‘விஜய்சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி!’ – மயில்சாமி

மயில்சாமி மகன் அன்பு மயில் சாமி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ’அல்டி’

செய்திகள் 24-Oct-2019 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அல்டி’. அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் இயக்கியுள்ள இந்த படத்தை ‘NSR ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஷேக் முகம்மது, ரஹ்மத்துல்லா, ஜோதிபாசு, சதக்கத்துல்லா, சாய் சசி குமரன் ஆகிய ஐவர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் அன்பு மயில்சாமிக்கு ஜோடியாக மனிஷாஜித் நடிக்க, இவர்களுடன் சென்ட்ராயன், ராபர்ட், யாசி, மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ், ‘பசங்க’ சிவகுமார், செந்தி குமாரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஜய்சேதுபதி, ராதாரவி, இயக்குனர் பாக்யராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி சினிமாவில் பெரிய வெற்றியை அடைய வேண்டும்’’ என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது, ‘‘இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து அவனுக்கு பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி! எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகன் அன்புவின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். பத்து படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவனுக்கு முதல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறான். ஜாகுவார் தங்கம் கூறியதுபோல், விஜய் சேதுபதி ஒரு எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி! உதவிகளை செய்வதிலும், யதார்த்தமாக பழகுவதிலும் அவர் எம்.ஜி.ஆர்.மாதிரி! பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று! ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை என்று! காரணம் யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். தான்’’ என்றார் மயில்சாமி!

இன்றைய வாழ்க்கையில் அத்தியாவச பொருளாகிவிட்ட மொபைல் தான் இப்படத்தின் கதைக் கரு. மொபைல் என்பது நமக்கு பல்வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படும், அதே நேரத்தில் அதனால் ஏற்படும் தீமைகளை சொல்லும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனித்துள்ளார். வில்சி படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது! இயக்குனர் ஹுசைனிடம் இந்த படத்திற்கு ‘அல்டி’ என்று பெயர் வைக்க காரணம் என்ன என்று கேட்டபோது ‘அல்டிமேட்’ என்ற வார்த்தையின் சுருக்கமாக ‘அல்டி’ என்று வைத்திருக்கிறோம்’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;