கென்னடி கிளப் – விமர்சனம்

ஆட்டத்தில் சிற குறைகள் இருந்தாலும் வரவேற்கலாம்!

விமர்சனம் 23-Aug-2019 1:33 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Suseenthiran
Production: Nallusamy Pictures
Cast: M. Sasikumar, Bharathiraja, Soori & Murali Sharma
Music: D. Imman
Cinematography: R. B. Gurudev
Editor: Anthony

கபடி விளையாட்டை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடிக் குழு’, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘ஜீவா’ ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்போது பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. பாரதிராஜா, சசிக்குமார், அறிமுகம் மீனாக்ஷி, சூரி மற்றும் சில நிஜ கபடி விளையாட்டு வீராங்கனைகள் இணைந்து நடித்துள்ள இந்த படம் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’ படங்களின் வரிசையில் கவனம் பெறும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

திண்டுக்கல் அருகேயுள்ள ஒட்டன்சத்திரத்தில் ‘கென்னடி கிளப்’ என்ற பெயரில் பெண்கள் கபடி விளையாட்டு குழுவை நடத்தி வருகிறார் இராணுவத்திலிருந்து ஓயவு பெற்றவரான பாரதிராஜா! ஏழை குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்களை இந்த விளையாட்டின் மூலம் இந்திய அளவில் பேசப்பட வைத்து, அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கபடி பயிற்சி அளித்து வரும் பாரதிராஜாவுக்கு, இரயில்வேயில் கபடி விளையாட்டு வீரராக இருப்பவரும், தனது சிஷயருமான சசிக்குமாரும் உதவியாக இருக்கிறார். இந்நிலையில் மாநில அளவில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் விளையாட பயிற்சிக்கு செல்லும் ‘கென்னடி கிளப்’பை சேர்ந்த ஒரு வீராங்கனையிடம், 30 லட்சம் ரூபாய் தந்தால் தேசிய அளவில் விளையாட வைக்கிறேன் என்று பேரம் பேசுகிறார் தேசிய கபடி விளையாட்டு குழு தலைவரான முரளி சர்மா! இதனால் மனமுடையும் அந்த வீராங்கனை தற்கொலைக்கு முயல்கிறார்! இந்த சம்பவத்தை தொடர்ந்து மற்ற விளையாட்டு வீராங்கனைகளும் கபடி விளையாட்டிலிருந்து விலகுகிறார்கள். இது பற்றி கேள்விப்படும் சசிக்குமார் ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகளை எல்லாம் ஒன்று திரட்டி தேசிய போட்டியில் விளையாட அழைத்து செல்கிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

கிரமத்து பின்னணியில் நிஜ கபடி விளையாட்டு வீராங்கனைகள், உள்ளூரில் அவர்கள் ஆடும் ஆட்டம் என்று துவங்கும் படம் ரசிக்க வைக்கிறது. அதன் பிறாகு படத்தின் கதை, தேசிய அளவிலான கபடி போட்டிக்கு சென்றதும், அங்கு வட இந்தியாவை சேர்ந்தவர்களின் ஆதிக்கம், அரசியல், தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களை உதாசீனப்படுத்துவது என்று இதற்கு முன் வெளியான ‘ஸ்போர்ட்ஸ்’ படங்களின் ‘டெம்ப்லேட்’ மாதிரிதான் இப்படமும் அமைந்துள்ளது. அதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை படம் பார்ப்பவர்களால் எளிதில் யூகிக்க முடிவதால் ‘கென்னடி கிளப்’ பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரியிலும் உள்ளூர் விளையாட்டு, மாநில அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி என்று படத்தின் பெரும் பகுதியும் விளையாட்டு காட்சிகளுடனேயே பயணிப்பதும் தொய்வை தருகிறது. மற்றபடி கபடி விளையாட்டு என்பது நமது பாரம்பரிய விளையாட்டு, பல நாடுகள் விளையாடி வரும் இந்த விளையாட்டில் அதிகார வரக்கத்தினரின் குறுக்கீடு, பித்தலாட்டம் ஆகிய விஷயங்களை மையப்படுத்தி இருப்பதோடு, இது மாதிரியான விஷயங்களில் விளையாட செல்பவர்கள் எப்படி எச்சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை இப்படம் முன் வைத்திருப்பதால் வரவேற்கலாம்! ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கு ஏற்றவிதமாக சிறப்பாக அமைந்துள்ளது. டி.இமானின் பின்னனி இசை சொல்லும்படியாக கவனம் பெறவில்லை. அதைப்போல படத்தொகுப்பாளர் ஆண்டனியும் காட்சிகளை தொகுத்திருப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்! இதுபோன்ற சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ‘கென்னடி கிளப்’ ஓரளவுக்கு ரசிக்க கூடிய படமாகவே அமைந்துள்ளது.நடிகர்களின் பங்களிப்பு

‘கென்னடி கிளப்’பின் விளையாட்டு வீராங்கனைகளாக வரும் அத்தனை பேரும் சிறந்த முறையில் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களது ‘கோச்’சா வரும் பாரதிராஜா, இன்னொரு ‘கோச்’சாக வரும் சசிக்குமார் ஆகியோரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ஆனால் எமோஷன் காட்சிகளில் பாரதிராஜாவின் நடிப்பு கொஞ்சம் ஓவராக தெரிவது மாதிரி அமைந்துள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்! கபடி விளையாட்டு குழுவின் தலைவராக வரும் முரளி சர்மா மற்றும் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களாக மாறி சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.கபடி விளையாட்டு வீராங்கனைகளின் நடிப்பு

2.விரிவாக சொல்லப்பட்டுள்ள கபடி விளையாட்டு விஷயங்கள்

3.ஒளிப்பதிவு

பலவீனம்

1.எந்த புதிய விஷயங்களும் இல்லாத திரைக்கதை

2.பொழுது போக்கு விஷயங்கள் இல்லாதது

3.பின்னணி இசை

மொத்தத்தில்…

வழக்கமாக ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் அதிகார தலையீடு, அதனால் திறமையானவர்களுக்கு விளையாட அனுமதி கிடைக்காமல் போவது, அதனை எதிர்த்து போராடி கடைசியில் வெற்றி பெறுவது என்ற திரைக்கதை அமைப்பிலேயே இப்படமும் உருவாகியுள்ளது. ஏதாவது புதிய விஷயங்களை மையப்படுத்தி திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்து இயக்கி இருந்தால் ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’ படங்களின் வரிசையில் இப்படமும் இடம் பெற்றிருக்கும்!

ஒருவரி பஞ்ச்: ஆட்டத்தில் சிற குறைகள் இருந்தாலும் வரவேற்கலாம்!

ரேட்டிங் : 4.5/10


#KeneddyClub #Sasikumar #Bharathiraja #Soori #DImman #Suseenthiran #NallusamyPictures #ScreenSceneRelease #RBGurudev #EditorAnthony

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;