சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

Sye Raa Narasimha Reddy Review

விமர்சனம் 3-Oct-2019 10:53 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: Surender Reddy
Production: Konidela Production Company
Cast: Chiranjeevi,Nayanthara,Tamannaah,Sudeep,Vijay Sethupathi
Music: Amit Trivedi ,Julius Packiam
Cinematography: R. Rathnavelu
Editor: A. Sreekar Prasad

தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ எப்படி?

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அந்தந்த பிரதேசங்களில் பல வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள். அப்படி ஆந்திராவில் கொயில்குண்டலா என்ற பிரதேசத்தில் இருந்த உய்யலவாடா நரசிம்மா ரெட்டி ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தார். அவருடைய வரலாறுதான் ‘சைரா நர்சிம்மா ரெட்டி’யாக படமாகியுள்ளது.

ரேநாடு என்று அழைக்கப்படும் நாட்டிற்குள் 61 பாளையத்துக்காரர்கள் ஒற்றுமையுடன் இருந்து தங்களது பிரதேசங்களை ஆண்டு வருகிறார்கள். அவர்களிடமிருந்து வரி வசூலித்தும், அங்குள்ள செல்வங்களை சூறையாடியும் செல்கிறார்கள் ஆங்கிலேயர்கள். கொயிலகுண்டலா என்ற இடத்தில் அராஜகம் செய்து வரும் ஆங்கிலேயர்களை கொன்று மக்களிடம் முதன் முதலாக விடுதலை போராட்டத்தை துவக்கி வைக்கிறார் நரசிம்மா ரெட்டி. இதனால் மேலும் ஆத்திரமுறும் ஆங்கிலேயர்கள் மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை கட்டழ்வித்து விடுகிறார்கள்.

இந்நிலையில் மற்ற பாளைத்துகாரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட துணியாத நிலையில் தனி ஆளாக நின்று 300-க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த நரசிம்மா ரெட்டியின் துணிச்சலையும், வீரத்தையும் பார்த்து அவருக்கு பின்னால் அணிதிரண்டு காட்டில் மறைந்து பெரும் படையுடன் வரும் ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். ஒன்றிணைந்த 61 பாளையத்துக்காரர்களுக்கும், ஆங்கிலேய படையினருக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பதுதான் ‘சைரா நரசிம்மா ரெட்டி’யின் மீதி கதை!

சினிமாவில் இது போன்ற சுதந்திரப் போராட்ட கதைகள் எப்போதாவதுதான் வரும். அந்த வரிசையில் வந்துள்ள இப்படம் அன்றைய காலத்தில் நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடிய மாவீரர்கள் பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாக இப்படத்தை மிகப் பிரம்மாணமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி! அதற்கு கலை இயக்குனர் ராஜீவன் அமைத்துக் கொடுத்த இடங்கள், பிரம்மாண்ட ‘செட்’டுகள், அந்த இடங்களிலும், செட்களிலும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு காட்சிகளை படம் பிடித்திருக்கும் விதம், அதிரடி சண்டைக் காட்சிகள், விஜய் பாலாஜி எழுதியுள்ள கூர்மையான வசனங்கள், கிராஃபிக்ஸ் மற்றும் VFX தொழில்நுட்பம் ஆகியவை அனைத்தும் சிறப்பாக அமைந்து ‘நரசிம்மா ரெட்டி’யின் போராட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

ஜான்சி லட்சுமிபாயாக வரும் அனுஷ்கா கதை சொல்வதிலிந்து துவங்கும் படம், இடைவேளை வரை மற்ற பாளையத்துக்காரர்களான சுதீப், ஜெகபதி பாபு, ரவி கிஷன், நாட்டியகாரியாக வரும் தமன்னா உட்பட்ட கேரக்டர்களின் பின்னணியை விளக்குவதிலேயே பெரும்பாலான காட்சிகள் அமைந்திருப்பதால் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வையும், கொஞ்சம் அயர்ச்சியையும் தருவது மாதிரி அமைந்துள்ளது. இருந்தாலும், இரண்டாம் பாதி முதல் பாதியிலுள்ள குறைகளை சரி செய்யும் விதமாக படு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பயணித்து நம்மை கதையுடன் கட்டிப் போடுகிறது.

நாட்டியகாரி லட்சுமியாக வரும் தமன்னாவை பார்த்ததும் நரசிம்மா ரெட்டிக்கு அவர் மீது வரும் காதல், லட்சுமியை கரம் பிடிக்க நரசிம்மா ரெட்டி முடிவெடுக்கும் நிலையில் தனக்கும் சித்தம்மாவுக்கும் (நயன்தாரா) சிறுவயதில் நடந்த திருமணம் பற்றி தெரிய வருவது, அதனை தொடர்ந்து கதையில் ஏற்படும் எதிர்பாராத சில திருப்பங்கள், சுயநலத்துக்காக நரசிம்மா ரெட்டி கூட இருந்தே அவருக்கு குறி பறிக்கும் துரோகிகளால் கதையில் ஏற்படும் சில ட்விஸ்ட்கள் என்று படம் காதல், செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம் போன்ற சில கமர்ஷியல் விஷயங்களை கதையில் திணித்தது மாதிரி அமைந்துள்ளது என்றாலும், அந்த காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்திருப்பதால் 2 மணி 50 நிமிடங்கள் ஓடும் படம் போரடிக்க வைக்காமல் சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.

படத்தின் கதை பெரும்பாலும் சிரஞ்சீவி எற்று நடித்திருக்கும் நரசிம்மா ரெட்டி கேரக்டரை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. அவரது கம்பீரமான தோற்றம், கோபம் கொண்ட பார்வை, யாருக்கும் பயப்படாத வீரம், காதலி, மனைவி, அம்மா ஆகியோரிடம் காட்டும் பாசம், குருஜியிடம் காட்டும் பக்தி, எதிரிகளை பாய்ந்து பாய்ந்து தாக்கும் லாகவம் என்று படத்தை முழுக்கவும் சுமந்திருப்பவர் சிரஞ்சீவி தான்! இவரது கேரக்டரை தவிர்த்து குருஜியாக வரும் அமிதாப்பச்சன், நரசிம்மா ரெட்டியின் காதலியாக வரும் தமன்னா, மனைவியாக வரும் நயன்தாரா, மற்ற பிரதேசங்களின் தலைவர்களாக வரும் சுதீப், ஜெகபதி பாபு, ரவிகிஷன் ஆகியோரது கேரகர்களுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை. அதிலும் நரசிம்மா ரெட்டியின் போராட்டத்துக்கு ஆதரவு தர தமிழ்நாட்டிலிருந்து வரும் விஜய்சேதுபதி ஏற்று நடித்த ராஜபாண்டி கேரக்டர் கதையில் திணிக்கப்பட்டது மாதிரியே அமைந்திருப்பதால் விஜய்சேதுபதியின் கேரக்டர் எடுபடவில்லை. மற்ற படி படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் ஏற்ற கேரக்டர்களை சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

தமிழகத்தில் சுந்தந்திரத்துக்காக போரடி வீரமரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனை போல ஆந்திரத்தில் சுந்ததிரத்துக்காக போராடி வீரமரணம் அடைந்த ‘நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் அந்த அகாலத்தில் நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் விதமாக படமாக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்!

ஆக, இதுவரை வெளியாகி வரவேற்பு பெற்ற சரித்திர கதை படங்கள் வரிசையில் இந்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’யும் இடம் பிடிக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;