சாஹோ – விமர்சனம்

சாஹோ – விமர்சனம்

விமர்சனம் 31-Aug-2019 1:03 PM IST Top 10 கருத்துக்கள்

பெரும் வசூல் குவித்து உலகம் முழுக்க பேசப்பட்ட ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்கள் மூலம் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர் வட்டத்தினரை உருவாக்கியவர் பிரபாஸ்! ‘பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் ‘சஹோ’. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘சாஹோ’ பூர்த்தி செய்துள்ளதா?

சர்வதேச அளவில் மாஃபியா சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். இவருக்கு அடுத்தபடியாக தலைவர் பதவியை வகிக்க தகுதியானவர் ஜாக்கி ஷெராஃபின் மகன் அருண் விஜய் என்ற நிலை உருவாகிறது. இந்நிலையில் ஜாக்கி ஷெராஃபிற்கு முன் அந்த கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் டினு ஆனந்த். இவருடைய மகன் சங்கி பாண்டேக்கு தலைவர் பதவி கிடைக்காத காரணத்தால் அந்த பதவியை அடைய பல சதித் திட்டங்களை தீட்டுகிறார் சங்கி பாண்டே! இந்நிலையில் ஜாக்கி ஷெராஃப் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்! அதே நேரம், இந்த கூட்டமைப்புக்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திருட்டை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள் போலீஸ்காரர்களான பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர்! இதற்கு பிறகு அதிகாரத்தை பிடிக்கவும், 2 லட்சம் கோடியை கைபற்றுவதற்குமாக நடக்கும் போராட்டங்களே ‘சாஹோ’.

இந்த கதையை எழுதி, இயக்கியிருப்பவர் சுஜித். ஒரு படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருக்கும் விஷயம் சொல்ல வரும் கதையை எல்லோருக்கும் புரியும் படியாக திரைக்கதை அமைத்து இயக்குவது! அது இந்த படத்தை பொறுத்தவரையில் டோட்டல் மிஸ்ஸிங்! அழகு, அழகான லொகேஷன்களில் காட்சிகளை, அதிலும் குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் இயக்குனர் சுஜித். பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் வருகைக்கு பிறகு கதை சூடு பிடிக்கிறது என்றாலும் யார் யாருடன் எதற்காக மோதுகிறார்கள் என்பதை படம் பார்ப்பவகளால் யூகிக்க முடியாத வண்ணம் திரைக்கதை அமைப்பில் பெரிதும் கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தில் ஏகபட்ட கேரக்டர்கள், கிளைக்கதைகள் என்று வந்து குழப்பம் அடைய செய்வது வேறு!

படத்தின் ஆகப் பெரும் பலம் ஆக்‌ஷன் காட்சிகளும், அதில் பிரபாஸ் அநாயசமாக வழங்கியிருக்கும் உடல் மொழியும் தான்! பிரபாஸ் யார் என்பதை கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாத வண்ணம் அந்த கேரக்டரை நகர்த்தியிருக்கும் விதத்தில் இயக்குனர் சுஜித்துக்கு ஒரு பாராட்டு தெரிவிக்கலாம். ஷ்ரத்தா கபூருக்கு போலீஸ் அதிகாரி வேடம் அவ்வளவாக பொருந்தவில்லை. பிரபாஸ் பிரில்லியண்டான ஒரு போலீஸ் அதிகாரி என்று நினைத்து ஷ்ரத்தா கபூர் அவருடன் செயல்படுவதும், அவரிடம் மனதை பறிகொடுப்பதும், கடைசியில் பிரபாஸ் யார் என்பது தெரிய வந்து திடுக்கிடுவதுமாக அமைந்துள்ள ஷ்ரத்தா கபூரின் கேரக்டர் ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஜாக்கி ஷெராஃபின் மகனாக வரும் அருண் விஜய் நிஜத்தில் யார்? பிரபாஸுக்கும் அருண் விஜய்க்குமான தொடர்பு என்ன? என்பதற்கான விடைகளை ஃபளாஷ் பேக் காட்சிகளாக தந்துள்ள விதமும், கதையில் வரும் சில திருப்பங்களும், கடைசியில் தலைவர் பதவியில் யார் அமரப் போகிறார் என்பது தெரிய வருவதும் படத்தின் சுவாரஸ்ய பக்கங்கள் என்று சொல்லலாம்.

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் தவிர்த்து படத்தில் நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், லால், மந்திரா பேடி, தேவன், நீல் நிதின் முகேஷ், டினு ஆனந்த், சங்கி பாண்டே, முரளி ஷர்மா, மகேஷ் மஞ்ச்ரேகர் என்று அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் சுஜித்!

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் பயணிக்கும் சாஹோவின் திரைக்கதைக்கு ஜிப்ரானின் பின்னணி இசை பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளது. ஷங்கர் - இஷான்லாய் முதலானோரின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனால் பாடல்களை காட்சிகளாக்கிய விதம் அருமை! ‘சாஹோ’வை பிரம்மாண்டமாக காட்டுவதில் மதியின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இயக்குனர் படம் பிடித்து கொடுத்த காசிகளை ஒருகிணைத்து தருவதில் நிறையவே தடுமாறியிருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத்!

கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது என்று கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை பிரம்மாண்ட காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திய இயக்குனர் சுஜித், சொல்ல வந்த கதையை சீராக திரைக்கதை அமைத்து, அதை எல்லோருக்கும் புரியும்படி இயக்கியிருந்தால் ‘சாஹோ’ ‘ஓஹோ’ என்று பேசப்பட்டிருக்கும்!

#Saaho #Prabhas #ShraddhaKapoor #ArunVijay #EvelynSharma #ShankarEhsaanLoy #RMadhi #SreekarPrasad #SaahoTwitterEmoji #SaahoMovieReview #ShankarEhsaanLoy #Ghibran #UVCreations #TSeries

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;