ஜாம்பி – விமர்சனம்

ஜாம்பி - ஜாலி!

விமர்சனம் 10-Sep-2019 12:37 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Bhuvan Nullan
Production: S3 Pictures
Cast: Yogi Babu, Yashika Aannand, Gopi(Parithabangal), Sudhakar(Parithabangal), Dhuniya Sudhakar, T. M. Karthik &Black Sheep Anbu
Music: Premgi Amaren
Cinematography: Vishnushri K
Editor: Dinesh Ponraj


‘மோ’ என்ற படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘ஜாம்பி’. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி அமைந்துள்ளதா ‘ஜாம்பி’யின் ஆட்டம்?

கதைக்களம்

வைரஸ் பாதிப்பால் செத்துப்போன சில கோழிகளை ஒருவர் சாக்கடையில் தூக்கி வீசிவிட்டு செல்கின்றார். அந்த கோழிகளை வேறு ஒருவர் எடுத்து செல்கிறார். அந்த கோழிகள் ஒரு ரெசார்ட்டில் உள்ள உணவகத்தில் உணவாகிறது. இன்பச்சுற்றுலாவாக அந்த ரெசார்ட்டுக்கு வரும் சில கல்லூரி மாணவிகள் அந்த கோழிக்கறி உணவை உண்ண, அந்த மாணவிகள் ஒருவர் ஒருவராக ஜாம்பிகளாக மாறி அட்டகாசம் செய்ய துவங்குகின்றனர். இந்த ஜாம்பிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் அந்த ரெசார்ட்டுக்கு இன்பச்சுற்றுலாவாக வந்த இன்னொரு குழுவினரான சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் ஆகியோர்கள்! அந்த ஜாம்பிகள் ரெசார்ட் ஊழியர்களில் துவங்கி ஓவ்வொருவரையாக பதம் பார்க்க துவங்க, அந்த கல்லூரி மாணவிகளில் வைரஸ் பாதிப்புக்குள்ளாகாமல் தப்பிக்கும் யாஷிகா ஆனந்த் மற்றும் சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் ஆகியோர் ஜாம்பிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க போராடுகின்றனர். ரெசார்ட்டில் இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில், ரௌடியான யோகி பாபு தனது ஐ-ஃபோனை அடித்து வந்த பிஜிலி ரமேஷை தேடி அங்கு வர, யோகி பாபுவும் அவரது குழுவினரும் ஜாம்பிகளிடம் மாட்டிக்கொள்ள அதன் பிறகு நடக்கும் காமெடி, சீரியஸ் களேபரங்கள் தான் ‘ஜாம்பி’

படம் பற்றிய அலசல்

படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் புவன் நல்லான் அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்று சொல்லும் விதமாக அமைந்துள்ளது அவரது திரைக்கதை அமைப்பும் இயக்கமும். ரௌடி என்ற போர்வையில் வரும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள், சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் ஆகிய ஐவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று துவங்கும் படம் இடைவேளை வரை சிரிக்க வைத்துக்கொண்டே பயணிக்கிறது. அதன் பிறகு கதை சீரியஸாக பயணிக்கிறது. ஆனால் அந்த சீரியஸ் காட்சிகளிலும் சிரிக்க வைக்கும் விதமாக பல காட்சிகளை அமைத்து முழு படத்தையும் காமெடி, சீரியஸ் என்று கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

இடைவேளைக்கு பிறகு ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க யாஷிகா ஆனந்த், சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், கார்த்திக் ஆகியோர் மேற்கொள்ளும் போராட்ட காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் ஜாம்பி இன்னும் விறுவிறுப்பாக பயணித்திருக்கும். தனது ஃபோனை தேடிவந்து ஜாம்பிகளிடம் மாட்டிக்கொண்டும் யோகி பாபு, யோகி பாவுவை பிடிக்க வைந்து ஜாம்பிகளிடம் மாட்டிக்கொள்ளும் போலீஸ் அதிகாரி ஜான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. ‘ஜாம்பி’யின் இந்த கலகலப்பான பயணத்திற்கு பிரேம்ஜி அமரனின் இசை கே.எஸ்.விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவு, தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்களும் பகபலமாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

ஆறேழு பேருடன் சுற்றித்திரியும் லோக்கல் ரௌடியாக வரும் யோகி பாபுவின் கேரக்டருக்கு கதையில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனது வழக்கமான பாணியில் நடித்து ‘யோகி’ பாபு சிரிக்க வைக்க தவறவில்லை. கல்லூரி மாணவியாக வந்து, சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் ஆகியோருடன் இணையும் யாஷிகா ஆனந்துக்கு படம் முழுக்க் வருவது மாதிரியான கேரக்டர்! படம் முழுக்க கவர்ச்சியாக தோன்றி நடிப்பிலும் குறை சொல்ல முடியாத பங்களிப்பு செய்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். வீட்டில் மரியாதை கிடைக்காத கணவராக வரும் சுதாகர், அம்மா, மனைவிக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல்படுபவராக வரும் கோபி கார்த்திக், எப்போதுமே வீடியோ கேம் என்று கிடக்கும் அன்புதாசன் மற்றும் பேட்ட பிலிப்ஸ் என்ற கேரக்டரில் வரும் பிஜிலி ரமேஷ், வசதிபடைத்தவராக வரும் டி.எம்.கார்த்திக், போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர்.

பலம்

1.காமெடியும், சீரியஸும் கலந்து பயணிக்கும் திரைக்கதை

2.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள்

2.நீளமாக அமைந்துள்ள ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் போராட்ட காட்சிகள்

மொத்தத்தில்…

லாஜிக் விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இரண்டு மணி நேரம் ஜாலியாக பொழுதை கழிக்க நினைப்பவர்கள் இந்த ‘ஜாம்பி’க்கு டிக்கெட் எடுக்கலாம்!

ஒருவரி பஞ்ச் : ஜாம்பி - ஜாலி!

ரேட்டிங் : 4.5/10

#Zombie #Blacksheep #Paridhabangal #Gopi #Sudhakar #YashikaAannand #YogiBabu #PremgiAmaren #Anbu #BijiliRamesh #KMKarthik #BhuvanNullan #S3Pictures #ZombieFromSeptember6th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாம்பி ட்ரைலர்


;