நேர்கொண்ட பார்வை – விமர்சனம்

சமூகத்துக்கு நல்ல கருத்தை கூறும் படைப்பு!

விமர்சனம் 6-Aug-2019 4:17 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : H. Vinoth
Production : Zee Studios & Bayview Projects LLP
Cast : Ajith Kumar, Shraddha Srinath, Abirami Venkatachalam, Andrea Tariang
Music : Yuvan Shankar Raja
Cinematography: Nirav Shah
Editor : Gokul Chandran

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படம் ‘பிங்க்’ படத்தின் வெற்றியையும் பெயரையும் தக்க வைத்துக் கொள்ளுமா?

கதைக்களம்!

ஒரு பார்ட்டிக்கு சென்ற நேரம், முன்று பெரிய இடத்து இளைஞர்களால் (அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ்) பாதிக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு இழுக்கப்படும் மூன்று அப்பாவி இளம் பெண்களை (ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்டிரியா தாரியங்) வழக்கறிஞரான பரத்சுப்ரமணியம் (அஜித்குமார்) எப்படி அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்கிறார் என்பதே ‘நேர்கொண்ட பார்வை’யின் ஒரு வரிக்கதை!

படம் பற்றிய அலசல்

பொதுவாக வேறு ஒரு மொழியில் வெளியான படத்தை ரீ-மேக் செய்து இயக்கும்போது நமது நேட்டிவிட்டிக்கு தகுந்தபடி கதையை கொஞ்சம் மற்றி அமைப்பதும், சில காட்சிகளை இணைப்பதும் வழக்கம்! ஆனால் இந்த படத்தின் கதை பொதுவான விஷயம் என்பதால் கதையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் மாஸ் ஹீரோவான அஜித் நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்களுக்காக அஜித் மனைவியாக வரும் வித்யா பாலன் சம்பந்தப்பட்ட ஒரு பிளாஷ் பேக் காட்சி, அதில் வரும் ஒரு மெலடி பாடல் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் என்று சில காட்சிகளை இணைத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் எச்.வினோத். ஆனால் அந்த காட்சிகளும் கதையை எந்த விதத்திலும் பாதிக்காமல் கதைக்கு பலம் சேர்த்து ரசிக்க வைக்கவே செய்கின்றன!

படத்தின் முதல் இருபத்து நிமிட காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தந்தாலும், அஜித் எண்ட்ரிக்கு பிறகு படம் சூடு பிடிக்கிறது. தன்னை தாக்க வந்த அடியாட்களை ஒற்ற ஆளாய் நின்று அஜித் எதிர்கொள்ளும் சண்டை காட்சியிலிருந்து ஆரம்பமாகிறது அஜித்தின் அதகளம்! நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக எதிர்தரப்பு வழக்கறிஞரான ரங்கராஜ் பாண்டே குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போக, அந்த குற்றச்சாட்டுக்களை அஜித் தன் வாதத்தால் முறியடிக்கும் காட்சிகளில் கைத்தட்டல்கள் அள்ளுகிறார்! அமைதியான ஒரு வழக்கறிஞராக வரும் அஜித் அமைதியாக செய்யும் சில விஷயங்கள், அவர் பேசும் ஷார்ப்பான வசனங்கள் என்று படம் முழுக்க விறுவிறுப்பாகவே பயணித்து ரசிக்க வைக்கிறது. கிளைமேக்ஸில் அஜித் ‘NO’ என்ற வார்த்தையை வைத்து நியாயத்துக்காக நீதிபதியிடம் வாதாடும் அந்த ஒரு காட்சி போதும் ‘சம்மதம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது’ என்பதை இந்த சமூகத்திற்கு விளக்க!

படத்தின் இடைவேளை வரையிலான காட்சிகளுக்கு யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை பர பர ராகம். ஆனால் இடை வேளைக்கு பிறகான சில நீதிமன்ற காட்சிகளில் யுவன் வழங்கியுள்ள பின்னணி இசை அந்த காட்சிகளோடு ஒட்டவில்லை! இந்த குறைகளை தவிர்த்து யுவன் சங்கர்ராஜாவின் இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, கோகுல் சந்திரனின் படத்தொகுப்பு ஆகிய டெக்னிக்கல் விஷயங்கள் ‘நேர்கொண்ட பார்வை’க்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

அஜித்தின் சினிமா கேரியரில் இந்த ‘நேர்கொண்ட பார்வை’ ஒரு மைல்கல்லாக அமையும் விதமாக அமைந்துள்ளது அவரது தோற்றமும், நடிப்பும், பங்களிப்பும்! மாஸ் ஹீரோவாக இருப்பவரும் இதுபோன்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக அமைந்துள்ளது இப்படத்தில் அஜித் ஏற்று நடித்திருக்கும் வழக்கறிஞர் பரத்சுப்ரமணியம் கேரக்டர். அஜித் தவிர்த்து படத்தில் நடித்திருக்கிற வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசல்ம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ், ஜெயப்பிரகாஷ், நீதிபதியாக வருபவர், போலீஸ் காரர்களாக வருபவர்கள் என்று அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் அஜித்துக்கு அடுத்தபடியாக நடிப்பில் நம்மை வியக்க வைப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான்.

பலம்

1.இயக்கம், வசனம்

2.அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தரும் முதல் இருபது நிமிட காட்சிகள்!

2. இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் பின்னணி இசை

மொத்தத்தில்…

இயக்குனர் எச்.வினோத்தும், அஜித்தும் முதன் முதலாக இணைந்து உருவாக்கியுள்ள இந்த படம் அஜித் ரசிகர்களை மட்டும் அல்லாமல் அனைத்து ரக ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக அமைந்துள்ளதோடு, சமூகத்திற்கு குறிப்பாக இளம் பெண்கள், ஆண்களுக்கு நல்ல கருத்தைக் கூறும் படமாகவும் அமைந்துள்ளது. அதனால் இப்படம் ‘பிங்க்’ படத்தை போன்று வெற்றிப் படமாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : சமூகத்துக்கு நல்ல கருத்தை கூறும் படைப்பு!

ரேட்டிங் : 6/10

#NerkondaPaarvai #Pink #AjithKumar #BoneyKapoorProductions #ShraddhaSrinath #AbhiramiVenkatachalam #HVinoth #YuvanShankarRaja #NerkondaPaarvaiReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கும்கி வீரன் (Tom Yum Goong 2)


;