ActionFromToday #Vishal #Tammannaah #AkankshaPuri #AishwaryaLekshmi #SundarC #HiphopThamizhaAdhi #TridentArts #ActionMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;