கோமாளி- விமர்சனம்

நிறைய நல்ல விஷயங்களை ‘கோமாளி’த்தனாக சொல்லியிருக்கும் படைப்பு!

விமர்சனம் 16-Aug-2019 1:14 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Pradeep Ranganathan

Production: Vels Films International

Cast: Jayam Ravi, Kajal Aggarwal, Samyuktha Hegde,

K. S. Ravikumar, Yogi Babu & Sha Ra

Music: Hiphop Tamizha Adhi

Cinematography: Richard M Nathan

Editor: Pradeep E. Ragav

கதைக்களம்

சிறுவயதில் இருந்தே ‘ஜெயம்’ ரவியும், ‘யோகி’ பாபுவும் நண்பர்கள். இவர்கள் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து வரும் நிலையில் ‘ஜெயம்’ ரவிக்கு தன்னுடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டே மீது காதல் உருவாகிறது. இந்நிலையில் 1999-ஆம் ஆண்டின் இறுதிநாளான டிசம்பர் 31-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவி தன் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் கொடுத்த பரம்பரை உலோக சிலையை சம்யுக்தா ஹெக்டேவுக்கு பரிசளித்து தன்னுடைய காதலை சொல்ல செல்கிறார். அப்போது பெரிய ரௌடியாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரால் ‘ஜெயம்’ ரவி ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு கோமோ நிலையிலிருந்து திரும்பும் ’ஜெயம்’ ரவிக்கு எல்லாம் புதுசாக தெரிகிறது. அதன் பிறகு ‘ஜெயம்’ ரவியின் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை காமெடி, சீரியஸ், நிறைய சமூக கருத்துக்கள் என்று சொல்லியிருக்கும் படைப்பே இந்த ‘கோமாளி’.

படம் பற்றிய அலசல்

பதினாறு ஆண்டுகளாக கோமோ நிலையில் இருக்கும் ஒரு இளைஞர் அந்த நிலையிலிருந்து சுய நினைவு திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்த அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அதை காமெடியாக, கொஞ்சம் சீரியஸாக, நிறைய சமூக கருத்துக்களை புகுத்தி இயக்கியிருக்கும் விதம் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

‘ஜெயம்’ ரவி சம்யுக்தா ஹெக்டேவுக்கு பரிசளிக்க கொண்டு சென்ற உலோகத்திலான சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது என்பது காஜல் அகர்வால் மூலம் கோமா நிலையிலிருந்து திரும்பிய ‘ஜெயம்’ ரவிக்கு தெரிய வருவது, அந்த சிலை கே.எஸ்.ரவிகுமாரிடம் இருப்பதை அறிந்து அதை மீட்க ‘ஜெயம்’ ரவி மேற்கொள்ளும் முயற்சிகள், அந்த முயற்சிக்கு நடுவே வரும் கே.எஸ்.ரவிகுமாரின் மனைவி சம்பந்தபட்ட காட்சிகள் கொஞ்சம் நாடக்கதன்மையுடன் பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது என்றாலும் இந்த விஷயங்கள் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. கோமா நிலைக்கு சென்ற ‘ஜெயம்’ ரவியை 16 ஆண்டுகளாக சளைக்காமல் பராமரித்து நல்ல ஒரு நண்பராக திகழும் ‘யோகி’ பாபு சம்பந்தப்பட்ட கேரக்டரும் அவரது காமெடி கலந்த நடிப்பும் ‘கோமாளி’க்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

மொபைல் ஃபோன் என்ற விஞ்ஞான வளர்ச்சி, சமூகத்தில், அதிலும் குறிப்பாக குழந்தைகளிடம் எப்படிபட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சில காட்சிகளுடன் விவரித்துள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஒரு பிரச்சனை என்று வரும்போது உருவாகும் மனிதநேயம் மக்களித்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் சென்னையில் ஏற்படும் வெள்ளத்தின் மூலம் சொல்லி புரிய வைத்துள்ளார்! கிளைமேக்ஸில் வரும் வெள்ள காட்சிகள் உட்பட அனைத்து காட்சிகளையும் சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் பணியும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. லாஜிக் விஷயங்களில் நிறையை கோட்டை விட்டிருப்பது, நாடகத்தன்மையுடன் பயணிக்கும் சில காட்சிகளில் படத்தொகுப்பாளர் பிரதீப் E ராகவ் போதுமான கவனம் செலுத்தாது, ஏற்கெனவே கேட்டது மாதிரியான உணர்வை தரும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியின் இசையில் வரும் இரண்டு பாடல்கள் போன்ற சில குறைகள் இருந்தாலும் இந்த ‘கோமாளி’ ரசிகர்களை ஏமாற்றாது!

நடிகர்களின் பங்களிப்பு

பள்ளி மாணவனாக, கோமா நிலையிலிருந்து திரும்பினாலும் பழைய நினைவுகளுடன் இருப்பவராக, வாட்ச்மேனாக, சமகால துடிப்பு மிக்க இளைஞராக…. என்று ‘ஜெயம்’ ரவி பல்வேறு கெட்-அப்களில் தோன்றி மாறுபட்ட வகையில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இந்த கெட்-அப்களில் பள்ளி மாணவனாக வரும் ‘கெட்-அப்’புக்கு ‘ஜெயம்’ ரவி நிறைய சிரத்தை எடுத்திருப்பது அந்த கேரக்டர் மூலம் தெரிய வருகிறது. கதாநாயகிகளாக வரும் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர்களில் பூஜா ஹெக்டே கேரக்டரும் அவரது நடிப்பும் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது. காஜல் அகர்வாலுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். நல்ல நண்பராக படம் முழுக்க வரும் ‘யோகி’ பாபு, பூஜா ஹெக்டேயின் கணவராகவும், டாக்டராகவும் வந்து காமெடியில் கலக்கியிருக்கும் சாரா, ரௌடியாகவும், அமைச்சராகவும் வரும் கே.எஸ்.ரவிகுமார், அவரது மனைவியாக வரும் வினோதினி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.‘ஜெயம்’ ரவி, ‘யோகி’ பாபு

2.காமெடி

3.நிறைய கருத்துக்களை வலியுறுத்தி அமைக்கப்பட்டிருக்கும் திரைகக்தை

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள்

2.கொஞ்சம் நாடகத்தன்மையுடன் பயணிக்கும் இரண்டாம் பாதி

மொத்தத்தில்…

பதினாறு ஆண்டுகளாக கோமோ நிலையில் இருந்த ஒரு இளைஞர் சுய நினைவு திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்ற மைய கருத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதையில் கொஞ்சம் சீரியஸ் விஷயங்களை புகுத்தி, லாஜிக் விஷயங்களிலும் மேலும் கவனம் செலுத்தி இயக்கி இருந்தால் ‘கோமாளி’யை எல்லோரும் கொண்டாடி இருப்பார்கள்!

ஒருவரி பஞ்ச் : நிறைய நல்ல விஷயங்களை ‘கோமாளி’த்தனாக சொல்லியிருக்கும் படைப்பு!

ரேட்டிங் : 5/10
#JayamRavi #KajalAggarwal #SamyukthaHegde #VelsFilmsInternational #PradeepRanganathan #HiphopTamizhaAdhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'நிமிர்ந்து நில்'


;