மகாமுனி – விமர்சனம்

‘ஒருவரை அறிவாளியாக்குவதும், அடியாளாக்குவதும்  சூழ்நிலையே’ என்பதை சொல்லியிருக்கும் படைப்பு!

விமர்சனம் 5-Sep-2019 4:27 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Santhakumar
Production: Studio Green
Cast: Arya, Indhuja Ravichandran, Mahima Nambiar
Music: S. Thaman
Cinematography: Arun Bathmanaban
Editor: V. J. Sabu Joseph

‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகாமுனி’. ‘மௌனகுரு’ மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமாரின் 8 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு அவரது இரண்டாவது படமாக வெளியாகியுள்ள ‘மகாமுனி’ எப்படி?

கதைக்களம்

இரட்டையர்களான மகாவும், முனியும் (ஆர்யா) சந்தர்ப சூழ்நிலையால் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் வளர்கின்றனர். டிரைவராக வேலை செய்யும் மகா, ஸ்கெட்ச் போட்டு கொலை செய்வதிலும் கில்லாடி! முனி, தத்துவங்களிலும் கல்வியிலும் சிறந்த அறிவாளி மற்றும் பிரம்மச்சாரி வாழ்கையை கடைபிடித்து வருபவர்! மனைவி இந்துஜா மற்றும் பள்ளியில் படிக்கும் சிறுவயது மகனுடன் வாழ்ந்து வரும் மகா, அரசியல்வாதியான இளவரசுவின் விசுவாசமான அடியாள்! ஒரு கட்டத்தில் மகாவின் உயிருக்கு இளவரசுவாலேயே ஆபத்து ஏற்படுகிறது. அதே நேரம் ஊரில் வசதி படைத்த பெரிய மனிதராக இருக்கும் ஜெயபிரகாஷ், தனது மகள் மகிமா நம்பியார் விஷயமாக முனியை தீர்த்துகட்ட சதித்திட்டம் தீட்டுகிறார்! மகா, முனி இருவரது உயிருக்கும் ஆபத்து என்ற நிலையில், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘மகாமுனி’யின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

அவசியமில்லாத ‘பில்ட்-அப்’ காட்சிகள் எதுவும் இல்லாமல் மகா, முனி இருவரது கேரக்டர்களை அறிமுகம் செய்வதிலிருந்து துவங்குகிறது படம்! அதன் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் காப்பகத்தில் இருக்கும் மகா கேரக்டரின் ஃப்ளாஷ் பேக், முனி கேரக்டரின் பின்னணி என்று மாறுபட்ட ஒரு கோணத்தில் கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் சாந்தகுமார். அதற்காக சமகால அரசியல், சில சமூக பிரச்சனைகள், ஜாதி பிரச்சனைகள் ஆகியவற்றையும் கதையில் புகுத்தியுள்ள இயக்குனர் சாந்தகுமார் அனைவரது கேரக்டர்களையும் இயல்பான கேரக்டர்களாக வடிவமைத்து இயக்கிய விதம் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஆனால் மகா, முனி, ஆரசியல் வாதியாக வரும் இளவரசு கேரக்டர், பெரிய மனிதராக வரும் ஜெயபிரகாஷ் கேரக்டர் மற்றும் இந்த கேரக்டர்களுடன் பயணிக்கும். வேறு சில கேரக்டர்கள் ஆகியவற்றை குழப்பத்தை தருவது மாதிரி அமைந்திருப்பது, மகா, முனி இருவருக்கும் இளவரசு, ஜெயபிரகாஷ் இருவரின் சதி திட்டம் பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லை என்பது போன்ற சில விஷயங்கள் படத்தில் மைனஸாக அமைந்துள்ளது. இது போன்ற சில குறைகல் படத்தில் இருந்தாலும் ‘மாகாமுனி’ ரசிக்க கூடிய படமாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம்!

