கழுகு 2 – விமர்சனம்

கவனத்தை ஈர்க்கவில்லை!

விமர்சனம் 1-Aug-2019 12:37 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Sathyasiva
Production: Madhukkoor films
Cast: Krishna, Bindu Madhavi, Kaali Venkat, Hareesh Peradi & MS Bhaskar
Music: Yuvan Shankar Raja
Cinematography: Raja Battacharjee
Editor: Gopi Krishna

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்க, 2012-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கழுகு’. அதே கூட்டணி இணைந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள ‘கழுகு-2’ முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

கிருஷ்ணா, காளிவெங்கட் இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு பிழைப்பு நடத்துபவர்கள்! இந்நிலையில் இருவரும் போலீஸ்காரர்களிடம் சிக்கிய நிலையில் போலீஸ்காரர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு தப்பித்து விடுகிறார்கள். அப்போது காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கும் அதிகாரவர்க்கத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை காட்டில் இருக்கும் செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரர்களாக எம்.எஸ்.பாஸ்கரால் பணி அமர்த்தப்படுகிறாரகள் கிருஷ்ணாவும், காளிவெங்கட்டும்! இந்நிலையில் மரம் வெட்ட வரும் தொழிலாளிகளில் ஒருவரும், எம.எஸ்.பாஸ்கரின் மகளுமான பிந்து மாதவியின் மனதில் இடம் பிடிக்கிறார் கிருஷ்ணா! காதலித்தவளை கரம் பிடித்து சொகுசான வாழ்க்கை நடத்த ஆசைப்படும் கிருஷ்ணா, தன் நண்பர் காளிவெங்கட்டுடன் உள்ளூர் எம்.எல்.ஏ.வான ஹரீஷ் பேரடி வீட்டில் திருடப் போகிறார்கள்! அந்த முயற்சியில் கிருஷ்ணாவும், காளிவெங்கட்டும் மாட்டிக்கொள்கிறார்கள்! அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘கழுகு-2’வின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

காட்டுக்குள் மிரட்டும் செந்நாய்கள், அவைகளிடம் மாட்டிக் கொண்ட பிந்து மாதவியை காப்பாற்றும் கிருஷ்ணா என்று விறுவிறுப்பான காட்சிகளுடன் துவங்குகிறது படம்! அதன் பிறகு கிருஷ்ணா, பிந்துமாதவி இருவருக்கும் இடையிலான காதல், பிந்துமாதவியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் முயற்சிகள் என்று பயணிக்கும் முதல் பாதி திரைக்கதை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக பயணிக்கிறது. ஆனால் அதற்கு பிறகு காட்டில் இருக்கும் கோடிகள் மதிப்பிலான நிதி, அதை எடுத்து செல்லும் உள்ளூர் எம்.எல்.ஏ., அந்த நிதியை ஆட்டைய போட நினைக்கும் கிருஷ்ணா, காளிவெங்கட், அதில் இருவரும் சிக்கிக் கொள்வது என்று கதை வேறு ஒரு டிராக்கில் பயணிக்க, கதையை எப்படி முடிக்க வேண்டும் என்பதில் தடுமாறியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சத்யசிவா!

கதையில் நடக்கும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் பயணிப்பதால் படம் பார்ப்பவர்களால் கதையுடன் ஒன்றி ரசிக்க முடியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. அதைப் போல அடர்ந்த காட்டுப் பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கும் ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு பணியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஆனால் லாஜிக் விஷயங்கள், வலுவில்லாத திரைக்கதை அமைப்பு, படத்தொகுப்பு போன்ற விஷயங்களில் போதுமான கவனத்தை செலுத்தாததால் ‘கழுகு-2’ முதல் பாகம் தந்தது மாதிரியான சுவாரஸ்யத்தை தரவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

கிருஷ்ணா தனது வழக்கமான நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்தை சிறப்பித்துள்ளார். அதைப் போல பிந்துமாதவியும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் கிருஷ்ணாவை பார்த்ததும் பிந்து மாதவிக்கு அவர் மீது காதல் வருவது, கிருஷ்ணாவின் பின்னணி தெரிந்தும், அவரைதான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிப்பது போன்ற விஷயங்கள் பிந்து மாதவியின் கேரட்கருக்கு வலு சேர்க்கவில்லை! கிருஷ்ணாவின் கூட்டாளியாக வரும் காளி வெங்கட் சம்பந்தப்பட்ட சில காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதே நேரம் போலீஸ்காரர்களிடமிருந்து துப்பாக்கிகளுடன் தப்பித்து வரும் கிருஷ்ணாவும் காளிவெங்கட்டும் போலீஸுக்கு பயந்து பதுங்குவது, நடுங்குவது போன்ற சில காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

கிளைமேக்ஸில் திருப்பதை ஏற்படுத்துபவராகவும், பிந்து மாதவியின் அப்பாவாகவும் வரும் எம்.எஸ்.பாஸ்கர், எம்.எல்.ஏ.வாக வரும் ஹரீஷ் பேரடி, எஸ்.பாஸ்கரின்ன் மனைவியாக வரும் ரமா, ஒரே ஒரு பாடலுக்காக வரும் யாஷிகா ஆனந்த் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.கிருஷ்ணா, பிந்துமாதவி

2.ஒளிப்பதிவு

3.பின்னணி இசை மற்றும் இரண்டு பாடல்கள்

பலவீனம்

1.குழப்பத்தை தரும் திரைக்கதை அமைப்பு

2.படத்தொகுப்பு

3.லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

செந்நாயகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்ற வரும் வேட்டைக்காரர்கள் என்று விறுவிறுப்பாக துவங்கும் கதை, பிறகு வழக்கமான காதல், அந்த காதலுக்கு எதிர்ப்பு, உள்ளூரிலிருக்கும் அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் என்று பயணிக்கும் இந்த படமும் பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே அமைந்துள்ளது!

ஒருவரி பஞ்ச் : கவனத்தை ஈர்க்கவில்லை!

ரேட்டிங் : 3.5/10

#Krishna #BinduMadhavi #KaaliVenkat #Kazhugu2 #Sathyasiva #MadhukkoorFilms #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;