பக்ரீத் – விமர்சனம்

மனிதனுக்கும், விலங்கிற்குமான  பேரன்பு பயணம்!

விமர்சனம் 22-Aug-2019 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

Direction & Cinematography: Jagadeesan Subu
Production: M10 Productions
Cast: Vikranth & Vasundhara Kashyap
Music: D. Imman

Editor: Ruben

‘சிகை’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா கதையின் நாயகன், நாயகியாக நடிக்க, ஒரு ஒட்டகமும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் ‘பக்ரீத்’ எப்படி?

கதைக்களம்

ஏழு வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய நிறைய பணம் தேவைப்படுகிறது விவசாயியான விக்ராந்துக்கு! இதற்காக ஒரு ‘பாய்’யிடம் கடன் பெற செல்கிறார் விக்ராந்த்! அந்த பாயிடம் இருந்து பணம் கடன் பெற்று திரும்புகையில் அவர் வீட்டில் இருந்த ஒரு ஒட்டகக் குட்டியும் விக்ராந்துக்கு இலவசமாக கிடைக்கிறது! தனது வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளுடன் அந்த ஒட்டகக் குட்டியும் தனது வீட்டின் ஒரு அங்கமாகும் நிலையில் அதனால் சில பிரச்சனைகளும் விக்ராந்துக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த ஒட்டகத்தை ராஜாஸ்தானில் கொண்டு விட முடிவு செய்கிறார் விக்ராந்த்! ஒட்டகத்துடன் ராஜஸ்தானுக்கு பயணமாகும் விக்ராந்துக்கு அந்த பயணத்திலும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது! அந்த பிரச்சனைகள் என்ன? விக்ராந்தால் தான் நினைத்தது மாதிரி அந்த ஒட்டகத்தை ராஜஸ்தான் கொண்டு சென்று விட முடிந்ததா? என்ற கேள்விகளுக்கான விடைகளே ‘பக்ரீத்’

படம் பற்றிய அலசல்

ஆடு, மாடு, யானை, குதிரை, பாம்பு, எலி போன்ற விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒட்டகத்தை மையப்படுத்திய கதையமைப்பு கொண்ட படம் வெளியாவது இதுதான் முதல் முறை! இந்த புதிய முயற்சியை மேற்கொண்டதற்காகவே இப்படக்குழுவினருக்கு ஒரு சபாஷ் போடலாம்!

எந்த ஒரு விலங்கிடமும் நாம் அன்பு செலுத்தினால் அந்த விலங்கும் மனிதனிடம் அன்பு செலுத்தும் என்ற விஷயத்தை மையப்படுத்தியுள்ள இந்த படத்தில் சமகால சில அரசியல் விஷயங்கள், விலங்குகள் ஆர்வலர்களால் நடக்கும் சில விஷயங்கள் என்று திரைக்கதையாக்கி இயக்கி உள்ள ஜெகதீசன் சுப்பு, படத்தில் ஃபேமிலி சென்டிமெண்ட், எமோஷன், காமெடி என்று எல்லா விஷயங்களையும் புகுத்தி சுவாரஸ்யமான ஒரு படமாக தந்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையிலான பாசம், அப்பா மகளுக்கு இடையிலான அன்பு, இவர்களுக்கு நடுவே வரும் ஒட்டகத்தின் மீதும் காட்டும் அன்பு, பாசம் என்று படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் போரடிக்காமல் கொண்டு போயுள்ள இயக்குனர் ஜெகதீசன் சுப்பு, விக்ராந்த் வடமாநிலத்துக்கு பயணிக்கையில் ஒட்டகத்துக்கும், விக்ராந்துக்கும் இடையிலான பாசப்போராட்ட காட்சிகளை தேவையில்லாமல் இழுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். அதைப்போல ராஜஸ்தான் பயணத்தில் வரும்
நம்பகத்தன்மை இல்லாத சில காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். எந்த ஒட்டகத்தால் விக்ராந்துக்கு பிரச்சனைகள் வந்ததோ அதே ஒட்டகத்தால் இந்தியா முழுக்க பிரபலமாகும் விதமாக நடக்கும் அந்த நிகழ்வு இயக்குனரின் சிறந்த கற்பனைக்கு எடுத்துகட்டாக அமைந்துள்ளது. இப்படி பல சுவாரஸ்மான் காட்சிகளுடன் பயணிக்கும் ‘பக்ரீத்’துக்கு டி.இமானின் இசை, ரூபனின் படத்டொகுப்பு போன்ற டெக்னிக்கல் விஷயங்களுடன் இயக்குனர் ஜெகதீசன் சுப்புவின் ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்து பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

விக்ராந்த் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார். விவசாயத்தை, விலங்குகளை, சக மனிதர்களை நேசிக்கும் கள்ளம் கபடம் அறியாத ஒரு அப்பாவி விவசாயியின் கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கும் விக்ராந்துக்கு இந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது. இவரது மனைவியாக வரும் வசுந்தராவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி சிறப்பாக நடித்துள்ளார். ஒட்டகத்துடன் ராஜஸ்தான் பயணமான தன் கணவரிடமிருந்து எந்த தகவலும் வராத நிலையில் பதற்றப்படும்போதாகட்டும், தன் குழந்தை அப்பா பற்றி கேட்கும் கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளிக்கும்போதாகட்டும், நிஜத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளார் வசுந்தரா! இவர்களது சிறுவயது மகளாக நடித்திருக்கும் ஷ்ருதிகாவும் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் விக்ராந்தின் நண்பராக வரும் மோக்லி, வடமாநில லாரி ஓட்டுனராக வரும் ரோகித் பகத், டாக்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஜெகதீசன் சுப்பு!

பலம்

1.ஒட்டகத்தை மையப்படுத்திய கதை

2. நடிகர்களின் பங்களிப்பு

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள்

2.கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் இரண்டாம் பாதி

மொத்தத்தில்…

ஒரு ஒட்டகத்துக்கும், மனிதர்களுக்கும் இடையிலான அன்பை, சில நிகழ்கால விஷயங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இந்த படம் அனைவரயும் மகிழ்விக்கும்!

ஒருவரி பஞ்ச் : மனிதனுக்கும், விலங்கிற்குமான பேரன்பு பயணம்!

ரேட்டிங் : 5/10

#Bakrid #Vikranth #RedGiantMovies #UdhayanidhiStalin #VasundharaKashyap #RohitPathak #Dimman #VishnuGK #EditorRuben #CamelSarah #FirstIndianCamelBasedIndianFilm #JagadeesanSubu #M10Productions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;