மிக மிக அவசரம் – விமர்சனம்

‘மிக மிக அவசரம்’ - வரவேற்க வேண்டிய படம்!

விமர்சனம் 8-Nov-2019 12:30 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Suresh Kamatchi
Production: V House Productions
Cast: Sri Priyanka, Harish, “Vazhakku en” Muthuraman & Seeman
Music: Ishaan Dev
Cinematography: Bala Barani
Editor: R Sudharsan

‘கங்காரு’, ‘அமைதிப்படை-2’ ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஸ்ரீப்ரியங்கா, சீமான், முத்துராமன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள ‘மிக மிக அவசரம்’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஸ்ரீப்ரியங்காவை அடைய முயற்சிக்கிறார் அவரது உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் முத்துராமன். இதற்கு உடந்தையாக இருக்க விருப்பமில்லாத ஸ்ரீப்ரியங்காவை எப்படியாவது தனது இச்சைக்கு இணங்க வைக்க வேண்டும் என்று அவருக்கு பல குடைச்சல்கள் கொடுக்கிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் முத்துராமன் ‘பந்தோபஸ்து’ என்ற பெயரில் ஒரு பாலத்தின் மீது காலை முதல் மாலை வரை ஸ்ரீப்ரியங்காவை நிற்க வைத்து கொடுமைப்படுத்த, இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் திணறும் அந்த பெண் போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சனைகளே ‘மிக மிக அவசரம்’.

படம் பற்றிய அலசல்

இந்த படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியுள்ள சுரேஷ் காமாட்சி இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதையை படமாக்கியுள்ள விதத்திலேயே அவரது சாமர்த்தியம் தெரிகிறது. இன்று சமூகத்தில் எல்லா துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அப்படி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் சந்திக்கும் பிரச்சனைகளை, வலிகளை சுரேஷ் காமாட்சி உணர்வுகளோடு படமாக்கிய விதம் அருமை! இயற்கை உபாதையை கூட கழிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகி ஸ்ரீப்ரியங்காவின் நிலைமையை கண்டு இயற்கையே அவருக்கு உதவுவதுபோல் படமாக்கப்பட்டிருக்கும் கிளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும் இயக்குனரின் ரசனையான கற்பனைக்கு! அதைப் போலவே கதையோட்டத்தில் கோயில் திருவிழா ஒன்று நடந்துகொண்டிருக்க, அந்த விழாவில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவது மாதிரி திரைக்கதையை கிளைமேக்ஸ் வரை நகர்த்திச் சென்று கடைசியில் அந்த காட்சிகளுக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது மாதிரி படமாக்கப்பட்டுள்ள விதமும் ரசிக்க வைக்கிறது. இது போன்று சின்ன சின்ன ரசிக்க கூடிய விஷயங்களுடன் சுவாரஸ்யமாக கதையை நகர்த்திய இயக்குனர் படத்தில் தேவையில்லாதது மாதிரி வரும் சில கேரக்டர்களை தவிர்த்திருக்கலாம. காதல், டூயட், காமெடி போன்ற கமர்ஷியல் விஷயங்களை நம்பாமல், எடுத்துக்கொண்ட கதையை ரசிக்க வைக்கும் விதமாக படமாக்கியுள்ள இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் பாலபரணி, இசை அமைத்திருக்கும் இஷான் தேவ், படத்தொகுப்பு செய்திருக்கும் ஆர்.சுதர்சன் ஆகியோரும் கதையின் தன்மையை உணர்ந்து சிறப்பாக பணியாற்றி படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

நடிகர்களின் பங்களிப்பு!

இதுவரை சிறிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீப்ரியங்காவுக்கு இப்படத்தில் தனது முழு நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தி நடிக்கும் விதமாக பெண் காவலர் வேடம்! காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு பணிபுரிவதிலுள்ள கஷ்டங்களை முகத்தில் உணர்ச்சிகளால் வெளிக்காட்டி சிறப்பாக நடித்துள்ளர். இவருக்கு தொல்லை கொடுக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமனின் கழுகு பார்வையும், நரித்தன செயல்களும் தனது நடிப்பின் மூலம் அந்த கேரக்டருக்கு வலுவூட்ட செய்துள்ளார். இவர் ஸ்ரீப்ரியங்காவுக்கு கொடுத்த குடைச்சல்கள் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சீமானுக்கு தெரிய வந்து, அவரை கண்டிக்கும் காட்சியில் சீமான் நடிப்பில் ஒரு நிஜ போலீஸ் அதிகாரியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளர். இவர்கள் தவிர்த்து படத்தில் நடித்துள்ள ஈ.ராம்தாஸ், சரவண சக்தி, வி.கே.சுந்தர் என்று எல்லோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.ஸ்ரீப்ரியங்கா

2.புதிய கதைக்களம்

3. கேரக்டர்கள் வடிவமைப்பு

பலவீனம்

1. பொழுது போக்கு விஷயங்கள் இல்லாதது…

2.திணிக்கப்பட்டது மாதிரி வரும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் சுயநலத்துக்காக பலியாகும் ஒரு பெண் காவலரின் அவஸ்தைகளை யதார்த்தம் நிறைந்த, உணர்வுபூர்வமான காட்சிகளாக படமாக்கப்பட்ட இப்படம் சமூகத்துக்கு தேவையான ஒரு படமாக அமைந்துள்ளது.

ஒருவரி பஞ்ச் : ‘மிக மிக அவசரம்’ - வரவேற்க வேண்டிய படம்!

ரேட்டிங் : 4.5/10

#MigaMigaAvasaram #SureshKamatchi #VHouseProductions #SriPriyanka #VazhakkuEnMuthuraman #Seeman #IshaanDev #MigaMigaAvasaramReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிக மிக அவசரம் - டீசர்


;