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அருண் பத்மநாபனின் முதல் படமாம் இது. ஆனால் அவர் காட்சிகளை படமாக்கிய விதத்தை பார்க்கும்போது அப்படி சொல்ல முடியவில்லை. அதைப் போல கதையின் தன்மையை உணர்ந்து பின்னணி இசை அமைத்துள்ள எஸ்.எஸ்.தமன், படத்தொகுப்பு செய்துள்ள சாபு ஜோசஃப் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. அதைப் போல படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் ‘மகாமுனி’க்கு தோள் கொடுத்துள்ள சிறப்பு அம்சமாகும். கடவுள் பற்றிய புரிதல் பற்றி ‘முனி’ ஆர்யா தரும் விளக்கம் அருமை!

ஆக, ‘மௌன குரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் சாந்தகுமார் தனது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’ மூலமும் கவனத்தை பெறும்படி அமைந்துள்ளது அவரது ‘மகாமுனி’.

நடிகர்களின் பங்களிப்பு

மகா, முனி ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் ஆர்யா, அந்த கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார். காதல் டூயட், குத்துப் பாட்டு, காமெடி என்று எந்த மசாலா விஷயங்களும் இல்லாமல் ஆர்யாவை இப்படி சிறப்பாக நடிக்க வைத்ததில் இயக்குனருக்கு பெரும் பங்கு உண்டு! மகாவின் மனைவியாக வரும் இந்துஜா, தன் கணவர் இறந்து விடுவாரோ, அப்படி நடந்தால் வாழ்க்கை என்னாவாகும் என்று ஏங்கித் தவிக்கும் ஒரு சராசரி மனைவியின் கேரக்டரில் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்! முனியை விரும்பும் புரட்சிகரமான பெண்ணாக, ஜர்னலிசம் படிக்கும் பெண்ணாக வரும் மகிமா நம்பியாருக்கும் இப்படத்தில் மாறுபட்ட கேரக்டர்! பெரியார், லெனின் மற்றும் இன்னும் சில தலைவர்களின் கொள்கையுடைய வலிமையான கேரக்டரில் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றி சிறப்பாக மகிமா நம்பியாரும் சிறப்பாக நடித்துள்ளார். அரசியல் வதியாக வரும் இளவரசு எப்போதும் இயல்பாக நடிக்க கூடியவர். இதிலும் அப்படியே! போதை தலைக்கு ஏறியபடி அவர் உளறிக்கொட்டும் காட்சிகளில் சிரிக்கவும் வைக்கிறார். முனியின் வளர்ப்பு அம்மாவாக வரும் ரோகிணி, மகிமா நம்பியாரின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷ், இளவரசுவுக்கு குடைச்சல் கொடுக்கும் அரசியல் வாதியாக வரும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாக வரும் ஜி.எம்.சுந்தர், இளவரசுவின் மனைவியாக வரும் தீபா, போலி டாக்டராக வரும் காளி வெங்கட், அடியாளாக வரும் அருள்தாஸ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளர் இயக்குனர் சாந்தகுமார்

பலம்

1.கதை, இயக்கம்

2.ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார்

3.டெக்னிக்கல் விஷயங்கள்…

பலவீனம்

1.குழப்பத்தை தரும் சில காட்சிகள்

2.மகா,முனி இருவருக்கும் சதித்திட்டம் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் இருப்பது!

மொத்தத்தில்…

சினிமா துவங்கிய காலத்திலிருந்தே இரட்டையர்கள் கதை அமைப்பு கொண்ட பல படங்கள் உருவாகி திரைக்கு வந்துள்ளன. இந்த படமும் அதே இரட்டையர் பாணி கதை அமைப்பு கொண்ட படம் என்றாலும் மாறுபட்ட திரைக்கதை அமைப்பு, மாறுபட்ட வகையிலான கேரக்டர்கள் வடிவமைப்பு ஆகியவற்றுடன் சில சமூக கருத்துக்களையும் தாஙிகி வருவதால் இந்த ‘மகாமுனி’ யாருக்கும் ஏமாற்றத்தை தராது!

ஒருவரி பஞ்ச் : ‘ஒருவரை அறிவாளியாக்குவதும், அடியாளாக்குவதும் சூழ்நிலையே’ என்பதை சொல்லியிருக்கும் படைப்பு!

ரேட்டிங் : 5.5/10

#Arya #MahaMuni #KEGnanavelraja #SanthaKumar #SayeeshaaSaigal #SThaman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;