தொரட்டி – விமர்சனம்

தொரட்டி – விமர்சனம்

விமர்சனம் 2-Aug-2019 1:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: P. Marimuthu
Production: Shaman Pictures
Cast: Shaman Mithru, Sathyakala, Sunder Raj, Seelan, Muthuraman, Azhagu, Janaki
Music: Vedh Sankar, Jithan Sankar
Cinematography: Kumar Sreedhar
Editor: Raja Mohammed

அறிமுக இயக்குனர் மாரிமுத்து இயக்கத்தில் அறிமுகங்கள் ஷமன் மித்ரு, சத்யகலா, சந்தர் ராஜ், சீலன், முத்துராமன் மற்றும் அழகு, ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தொரட்டி’. ரிலீசாவதற்கு முன்னதாகவே பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இரண்டு விருதுகளை தட்டி வந்துள்ள ‘தொரட்டி’ ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படமாக உருவாகியுள்ளது.

கதாநாயகனாக வரும் ஷமன் மித்ருவின் குடும்பம் ஆட்டுக்கூட்டத்துடன் ஊர் ஊராகச் சென்று கிடை போட்டு பிழைப்பு நடத்தி வரும் குடும்பம்! இப்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம்த்துக்கு சென்று கிடை போட்டு (ஆட்டு மந்தை) பிழைப்பு நடத்தி வரும் நிலையீல் அந்த ஊரில் ஆட்டை மேய்க்கும் தொழில் செய்து வரும் கதாநாயகி சத்யகலாவுக்கும் ஷமன் மித்ருவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இந்நிலையில் அந்த ஊரில் திருடுவதையே தொழிலாக கொண்ட சுந்தர் ராஜ், சீலன், முத்துராமன் ஆகியோருடன் ஷமன் மித்ருவுக்கு நட்பு ஏற்படுகிறது. அத்துடன் ஷமன் மித்ரு குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார். இதனால் பல பிரச்சனைகள் உருவாக, ஷமன் மித்ருவை திருத்த தனது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சத்யகலா அவரை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஷமன் மித்ரு, நண்பர்களுடனான நட்பையும், குடியையும் தொடர, அந்த நண்பர்களால் ஷமன் மித்ரு, சத்யகலாவுக்கு பெரும் பிர்ச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளிலிருந்து ஷமன் மித்ருவாலும், சத்யகலாவாலும் விடுபட முடிந்ததா? என்பதே ‘தொரட்டி’ படத்தின் கதைக்களம்!

1980 காலகட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் கிடை போட்டு ஆடு மேய்த்து பிழைப்பு நடத்திய சிலரின் வாழ்க்கையில் நடந்த சில நிஜ சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆடு மேய்க்கும் அந்த மக்களின் வாழ்க்கையில் உள்ள வட்டார மொழி, நட்பு, காதல், மோதல், நயவஞ்சகம் ஆகியவற்றை கிராமத்துப் பின்னணியில் அருமையாக பதிவு செய்துள்ளார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் மாரிமுத்து! ‘கூடா நட்பு கேடு விளைவிக்கும்’ என்பதை அழகான திரைக்கதை மூலம் சொல்ல வந்த இயக்குனர் மாரிமுத்து அதற்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை, கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விதம், அவர்களை சிறப்பாக நடிக்க வைத்த விதம், அந்த கேரக்டர்களுக்காக எழுதப்பட்ட வசனங்கள் என்று ஒரு யதார்த்த வாழ்வியலை ‘தொரட்டி’ மூலம் படம் பிடித்து காட்டியுள்ளார் மாரிமுத்து!

‘‘ஆம்பள சுகத்துக்காக உன்னை கல்யாணம் செய்யல. உங்கப்பா வந்து அழுது புரண்டாரேனுதான்… என்னைக்கு உன் உடம்புல ஆட்டு வாசனை வருதோ அன்னைக்குத்தான் என் முதுகுல மண்ணு ஒட்டும், உன் முதுகை என் முந்தானையால் மூடும்’’ என்று கதாநாயகி சத்யகலா பேசும் வசனம் உட்பட படத்தின் அனைத்து வசனங்களும் கதைக்கு பெரிதும் வலு சேர்க்கும்விதமாக எழுதப்பட்டுள்ளது. ‘கூடா நட்பால்’ உருவாகும் பிரச்சனைகள், அதன் முடிவு என்று வரும் கிளைமேக்ஸ் படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் விதமாக படமாக்கப்பட்டிருப்படோடு, கதை நடைபெறும் காலகட்டத்தை நம் கண்முன் அழகாக கொண்டு வந்து நிறுத்தியிருப்பதில் கலை இயக்குனர் ஜெயசீலனின் பங்களிப்பு, கிராமத்து இயற்கை எழிலான இடங்களையும், மண் சார்ந்த அந்த கிராமத்தில் வாழும் மக்களையும் அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதரின் பணி, வேத் சங்கரின் இசையில் அமைந்துள்ள கருத்து நிறைந்த பாடல்கள், ஜித்தன் ரோஷனின் பின்னணி இசை ஆகியவையும் ‘தொரட்டி’யின் கதை பயணத்திற்கு மிகவும் பலம் சேர்த்துள்ள விஷயங்களாகும். இவ்வளவு நிறைகள் உள்ள படத்தில் சில குறைகள் இல்லாமலும் இல்லை! படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருவதை, படத்தொகுப்பாளர் ராஜா முகமது தவிர்த்திருந்தால் முதல் பாதியும் இரண்டாம் பாதியை போன்று விறுவிறுப்பாக பயணித்திருக்கும்!

படத்தின கதாநாயகனாக வரும் ஷமன் மித்ரு, கதாநாயகியாக வரும் சத்யகலா, திருடர்களாக வரும் சுந்தர் ராஜ், சீலன், முத்துராமன், ஷமன் மித்ருவின் அப்பாவாக வரும் அழகு, அம்மாவாக வரும் ஜானகி, சத்யகலாவின் அப்பாவாக வரும் குமணன், துபாய் காரராக வரும் விஜய் பாலாஜி என்று அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் மாரிமுத்து. இவர்களில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பவர் கதாநாயகியாக நடித்திருக்கும் சத்யகலாதான்! முதல் படத்திலேயே அப்படியொரு பெர்ஃபார்மன்ஸை வழங்கி கைத்தட்டல்கள் அள்ளுகிறார் சத்யகலா!

மண் சார்ந்த கிராமத்து வெள்ளந்தியான மக்களின் வாழ்க்கையை மண் வாசனையுடன் சொல்லியிருக்கும் இந்த படத்தை பார்ப்பவர்களில் கிராமத்தில் பிறந்தவர்களுக்கு இப்படம் அந்த காலகட்டத்தை ஞாபகப்படுத்தும் என்பது நிச்சயம்! ‘கூடா நட்பு கேடாய் விளையும்’ என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ள இப்படம் கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமையுமா என்பதை சொல்ல முடியவில்லை! ஆனால் இப்படத்திற்கு மேலும் பல விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

(இது போன்று கமர்ஷியல் விஷயங்கள் தவிர்த்து எடுக்கப்படும் தரமான படைப்புகளுகு ரேட்டிங் தரப்படுவதை தவிர்த்து வருகிறோம். அதன் அடிப்படியில் இந்த படத்திற்கு ரேட்டிங் வழங்கப்படவில்லை).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;