அசுரன் – விமர்சனம்

‘அசுரன்’ அசாதாரணமானவன்!

விமர்சனம் 4-Oct-2019 2:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : VETRI MAARAN
Production: V CREATIONS
Cast: DHANUSH ,MANJU WARRIER, AMMU ABHIRAMI , TEEJAY ARUNASALAM,
BALAJI SAKTHIVEL, PRAKASH RAJ, KEN KARUNAS
Music: G.V. PRAKASHKUMAR
Cinematography: R.VELRAJ
Editor: R. RAMAR

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அசுரன்’. ரசிகர்களிடம் பெரிய ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகியுள்ள ‘அசுரன்’ எப்படி இருக்கிறது?

கதைக்களம்

ஊரில் வசதி படைத்த ஆளாக இருக்கும் ‘ஆடுகளம்’ ‘நரேன்’ தனது நிலத்துக்கு அருகையாமையில் உள்ள தனுஷுக்கு சொந்தமான இடத்தை கைபற்ற நினைக்கிறார். அந்த நிலத்தை நம்பியே ஏழ்மையான வாழ்க்கை நடத்தி வரும் தனுஷ் தனது நிலத்தை கொடுக்க மறுத்து வரும் நிலையில் ‘ஆடுகளம்’ நரேன் குடும்பத்துக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சனைகள் உருவாகிறது. இந்நிலையில் தனுஷின் முத்த மகனை (‘டீஜே’ அருணாச்சலம்) ‘ஆடுகளம்’ நரேனின் ஆட்கள் தனுஷின் இளைய மகன் கென் கருணாஸ் முன்னாலேயே கொலை செய்து விடுகிறார்கள். அண்ணனை இழந்த சோகம் மற்றும் கோபம், மூத்த மகனை இழந்த நிலையில் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது அப்பா தனுஷ், தாய் மஞ்சுவாரியார் ஆகியோரின் பரிதாப நிலையை கண்டு கொதிகும் கெவின் தனது அண்ணன் சாக காரணமான ‘அடுகளம்’ நரேனை போட்டுத் தள்ளுகிறார். ஊரில் ஆள் பலத்துடனும் பண பலத்துடனும் பெரிதும் மதிக்கப்படுபவராக இருந்து வந்த ‘ஆடுகளம்’ நரேன் கொலை செய்யப்பட்டதும், தனது மகன் கெவினுடன் தனுஷ் தலைமறைவாவதோடு, தனுஷின் மனைவி மஞ்சு வாரியாரும் சிறுவயது மகளும் தங்களது வீட்டை விட்டு வேறொரு இடத்துக்கு இடம் பெயர்கிறாகள். இந்நிலையைல் கெவினை பழிவாங்க ‘ஆடுகளம்’ நரேனின் ஆட்கள் தேடுதல் வேட்டையை துவங்க, அவர்களிடமிருந்து தனுஷால் தனது மகன், மனைவி, மகள் ஆகியோரை காப்பற்ற முடிந்ததா இல்லையா என்பதை சில ஃப்ளாஷ் பேக் காட்சிகளுடன் சொல்லும் படமே ‘அசுரன்’.

படம் பற்றிய அலசல்…

பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது! 1970-1980 காலகட்டத்தில் திருநெல்வேலி ஏரியாவில் நடந்த பஞ்சமி நில அபகரிப்பு, மேல்தட்டு மக்களுக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், பிரச்சனைகள், அந்த ஏரியாவில் உள்ள மக்களுக்கு இருக்கும் கோபம், பழி வாங்கும் குணம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் நம்மை அந்த காலகட்டத்துக்கே அழைத்துக்கொண்டு சென்ற ஒரு உணர்வை தரும் விதமாக சிறப்பாக இயக்கியுள்ளார்.

