அருவம் – விமர்சனம்

ஏமாற்றம்!

விமர்சனம் 11-Oct-2019 11:16 AM IST VRC கருத்துக்கள்

Direction: Sai Sekhar

Production: Kleem Entertainment

Cast: Siddharth, Catherine Tresa, Kabir Duhan Singh,

Sathish, ‘Aadukalam’ Naren & Madhusudhan Rao

Music: S Thaman

Cinematography: N. K. Ekambaram

Editor: Praveen KL
அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேதிரின் தெரெசா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அருவம்’ எப்படி?

கதைக்களம்

சித்தார்த் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயல்படும் உணவு பாதுகாப்பு அதிகாரி! உணவு மற்றும் மக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களில் கலப்படம் செய்து ஊழல் செய்து வருபவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயற்சிக்கும்போது, சித்தார்த் அவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வேறு ஒரு நிலைக்கு சென்று விடுகிறார். இந்நிலையில் சித்தார்த் தான் ரொம்பவும் விரும்பும் கேத்ரின் தெரெசா மூலம் வில்லன்களை எப்படி பழி வாங்கி நியாயத்தை நிலை நாட்டுகிறார் என்பதே ‘அருவம்’ படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

‘உணவில் கலப்படம்’ என்ற நல்ல ஒரு விஷயத்தை கையிலெடுத்த இயக்குனர் சாய் சேகர், அதை திரைக்கதையாகி இயக்கியிருப்பதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்த கதைக்குள் எதற்கு பேய்? என்று கேள்வி கேட்கும் விதமாக அவர் திரைக்கதையில் புகுதியுள்ள பேய் விஷயங்கள், கேலிகூத்தாகவே அமைந்துள்ளது. ஸ்மெல் சென்ஸ் (நுகரும் தன்மை…) இல்லாத கதாநாயகி கேத்ரின் தெரெசா, அவர் மீது சித்தார்த்துக்கு காதல் வருவது, அதன் பிறகு கேத்ரின் தெரெசாவுக்கு நுகரும் தன்மை வருவது, அதன் பிறகு கேத்ரின் தெரெசாவை வைத்து வில்லன்களை சித்தார்த் பழிவாங்குவது என்று பயணிக்கும் திரைக்கதையில் புதுமையான, சுவாரஸ்யமான எந்த விஷயங்களும் இல்லாததால் ‘அருவம்’ படம் பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே அமைந்துள்ளது.

உணவு கலப்படம், ஸ்மெல் சென்ஸ் இல்லாதவரும், ஒரு ஈ, எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காதவருமாக வரும் கதாநாயகி ஆகிய மாறுபட்ட விஷயங்களை யோசித்த இயக்குனர் அதை ஒரு சில புதிய விஷயங்களுடன் ரசிக்கும்படியான திரைக்கதையாக்கி, கொஞ்சம் லாஜிக் விஷயங்களுடன் இயக்கியிருந்தால் ‘அருவம்’ பேசப்பட்டிருக்கும்! இசைக்கு எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவுக்கு ஏகாம்பரம், படத்தொகுப்பு கே.எல்.பிரவீன் என்று பெரிய பெரிய டெக்னீஷியன்கள் இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஆனால் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைப்பு, இயக்கம் ஆகியவற்றால் இவர்களது பங்களிப்பு எடுபடவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு!

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வழங்கிய சித்தார்த் இப்படத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். அதே மிடுக்குடனும் கம்பீரத்துடனும் இப்படத்திலும் தோன்றும் சித்தார்த்தின் நடிப்பு சில இடங்களில் அந்த கேரக்டரை மீறிய செயல்களை செய்வதால் ரசிக்க முடியவில்லை. தன் சாவில் கூட கலப்படம் இருக்கக் கூடாது என்று ஒரு கட்டத்தில் சித்தார்த் எடுக்கும் முடிவு, அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களில் சித்தார்த்தின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஒரு ஈ, எறும்புக்கு கூட தீமை ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைப்பவராக, ஸ்கூல் டீச்சராக வரும் கேத்ரின் தெரெசாவும் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். கலப்பட மாஃபியா கும்பலை சேர்ந்தவர்களாக வரும் கபீர் சிங், மதுசூதனன், நந்தகுமார், சில்வா மாஸ்டர் மற்றும் கேத்ரின் தெரெசாவின் அப்பாவாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மயில்சாமி சுஜாதா என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த கேரக்டர்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.கதைக்கரு

2.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை

2. எளிதில் யூகிக்க கூடிய காட்சி அமைப்புகள், லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

‘அருவம்’ என்றால் உருவம் இல்லாதது என்று அர்த்தம்! இந்த விஷயத்தை வைத்து மாறுப்பட ஒரு திரைக்கதை அமைப்புக்கொண்ட படத்தை தர முயற்சித்துள்ளார் இயக்குனர் சாய் சேகர்! ஆனால் ரசிகர்களுக்கு தேவையான புதிய விஷயங்கள், சுவாரஸ்ய விஷயங்கள் படத்தில் சொல்லும்படியாக அமையாததால் இப்படம் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்பதை சொல்ல முடியவில்லை!

ஒருவரி பஞ்ச் : ஏமாற்றம்!

ரேட்டிங் : 3.5/10

#Siddharth #CatherineTresa #Aruvam #AadukalamNaren #Sathish #SaiSekhar #KleemEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;