பயில்வான் - விமர்சனம்

பயில்வான் - விமர்சனம்

விமர்சனம் 13-Sep-2019 6:51 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: S. Krishna
Production: Zee Studios Presents & RRR Motion Pictures Production
Cast: Sudeep, Kabir Duhan Singh, Aakanksha Singh & Suniel Shetty
Music: Arjun Janya
Cinematography: Karunakara A.
Editor: Ruben

இது ‘ஸ்போர்ட்ஸ் ஃபிலிம்’ சீஸன். இப்போது களத்தில் இறக்கிவிடப்பட்டிருப்பவர் மல்யுத்த வீரரான ‘பயில்வான்’. கன்னடத்தில் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் கிச்சா சுதீப்பின் ‘பயில்வான்’ வெற்றியை ருசித்ததா?

உலக மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு சுனில் ஷெட்டியால் சிறு வயது முதல் வார்த்தெடுக்கப்பட்டு வருபவர் ‘பயில்வான்’ கிச்சா (கிச்சா சுதீப்). உள்ளூரில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகளில் தங்கு தடையின்றி வென்று, உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்கான நேரம் கைகூடி வருகையில், இனி மல்யுத்தமே விளையாடக்கூடாது என்ற முடிவை எடுக்கிறார் கிச்சா சுதீப். அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார்? அதன்பிறகு அந்த முடிவை மாற்றி உலக மல்யுத்தப் போட்டியில் வென்றாரா? இல்லையா? என்பதே ‘பயில்வான்’.

‘தன்னோட பலத்தை வச்சு சண்ட போடுறவன் ரௌடி... பலமான ஒரு விஷயத்துக்காக சண்டை போடுறவன் வீரன்’ & இதுதான் ‘பயில்வான்’ படத்தின் ஒன் லைன். மகாபாரதத்தை முன்னோடியாக வைத்து இப்படிப்பட்ட ஒன்லைன் ஒன்றைப் பிடித்து, அதற்கேற்ற ஒரு திரைக்கதையை உருவாக்கி ‘பயில்வான்’ படத்தை மாஸ் மசாலா என்டர்டெயினராக கொடுக்க முயன்றிருக்கிறார் எஸ்.கிருஷ்ணா. வெறும் மல்யுத்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு மல்லுக்கட்டினால், ‘தங்கல்’ படத்தின் தாக்கம் வந்துவிடக்கூடும் என்று நினைத்தார்களோ என்னவோ, சமூக அக்கறை ஒன்றை கதைக்குள் திணித்து, அதில் ஒரு மல்யுத்த வீரன், பாக்ஸராக மாறுவதுபோன்று திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். ஆனால், அது கிட்டத்தட்ட சல்மான்கானின் ‘சுல்தான்’ படத்தை ஞாபகப்படுத்துவதுபோல் அமைந்துவிட்டதுதான் சற்றே சோகம்.

படம் ஆரம்பித்தபோது, ஒரு ‘ராவா’வான மல்யுத்த படத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற உணர்வை தோற்றுவித்தாலும், ஹீரோவுக்கென ஓபனிங் சாங், தேவையில்லாத காமெடி, காதல், டூயட் என முதல்பாதி முழுக்க ‘மசாலா’வின் தூக்கல் அதிகமாகிவிட்டதுதான் உண்மை. முதல்பாதியைவிட இரண்டாம்பாதியில் கதைக்கான முக்கியத்துவம் அதிகமிருந்தாலும், ஹீரோவின் நோக்கம் நிறைவேறுவதற்காக அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொண்டிருப்பதால், ஒரு நீண்ட நெடிய படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, க்ளைமேக்ஸ் பாக்ஸிங் காட்சிகள் மட்டுமே 15 நிமிடத்திற்கு மேல் நகர்வது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஒரு பலமான விஷயத்துக்காகத்தான் ஹீரோ போராடுகிறார் என்றாலும், காட்சியமைப்பில் புதுமைகள் இல்லாதது, மசாலாத்தனங்கள் அதிகப்படுத்தப்பட்டிருப்பது, ஏற்கெனவே பழக்கப்பட்ட தமிழ்ப்பட வசனங்கள் சிலவற்றை படத்தில் பயன்படுத்தியிருப்பது என நம்மூர் ரசிகர்களை சோதிக்கும் விஷயங்கள் ‘பயில்வான்’ படத்தில் இருப்பது மைனஸ். ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றவை படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்திருப்பது ப்ளஸ்.

ரஜனி மாடுலேஷனில் தமிழ் பேசி நடித்திருக்கும் கிச்சா சுதீப் படத்திற்காக கடுமையான உழைப்பைக் கொட்டிருகிறார். சிற்சில காட்சிகளே தோன்றினாலும், சுனில் ஷெட்டியின் கேரக்டர் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹீரோயின் ஆகான்ஷா சிங் தனக்குக் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். மாடர்ன் காஸ்ட்யூமைவிட, சேலையில் அழகாகத் தெரிகிறார். வில்லன் கபீர் துஹான் சிங், ஆரம்பத்தில் 5 நிமிடமும், கடைசியில் 15 நிமிடமும் ‘குத்தி’க் கொண்டே இருக்கிறார்.

‘நான் ஈ’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிச்சா சுதீப், இப்படத்தில் ஒரு டப்பிங் பட ஹீரோவாக காட்சியளிக்கிறார். மற்றபடி, அவரின் உழைப்பிற்காக ‘பயில்வானை’ பாராட்டலாம்.
#Sudeep #Kichcha #SKrishna #ZeeStudios #RRRMotionPicturesProduction #ArjunJanya #SunielShetty #AakanshaSingh #KabirDuhanSingh #Pailwaan #EditorRuben

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;