தவம் – விமர்சனம்

நிஜ காதலுக்கு நியாயம் சொல்லும் படம்!

விமர்சனம் 9-Nov-2019 5:43 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: R.Vijay Aanand, A.R.Sooriyan
Production: Asif Film International
Cast: Seemaan, Vasi, Poojaasri, Bose Venkat, Vijay Aanand
Music: Sreekanth Deva
Cinematography: Velmurugan
Editor: S.P.Ahammed

ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் ஆகியோர் இயக்கத்தில் சீமான், வசி, புஜாஸ்ரீ, போஸ் வெங்கட், சிங்கம் புலி, சந்தானபாரதி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தவம்’ எப்படி இருக்கிறது?

கதைக்களம்

படத்தின் கதாநாயகி பூஜாஸ்ரீ, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் காரைக்குடி பக்கத்திலுள்ள அன்னை வயல் என்ற கிராமத்தில் தனது அலுவலக மேலாளர் வீட்டு திருமணம் நடக்க இருக்கிற விஷயம் தெரிந்ததும் ஆர்வமாக அந்த திருமணத்தில் கலந்துகொள்ள அன்னை வயல் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு ‘A to Z’ என்ற நிறுவனம் நடத்தி வரும் வசியை சந்தித்ததும் பூஜாஸ்ரீ அவரை விரும்ப துவங்குகிறார். இந்நிலையில் அந்த ஊரியல் பெரிய ரௌடியாக இருக்கும் விஜயானந்த் ஒரு கொலையை செய்வதை கண்டு அவரை போலீஸில் சிக்க வைத்து விடுகிறார் பூஜாஸ்ரீ! இதனால் விஜயானந்த் ஆட்கள் பூஜாஸ்ரீயை கொல்ல துரத்துகிறது. இதனிடையில் வசியின் தந்தையும், விவசாய போராளியுமான சீமான், வசி சிறு வயதில் இருக்கும்போது அவரது கண் முன்னாலேயே கொலை செய்யப்பட்ட விஷயம் பூஜாஸ்ரீக்கு தெரிய வருகிறது. சீமான் கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அன்னை வயல் என்றதும் பூஜாஸ்ரீ ஆர்வமாக அந்த ஊருக்கு வர காரணம் என்ன? என்பது படத்தின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

எளிமையான ஒரு காதல் கதையை விவசாயம் மற்றும் விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகிய விஷயங்களை பின்னணியாக வைத்து இயக்கியுள்ளார்கள். ஆனால் இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி காட்சிகள் அமைத்து படமாக்குவதில் இயக்குனர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. படத்தின் முதல் பாதியில் வரும் காதல், காமெடி காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் பயணிப்பதால் முதல் பாதி போரடிக்கவே செய்கிறது. அதன் பிறகு சீமான் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை விளக்கும் ஃபளாஷ் பேக் காட்சி முதல் படம் கொஞ்சம் சூடு பிடித்து ரசிக்க வைப்பதோடு படத்தின் கிளைமேக்ஸில் கதாநாயகி பூஜாஸ்ரீ சம்பந்தப்பட்ட கிளைமேக்ஸும் ரசிக்க வைக்கிறது.

விவசாயம் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை சீமான் கேரக்டர் மூலம் வலியுறுத்திய இயக்குனர்கள், சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சீரியஸாக, கொஞ்சம் சுவாரயஸ்மான, விறுவிறுப்பான விஷயங்களுடன் படமாக்கியிருந்தால் ‘தவம்’ பேசப்பட்டிருக்கும். வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஆகிய விஷயங்கள் ‘தவ’த்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. ஆனால் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமதுவின் பணி சொல்லும்படியாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

சீமான் தனது கம்பீரமான நடிப்பாலும், வசனங்கள் மூலமாகவும் அந்த கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். படம் முழுக்க கதையை நகர்த்தி செல்லும் கதாநாயகியாக வரும் பூஜாஸ்ரீ, நடிப்பிலும் கிளாமரிலும் குறை வைக்க வில்லை. கதாநாயகனாக வரும் வசி, இளமை துடிப்புள்ள இளைஞர் கேரக்டருக்கு அருமையாக பொருந்தி உள்ளார்! நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். வில்லனாக வரும் விஜயானந்த், சீமானை நயவஞ்சகம் செய்து கொலை செய்யும் கேரக்டரில் நடித்திருக்கும் ‘போஸ்’ வெங்கட், வசியின் நண்பராக வரும் பிளாக் பாண்டி, சமையல்காரராக வரும் சிங்கம் புலி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.இரண்டாம் பாதி

2.விவசாயம் பற்றிய சமூக கருத்துக்களை வலியுறுத்தியிருப்பது..

பலவீனம்

1.முதல் பாதி

2.வலுவும் நேர்த்தியும் இல்லாத திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்…

’வாழ்க்கையில் காதல் என்பது நிஜமாக ஒரு முறை தான் வரும், அதுவும் ஒருவரிடம் ஒரு முறை மனதை பறிகொடுத்தால் அந்த மனதில் வேறு எவரும் எளிதில் இடம் பிடிக்க முடியாது’ என்ற கருத்தை கதாநாயகி கேரக்டர் மூலம் சொல்ல வந்துள்ள இப்படம், வாழ்க்கையில் நிஜமாக காதலிப்பவர்களுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கிறது

ஒருவரி பஞ்ச் : நிஜ காதலுக்கு நியாயம் சொல்லும் படம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;