பப்பி – விமர்சனம்

சுவாரஸ்யமான காதல் பயணம்!

விமர்சனம் 12-Oct-2019 3:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘மொரட்டு சிங்கிள்’ என்ற பெயரில் நட்டு தேவ் எழுதி இயக்க, வருண், சம்யுக்தா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ‘பப்பி’ எப்படி?

கதைக்களம்

கல்லுரியில் படித்து வரும் மொரட்டு சிங்கிளான வருண் வகுப்பறையில் செய்யும் தவறினால் அந்த கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இந்நிலையில் அவரது வீட்டு மாடியில் வாடகைக்கு குடி வரும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார் வருண். சம்யுக்தாவும் வருணை விரும்ப, இருவரும் நெருங்கி பழகுகிறார்கள். இந்நிலையில் ஒரு சந்தர்பத்தில் இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட, அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை அவர்களால் சமாளித்து, வாழ்க்கையில் இணைய முடிந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படமே ‘பப்பி’.

படம் பற்றிய அலசல்

இளம் பருவ வயதில் ஒரு இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்படும் நெருங்கிய உறவால் ஏற்படும் பிரச்சனைகள், அதன் முடிவு என்ற ஒரு வரி கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி, அதற்கேற்ற மாதிரி காட்சிகள் அமைத்து போரடிக்காத விதமாக இயக்கியுள்ளார் மொரட்டு சிங்கிள்! அதற்காக இயக்குனர் திரைக்கதையில் இணைத்த பப்பி என்ற நாய் கேரக்டரும் படத்தை சுவாரஸ்யமாக்க உதவியிருக்கிறது. கிளைமேக்ஸில் பப்பி நாய் மூலம் ஒரு உயிரின் மதிப்பை உணரும் வருண், அதன் மூலம் தனது காதலியை தனதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள், அதன் முடிவு இயல்பாகவும் சுவாரஸ்மாகவும் அமைந்து ரசிக்க வைக்கிறது. இப்படி கதையை சீராகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்திய இயக்குனர் ஒரே வீட்டில் குடியிருக்கும் வருணும், சம்யுக்தா ஹெக்டேயும் காதலிப்பது அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பது மாதிரி காட்டியிருப்பது ஏனோ? இன்றைய இளைஞர்களுக்கு நல்ல ஒரு மேசேஜை சொல்லும் விதமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையில் அனிருத், யுவன் சங்க ராஜா பாடியுள்ள பாடல்கள் மற்றும் தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்களும் கை கொடுத்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக புரொமோஷன் பெற்றுள்ள வருண் பிரபு என்ற பருவ வயது இளைஞன் கேரக்டருக்கு சரியாக பொருந்தியுள்ளதோடு சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். பப்பி நாய் மீது அவருக்கு இருக்கும் பாசம், நண்பன் யோகி பாபுவின் லட்சியத்துக்காக அவருக்கு தோள் கொடுக்கும் குணம், காதலி தன்னை விட்டு பிரிந்து செல்லும் நிலையில் ஏற்படும் பரிதவிப்பு என்று வருண் எல்லா இடங்களிலும் நடிப்பில் குறை வைக்கவில்லை. வருணின் காதலியாக வரும் சம்யுக்தா ஹெக்டே தனக்கு கொடுக்கப்பட்ட ஹோம்லி கேரக்டரை சிறப்பாக செய்து அனைவரையும் கவர்கிறார். வெறும் காமெடியனாக இல்லாமல் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் கால்பந்து வீரராக வரும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவரது நடிப்பும் ‘பப்பி’க்கு பலமாக அமைந்துள்ளது. வருணின் பெற்றோர்களாக வரும் நித்யா, மாரிமுத்து, சம்யுக்தா ஹெக்டேயின் தாய் தந்தையாராக வருபவர்கள், டாக்டராக வரும் ஆர்.எஸ்.சிவாஜி, தாதாவாக வரும் மொட்டை ராஜேந்திரன் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. எடுத்துக்கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கும் விதம்...

2. நடிகர்களின் பங்களிப்பு

3. இசை, பாடல்கள்

பலவீனம்

1.பப்பி நாய் சம்பந்தப்பட கிளைமேக்ஸ் காட்சியின் அதிகபடியான நீளம்

2.வருண், சம்யுக்தாவின் காதல் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பது…

மொத்தத்தில்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சலிக்காத ஒரு விஷயம் காதல் கதைகள்! அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள இந்த ‘பப்பி’ இளைஞர்கள் இளைஞிகளை கவரும் என்பது நிச்சயம்!

ஒருவரி பஞ்ச் : சுவாரஸ்யமான காதல் பயணம்!

ரேட்டிங் : 4.5/10

#Puppy #Varun #SamyukthaHegde #VelsFilmInternational #YogiBabu #DharanKumar #Anirudh #YuvanShanarRaja #PuppyMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;