ஒத்த செருப்பு - விமர்சனம்

ஒத்த செருப்பு - விமர்சனம்

விமர்சனம் 20-Sep-2019 5:09 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: R. Parthiepan
Production: Bioscope Film Framers
Cast: R. Parthiepan
Music: Santhosh Narayanan (“Kulirudha Pulla” Song) C. Sathya (Background Score)
Cinematography: Ramji
Editor: R Sudharshan

பார்த்திபன் தனது ‘பயாஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ஒத்த செருப்பு-சைஸ் 7’. எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பார்த்திபன் இந்த படத்தை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக ஒரே ஒரு கேரக்டரை மட்டுமே நடிக்க வைத்து இயக்கி உள்ளார். அந்த கேரக்டரில் பார்த்திபனே நடிக்க, ‘ஒத்த செருப்பு’ எப்படி ?

ஒரு கொலைக் குற்றத்திற்காக தனது நோய்வாய்ப்பட்ட சிறுவயது மகனுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார் மாசிலாமணி (பார்த்திபன்). அந்த போலீஸ் ஸ்டேஷனில் மாசிலாமணியிடம் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நிஜத்தில் மாசிலாமணி அந்த கொலையை செய்தாரா? இல்லை அந்த கொலையின் பின்னணி என்ன? என்பதை விளக்கும் கதை அமைப்புக்கொண்ட இரண்டு மணிநேரம் ஓடும் படம்தான் ‘ஒத்த செருப்பு’.


ஒருவர் மட்டுமே நடிக்கும் இந்த படத்தில் மாசிலாமணியாக பார்த்திபன் நடிக்க, மற்ற கதாபாத்திரங்கள் வசனங்கள் வழியாக கதையை நகர்த்துவது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. அந்த விஷயமே பார்த்திபனுக்கு பெரிய சேலஞ்சிங்காகவும் அமைந்துள்ளது. ஆனால் பார்த்திபன் அந்த சவாலை ஏற்றுகொண்டு, இரண்டு மணிநேரம் ஓடும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார். இரண்டு மணிநேரம் ஓடும் படத்தில் இரண்டு மணிநேரமும் பார்த்திபன் கேரக்டரை மட்டுமே பார்ப்பது போரடிக்காதா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் பார்த்திபன் ஏற்று நடித்துள்ள மாசிலாமணி கேரக்டரை சுற்றி வரும் மாசிலாமணியின் மனைவி, மகன், மகனுக்கு இருக்கும் வியாதி, மாசிலாமணி வேலை செய்த இடங்கள் குறித்த பதிவுகள், மாசிலாமணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், போலீஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பார்த்திபன் அளிக்கும் குழப்பமான பதில்களால் திணறும் போலீஸ், என்று மாசிலாமணி கேரக்டரை சுற்றி வரும் கேரக்டர்கள் மூலம் கதை நகருவதோடு, அதில் காதல், அன்பு, பாசம், காமெடி, செண்டிமெண்ட், கோபம், பழிவாங்குவது என்று ஒரு ஜனரஞ்சக படத்திற்கான அனைத்து விஷயங்களுடனும் கதை பயணிப்பதால் படம் போரடிக்கவில்லை. ஆனால் படம் முழுக்க வசனங்களால் நகர்வதாலும், ஒரு கொலை சம்பவத்தை புலனாய்வு செய்கையில் அடுத்தடுத்து வரும் வேறு கொலை சம்பவங்கள் கதைக்குள் வந்து திரைக்கதை கொஞ்சம் குழப்பமடைய செய்து அயர்ச்சியை தருகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்! இந்த குறைகளை தவிர்த்து, படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் ‘ஒத்த செருப்பு’ மேலும் விறுவிறுப்பாக பயணித்து ரசிக்க வைத்திருக்கும்.



படத்தில் மாசிலாமாணி என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் பார்த்திபன். மனைவி மீதும், மகன் மீதும் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவது, அதே மனைவியால் ஏமாற்றப்பட்டதால் உண்டாகும் ஆத்திரம், வெறி மற்றும் தனக்கே உரிய நக்கல்ம் நய்யாண்டி என்று மாசிலாமணி கேரக்டரை பார்த்திபன் தனது பாணியில் சிறப்பாக நடித்து கவனம் பெற வைத்துள்ளார்.

ஒரு போலீஸ் ஸ்டேஷன் அறை, அதில் ஒரே ஒரு நடிகர், அவரை வைத்து மற்ற கேரக்டர்களின் வசனங்கள் மூலம் கதை சொல்வதில் பார்த்திபன் எவ்வளவு கஷ்டப்படிருப்பார் என்பது படத்தை பார்க்கும்போது தெரிந்து விடும். அந்த கஷ்டத்தில் பார்த்திபனுக்கு தோள் கொடுத்து பணியாற்றியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜியும், பின்னணி இசை அமைத்த சத்யாவும், ஒலி வடிவமைப்பு செய்த ‘ஆஸ்கர் விருது’ ரசூல் பூக்குட்டியும்!

ஆக, தமிழ் சினிமாவில் இந்த ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ மூலம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்ட பார்த்திபன் நிச்சயம் பாராட்டுக்குரியவரே! இந்த படம் வசூலை குவிக்குமோ இலலையோ விருதுகளை அள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது!



(இது ஒரு மாறுபட்ட படைப்பு என்பதால் வழக்கமாக தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ரேட்டிங் இந்த படத்திற்கு தரப்படவில்லை!)

#OththaSeruppuSize7 #OththaSerupuReview #Parthiepan #BioscopeFilmFramers #ResulPookutty #Ramji #Sudharshan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;