சிக்சர் – விமர்சனம்

டைம் பாஸுக்கு ஏற்ற படம்!

விமர்சனம் 30-Aug-2019 12:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Chachi
Production: Trident Arts & Wallmate Entertainment
Cast: Vaibhav Reddy, Pallak Lalwani, Sathish, Radha Ravi, KPY TSK, KPY Ramar, Ilavarasu & Sriranjani
Music: M. Ghibran
Cinematography: P. G. Muthiah
Editor: Jomin


அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ், பாலக் லால்வானி, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்சர்’ வசூலில் சிக்சர் அடிக்குமா?

கதைக்களம்

கட்டிடவேலையில் சைட் சூப்பர்வைசராக இருப்பவர் வைபவ். இவருக்கு மாலை 6 மணி ஆனால் கண் தெரியாது. இவருக்கு மாலைக்கண் நோய் இருக்கும் விஷயம் இவரது அப்பாவான இளவரசு, அம்மாவான ஸ்ரீரஞ்சனி, நண்பரான சதீஷுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் பெரிய ரௌடியான ஆர்.என்.ஆர்.மனோகரால் பாதிகப்பட்ட ஒரு பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடுகிறார் தொலைக்காட்சி நிருபராக வேலை செய்யும் பாலக் லால்வானி! இதற்கான போராட்டம் மாலை நேரத்தில் பீச்சில் நடக்கும்போது அந்த கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார் வைபவ்! அந்த கூட்டத்தில் கண் தெரியாத நிலையில் வைபவ் செய்யும் சில செய்லகள் அந்த போராட்டத்தை தீவிரப்படுத்த, இதனால் ரௌடி ஆர்.என்.ஆர்.மனோகர் கைது செய்யப்படுவதோடு, பாலக் லால்வானி மனதிலும் இடம் பிடிக்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் ஆர்.என்.ஆர்.மனோகரின் ஆட்கள் வைபவை தீர்த்துகட்ட முயல்கிறார்கள்! இரவு நேரமானால் கண தெரியாத வைபவ் இவர்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘சிக்சர்’ படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

இந்த படத்தை இயக்கியிருக்கும் சாச்சி, லாஜிக் விஷயங்களை அப்படியே மறந்துவிட்டு, படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளர் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது அவர் அமைத்துள்ள காமெடி காட்சிகளும், அதில் வைபவின் பங்களிப்பும்! வைபவுக்கு மாலைக் கண் நோய் இருப்பது தெரியாமல் அவரை துரத்தும் அடியாட்கள், அவர்களை சமாளிக்க வைபவ் மேற்கொள்ளும் செயல்கள், இன்னொரு பக்கம் தன்னை காதலிக்கும் பாலக் லால்வானியை சமாளிக்க வைபவ் செய்யும் சில விஷயங்கள்… என படத்தில் சிரிக்கக் கூடிய காட்சிகள் நிறைய இடம் பெற்றிருப்பதால் ‘சிக்சர்’ போரடிக்காமல் பயணிக்கிறது.

தான் காதலிக்கும் பாலக் லால்வானியையே தன் நண்பரும் காதலிப்பது தெரியாமல் ஒரு இரவு நேரத்தில் வைபவ் அவருக்காக காதல் தூது போவது, அந்த நண்பரை விட்டு பாலக் லால்வானியை கட்டிப்பிடிக்க வைப்பது, ஏதிரில் இருப்பவர்களை தெரியாமல் அவர்களுடன் சண்டை போடுவது என்று வைபவ் கேரக்டர் சம்பந்தப்பட்ட காமெடிகள் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம்! இதற்கு வைபவின் நண்பராக வரும் சதீஷ், பாலக் லால்வானியின் தந்தையாக வரும் ராதாரவி ஆகியோரும் கை கொடுக்கின்றனர். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கேற்றவிதமாக அமைந்து சிக்சருக்கு பலம் சேர்த்துள்ளது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஆனால் பின்னணி இசையில் ஜிப்ரான் குறை வைக்கவில்லை. வைபவ், பாலக் லால்வானி சம்பந்தப்பட்ட காட்சிகள், இவர்களை துரத்தும் ரௌடி கும்பல், கடைசியில் வைபவை தீர்த்துகட்ட வரும் விஜய் டி.வி.புகழ் ராமர் தலைமையிலான இன்னொரு ரௌடிக் கும்பல் என்று பயணிக்கும் கதைக்கு ஏற்ப காட்சிகளை ஒருங்கிணைப்பதில் படத்தொகுப்பாளர் ஜோமின் போதிய கவனம் செலுத்தவில்லை! இருந்தாலும் படம் காமெடியாக பயணிப்பதால் போரடிக்கவிலை!

நடிகர்களின் பங்களிப்பு

நாயகானாக நடித்திருக்கும் வைபவ் பகலில் கண் தெரிந்தவராகவும், இரவு நேர்த்தில் கண் தெரியாதவராகவும் பொருத்தமாக நடித்திருக்கிறார். நடனம் ஆடும்போதும், சண்டை போடும்போதும் கூட நிஜத்தில் கண் தெரியாத ஒருவரிம் உடல்மொழியை சரியாக கடைப் பிடித்து சிறப்பாக நடித்துள்ளார். தொலைக்காட்சி நிருபராக வரும் பாலக் லால்வானி அழகாக இருக்கிறார் அழகாக நடிக்கவும் செய்துள்ளார். வைபவ் கண் தெரியாதவர் என்பதை தெரிந்தும் அவரை மணக்க தயாராகும் நிலையில் பாலக் லால்வானி அதற்கான விளக்கத்தை தந்து பேசும் வசனங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும்விதமாக அமைந்து சிறப்பு சேர்த்துள்ளது. வில்லன், காமெடியன் என்று மாறுபட்ட குணாதியசங்களை கொண்ட கேரக்டரில் வரும் ராதாரவி, ரௌடியாக வரும் ஆர்.அன்.ஆர்.மனோகர், இவரது தம்பியாகவும் ரௌடியாகவும் வரும் AJ மற்றும் வைபவின் அப்பா, அம்மாவாக வரும் இளவரசு, ஸ்ரீரஞ்சனி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளர்ன்.

பலம்

1.காமெடி காட்சிகள்

2.வைபவின் பங்களிப்பு

3.ஒளிப்பதிவு, பின்னணி இசை

பலவீனம்

1.கவனத்தில் கொள்ளாத லாஜிக் விஷயங்கள்

2.படத்தொகுப்பு

மொத்தத்தில்…

’மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாத ஒருவர், அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…’ என்று கொஞ்சம் மாறுபட்ட கதையை கையிலெடுத்த இயக்குனர் சாச்சி, திரைக்கதையில் கொஞ்ம் நேர்த்தியையும், லாஜிக் விஷயங்களையும் கடைபிடித்து இயக்கியிருந்தால் இப்படம் வசூலிலும் ‘சிக்சர்’ அடித்திருக்கும்!

ஒருவரி பஞ்ச் : டைம் பாஸுக்கு ஏற்ற படம்!

ரேட்டிங் : 4/10

#Sixer #Ghibran #Vaibhav #PallakLalwani #PGMuthaiah #SixerMovieReview #TridentArts #Chachi #WallMateEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;