நம்ம வீட்டுப் பிள்ளை - விமர்சனம்

ஆண்ட்ராய்டு யுகத்தின் ‘கிழக்குச் சீமையிலே’!

விமர்சனம் 27-Sep-2019 8:12 PM IST Top 10 கருத்துக்கள்

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என வரிசையாக படங்கள் கைகொடுக்காத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். எஸ்.கே.வின் நம்பிக்கைக்கு பலன் கிடைத்ததா?

கதைக்களம்

சிறு வயதிலேயே அப்பாவை இழந்த சிவகார்த்திகேயன், தனது பெரியப்பாவையும், சித்தாப்பாக்களையும் ‘அப்பா’வாக பாவித்து சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், அவர்களோ சிவாவின் குடும்பத்தை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதற்குக் காரணம் சிவகார்த்திகேயனின் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் மேலுள்ள வெறுப்பில்தான் அந்தக் குடும்பத்தையே அவர்கள் யாரும் கண்டுகொள்வதேயில்லை. அதோடு, சிவாவின் மாமா மகன்களும் ஐஸ்வர்யா ராஜேஷை கல்யாணம் செய்துகொள்ளாமல் தவிர்க்கிறார்கள். இவ்வளவு தூரம் ஐஸ்வர்யா ராஜேஷை, சிவாவின் சொந்த பந்தங்கள் வெறுப்பதற்கு என்ன காரணம்? அவர்களின் வெறுப்பை சிவகார்த்திகேயன் அன்பாக மாற்றினாரா இல்லையா? ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஏற்ற மணமகனை சிவகார்த்திகேயன் கைபிடித்துக்கொடுத்தாரா இல்லையா? என்பதற்கான விடைகளே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

படம் பற்றிய அலசல்

‘சொந்த, பந்தங்களை ஒண்ணு சேர்க்கப் பாடுபடும் ஹீரோ’ என்ற அதே ஒன்லைனில், காலம் காலமாக பார்த்துப் பார்த்து சலித்துப்போன ‘தங்கச்சி சென்டிமென்ட்’டை உட்புகுத்தி தன்னுடைய டிரேட் மார்க் ‘ஃபேமிலி என்டர்டெயினர்’ படமாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யை உருவாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். இன்னும் சொல்லப்போனால் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் அப்டேட் வெர்ஷன் என்றுகூட இப்படத்தைச் சொல்லலாம். ஆனாலும் போரடிக்காத வகையிலும், சுவாரஸ்யம் குறையாத வகையிலும் படத்தை உருவாக்கியிருப்பது பாண்டிராஜின் திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி. குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு இப்போது அவசியம் தேவைப்படும் ஒரு வெற்றியை இந்தப்படத்தின் மூலம் அவர் கொடுக்க முயன்றிருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம். என்னதான் பழக்கப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் கண்களில் கண்ணீரை எட்டிப்பார்க்க வைத்துவிடுகிறது பாண்டிராஜின் ‘ஈர’ வசனங்கள். சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் பாண்டிராஜ் ‘ரொமான்ஸ்’ காட்சிகளில் இன்னும்கூட வேறுவிதமாக யோசித்திருக்கலாம். ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஈடுபாடு இல்லாமலே கடந்து போய்விடுகின்றன. அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் நகரும் என்பதையும் எளிதில் யூகித்துவிட முடிகிறது. இமானின் இசையில் ‘உன்கூடவே பொறக்கணும்’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தின் ஓட்டத்திற்கு தடையாகவே உள்ளன. நீரவ் ஷாவின் ஒளிப்பதில் கிராமத்தின் அழகு வசீகரிக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஏற்கெனவே வ.வ.ச., ரஜினி முருகன், சீமராஜா என கிராமத்துப் பின்னணிப் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும், இப்படத்தின் ‘அரும்பொன்’ கேரக்டரில் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் கிடைத்துள்ளது சிவகார்த்திகேயனுக்கு. ‘மாஸ்’ சீன்களைத் தவிர்த்துவிட்டு, ‘கண்கலங்க’ வைக்கும் காட்சிகளில் நெகிழச் செய்திருக்கிறார் சிவா. ஹீரோயினுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லாததால் அனு இம்மானுவேல் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அவரின் கணவராக நடித்திருக்கும் ‘நட்டி’யும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காமெடி மட்டுமின்றி கதையோடும் பயணிக்கும்படியான கேரக்டர் சூரிக்கு. கொடுத்த வேலை கச்சிதமாக செய்துள்ளார். இவர்களைத் தவிர பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், யோகி பாபு, சுப்பு பஞ்சு உட்பட ஏகப்பட்ட கேரக்டர்கள் உள்ளன. அனைவருமே சிறப்பாக நடித்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

பலம்

1. நடிகர்களின் பங்களிப்பு
2. வசனங்கள்
3. திரைக்கதை

பலவீனம்

1. ‘டெம்ப்ளேட்’ கதைக்களம்
2. பாடல்கள்
3. ரொமான்ஸ் காட்சிகள்

மொத்தத்தில்...

பழக்கப்பட்ட கதைக்களத்தில் ‘சென்டிமென்ட்’ ஆயுதத்தை வைத்து மல்லுக்கட்டியிருக்கிறார் பாண்டிராஜ். அவரின் திரைக்கதையாலும், வசனங்களாலும் படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கதையும், காட்சியமைப்பும் புதுமையாக இல்லாத போதும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ நம்மை வசீகரிக்கவே செய்கிறான்.

ஒரு வரி பஞ்ச்: ஆண்ட்ராய்டு யுகத்தின் ‘கிழக்குச் சீமையிலே’!

ரேட்டிங் : 5/10
#DirectorPandiraj #NammaVeettuPillai #DImman #SivaKarthikeyan #SunPictures #NirovShah #NVPFromToday #NVPMovieReview #AnuEmmanuel #AishwaryaRajesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;