கார்த்தியின் ‘சுல்தான்’ படப்பிடிப்பு நிறுத்தம் - பட நிறுவனம் அறிக்கை!

கார்த்தி நடிக்கும் சுல்தான் படப்பிடிப்பு நிறுத்தம் சம்பந்தமாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை!

செய்திகள் 27-Sep-2019 10:19 AM IST Top 10 கருத்துக்கள்

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு அமைப்பினர் பல்வேறு காரணங்களை கூறி படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து இந்த படத்தை தயாரிக்கும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு,

‘‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் திரு.கார்த்தி அவர்கள் நடிக்க, திரு. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எங்களின் ‘சுல்தான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த திரைப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்டதாக எடுக்கப்படுவதாகவும், அதனை திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்க கூடாதென்றும் கூறி ஒரு அமைப்பினர் 24-9-19 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்ததிற்குரிய விஷயமாகும்.

இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமீபகாலமாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைக்குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுந்தந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Karthi #Karthi19 #DirectorBakkiyarajKannan #DreamWarriorPictures #SRPrakashBabu #Sulthan #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;