சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்

அக்கா - தம்பி, மாமன்- மச்சான் உறவைச் சொல்லும் படைப்பு!

விமர்சனம் 10-Sep-2019 11:35 AM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sasi
Production: Abhishek Films
Cast: Siddharth, G. V. Prakash Kumar, Kasmira Pardeshi & Lijomol Jose
Music: Siddhu Kumar
Cinematography: Prasanna Kumar
Editor: San Lokesh

மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் ஆகிய சிறப்புக்களுடன் வெளியாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ சசியின் ‘அக்மார்க்’ முத்திரை படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

பெற்றோர்களை இழந்த நிலையில் அத்தை வளர்ப்பில் வளரும் அக்கா – தம்பி, லிஜோ மோள் ஜோஸ் - ஜி.வி.பிரகாஷ்! ஜி.வி.பிரகாஷுக்கு பைக் ரேஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்! அப்படி ஒரு பைக் ரேஸின்போது ஜி.வி.பிரகாஷ், டிராஃபிக் போலீஸ் அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக்கொண்டு அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் மீது பெரும் வன்மம் கொண்டு இருக்கும் நிலையில் தனது அக்கா லிஜோ மோளுக்கு மாப்பிள்ளையாக வருகிறார் சித்தார்த்! இதனால் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷின் அக்காள் லிஜோ மோள் பெரிதும் பாதிக்கப்பட, மாமன், மச்சான் சண்டை உச்சம் பெறுவதோடு, போதை பொருள் கடத்தல்காரர் மதுசூதன் ராவால் சித்தார்த்துக்கும், பைக் ரேசால் ஜி.வி.பிரகாஷுக்கும் பெரும் பிரச்சனைகள் வருகிறது! இந்த பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீள்கிறார்களா? அக்காள் - தம்பி, மாமன்- மச்சான் உறவு சீராகிறதா என்பதே ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மா, மகன் உறவை சென்டிமென்டுடன் சொன்ன இயக்குனர் சசி, இப்படத்தின் மூலம் அக்காள் - தம்பி உறவை சொல்ல வந்துள்ளார். அதை கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கிறார்! உயிருக்கு உயிராக நேசிக்கும் அக்கா, தம்பிக்கு இடையிலான பாசப் போராட்ட காட்சிகள், ரோஷக்கார இளைஞரும், பைக் ரேசில் நாட்டம் கொண்டவருமான ஜி.வி.பிரகாஷ், நேர்மையான போக்குவரத்து அதிகாரி சித்தார்த் இவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளை, உறவு, பாசம், சென்டிமெண்ட் போன்ற மனித உணர்வு விஷயங்களை இப்படத்திலும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சசி. ஆனால் அடிதடி, கமர்ஷியல் விஷயங்களுக்காக திரைக்கதைக்குள் நுழைத்த சில விஷயங்களை தான் ஜீரணிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக மதுசூதன் ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையுடன் சிறிதும் ஒட்டாமல் பயணிப்பதால் படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் தடம் மாறி ‘சிவப்பா’கவே பயணிக்கிறது! அதனால் முதல் பாதி திரைக்கதையிலுள்ள சுவாரஸ்யம், நேர்த்தி இரண்டாம் பாதியில் அமையவில்லை. முதல் பாதி திரைக்கதை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் ‘பச்சை’யாக பயணித்ததை போன்று இரண்டாம் பாதியும் பயணித்திருந்தால் இந்த படமும் சசியின் அக்மார்க் முத்திரை படமாக அமைந்திருக்கும்!

சசி உருவாக்கிய திரைக்கதையின் தன்மைக்கு தகுந்தபடி சிறப்பாக அமைந்துள்ளது அறிமுக இசை அமைப்பாளர் சித்துக்குமாரின் இசையும், சான் லோகேஷின் படத்தொகுப்பும்! அதைப் போலதான் பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும்! ஒரு நிஜ பைக் ரேஸை நேரில் பார்க்கின்ற உணர்வை தரும் விதமாக அந்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார் பிரசன்ன குமார்! சசி இயக்கும் படங்களில் எப்போதும் வசனங்கள் கவனம் பெறும்! இப்படத்திலும் அப்படி அமைந்துள்ளது. ஆண்கள் அணியும் ஆடைகளை பெண்கள் அணிய தயங்குவதில்லை. ஆனால் பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்கள் அணிய அதை ஏன் அவமானமாக கருதுகிறார்கள், ஒரு நாட்டின் வளர்ச்சியை பார்க்க வீட்டை பார்க்க வேண்டாம், ரோட்டை பார்த்தாலே போதும் என்பது போன்ற கருத்துமிக்க நிறைய வசனங்கள் இப்படத்திலும் இடம் பெற்று படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.நடிகர்களின் பங்களிப்பு

சித்தார்த் டிராஃபிக் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். சட்டத்தை மீறுபவர்களிடம் கண்டிப்பை காட்டுவது, ஜீ.வி.பிரகாஷுடன் மல்லுகட்டுவது, குடும்பத்திற்காக இறங்கி வருவது என்று சித்தார்த் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அதைப்போல இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது ஜி.வி.பிரகாஷின் கேரக்டரும் நடிப்பும்! மனதில் முழுக்க வன்மத்தை வைத்துக்கொண்டு பழிவாங்க துடிக்கும் இளைஞராக, அக்காள் பாசத்துக்கு கட்டுப்பட்டவராக, ரேசில் ஜெயிக்க வேண்டும் என்ற வீராப்புகொண்ட இளைஞராக ஜி.வி.பிரகாஷும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் அக்காளாக வரும் லிஜோ மோள் ஜோஸ் அன்பு, பரிவு, வலி என அனைத்துவிதமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடத்தில் வரும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் விரும்பும் பெண்ணாக வரும் கஷ்மீரா பர்தேசிக்கு நடிக்க அதிக வாய்ப்பு தரப்படவில்லை என்றாலும் வந்து போகிற காட்சிகளில் கவனம் பெறுபடி நடித்துள்ளார். சித்தார்த்தின் அம்மாவாக வரும் தீபா ராமானுஜம், அண்ணனாக வரும் பிரேம் குமார், சித்தார்த்துக்கு வில்லனாக வரும் மதுசூதன் ராவ் என்று படத்தில் பங்கேற்றிருக்கும் அனைவரும் தங்களது கேரட்கர்களின் தன்மையை உணர்ந்து அழகாக நடித்துள்ளனர்.

பலம்

1.குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை

2.சித்தர்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோமோள்

3.வசனம்

பலவீனம்

1.தொய்வுடன் பயணிக்கும் இரண்டாம் பாதி

2.திணிக்கப்பட்டது மாதிரியாக வரும் சில கேரக்டர்களும், அடிதடி காட்சிகளும்!

மொத்தத்தில்…

குடும்ப உறவுகளை மையப்படுத்தி கமர்ஷியல் விஷயங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும், குடும்பத்தினருடன் சென்று பார்க்கக் கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

ஒருவரி பஞ்ச் : அக்கா - தம்பி, மாமன்- மச்சான் உறவைச் சொல்லும் படைப்பு!

ரேட்டிங் : 5/10

#SivappuManjalPachai #GVPrakashKumar #Siddharth #LijomolJose #KasmiraPardeshi #SiddhuKumar #Sasi #AbhishekFilms #PrasannaKumar #SanLokesh #SivappuManjalPachaiFromSeptember6th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;