தனுஷ் தனது மகன் கெவினுடன் காட்டுக்குள் தலைமறைவாகுவதிலிருந்து துவங்குகிறது படம். அதன் பிறகு ‘ஆடுகளம்’ நரேனால் பிரச்சனைகள், அவமானங்கள் ஏற்பட்டும், அண்ணன் கொலை செய்யப்பட்டும் கூட ரோஷம் வராமல் இருக்கும் தனது அப்பாவிடம் கெவின், ‘‘என் அண்ணனுக்கு பதிலாக நீ செத்து போயிருந்தா குடும்பம் சந்தோஷமா இருந்திருக்கும்’’ என்று கோபப்பட்டு சொல்ல, அதனை தொடர்ந்து விரியும் தனுஷ் சம்பந்தப்பட்ட ஃபளாஷ் பேக், அந்த ஃப்ளாஷ்பேக்கில் நடைபெறும் படு பயங்கர சம்பவங்கள், அதிலிருந்த நியாயங்கள், கொடுமைகள், அடிமைத்தனங்கள் ஆகியவற்றை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் நீளமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது என்றாலும், அந்த காட்சிகள் படம் பார்ப்பவர்களை நெகிழ் வைக்கும் விதமாக அமைந்துள்ளது. அதைப் போல ஆரம்பத்தில் சில கேள்விகள், குழப்பங்கள் எழுந்தாலும் போகப் போக ஒவ்வொரு கேரக்டர்களின் கடந்த காலத்தின் வழியே திரைக்கதையை அதன் போக்கில் சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதால் அந்த குறைகள் பெரிதாக தெரியவில்லை.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பெரிதாக கவன்ம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்! ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. 2 மணி 21 நிமிடங்கள் ஓடும் படம் எங்கும் போரடிக்காதவிதமாக செதுக்கியுள்ளார் படத்தொகுப்பாளர் ராமர். ஜாக்கியின் கலை இயக்கம் நம்மை அந்த காலகட்டத்தோடு கட்டிப்போடும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற டெக்னிக்கல் விஷயங்களும் ‘அசுர’னுக்கு அசுரபலம் சேர்த்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு உறுதுணை புரிந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

அது என்னவோ வெற்றிமாறன் படம் என்றால், அதில் தனுஷை நாம் வேறொரு பரிமாணத்தில் பாரக்கலாம் என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்! சிவசாமி கேரக்டருக்கு தனுஷை தவிர்த்து நாம் வேறு எவரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தனுஷ் அந்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். பிரச்சனைகள் வேண்டாம் என்று அடங்கி போகும் குணம், பாசம், கோபம், பழி வாங்கும் வெறி என்று பல்வேறு குணாதிசயங்களை அநாயசமாக செய்து தனுஷ் நம் மனதில் சிவசாமியாகவே இடத்தை பிடித்து விடுகிறார்! தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், தமிழில் தனது அறிமுகத்தை அந்த கேரக்டர் மூலம் சரியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பதிவு செய்துள்ளார். , ஃப்ளாஷ் பேக் காட்சியில் தனுஷின் முறைப் பெண்ணாக வரும் ‘ராட்சசன் புகழ்’ அம்மு அபிராமி கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடும் நடிப்பை வழங்கி விட்டு செல்கிறார். மஞ்சு வாரியாரின் சகோதராராக வரும் பசுபதி, பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமானவராக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ நரேனுக்கு உடந்தையாக செயல்படும் போலீஸ் அதிகாரியாக வரும் பாலாஜி சக்தி வேல், தனுஷ் வாழ்க்கையில் பிரச்சனைக்கு காரணமான இன்னொரு வில்லனாக வரும் இயக்குனர் வெங்கடேஷ், வழக்கறிஞராக வரும் பிரகாஷ் ராஜ், தனுஷின் முத்த மகனாக வரும் டீஜே அருணாசலம், சிறிய மகனாக வரும் கென் கருணாஸ், ‘ஆடுகளம்’ நரேனின் ஆட்களாக வரும் பவன், நித்தீஷ் வீரா, மற்றும் தனுஷுக்கு ஆதராவக செயல்படுபவராக வரும் சுப்பிரமணியம் சிவா என்று படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.திரைக்கதை, இயக்கம்

2.தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களின் சிறந்த பங்களிப்பு

3. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம்

பலவீனம்

1.ஆரம்பத்தில் எழும் சில கேள்விகள் மற்றும் கொஞ்சம் நீளமான தனுஷ் சம்பந்தப்பட்ட ஆரம்பகால ஃப்ளாஷ் பேக் காட்சி தவிர்த்து இப்படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை!

மொத்தத்தில்…

ஏற்கெனவே இதுபோன்ற ரத்தமும் சதையுமான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இடம் பெறும் இந்த படத்திற்கும் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் விதமாகவும், விருதுகள் கிடைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது ‘அசுரன்’ படத்தின் கதைக்களமும், ‘அசுரனி’ன் ஆட்டமும், அதகளமும்! ஆனால் அதிகபடியான வன்முறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த ‘அசுரன்’ பெண்களை, குழந்தைகளை தன் வசப்படுத்துமா என்பது சந்தேகமே!

ஒருவரி பஞ்ச் : ‘அசுரன்’ அசாதாரணமானவன்!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;