ஆறடி – விமர்சனம்

குடும்பத்தை காப்பாற்ற, வெட்டியான் தொழிலாளியாகும்  பெண்ணின் கதை!

விமர்சனம் 29-Jul-2019 4:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction :Santhosh Kumar
Production: Sree Siva Kudumbam Films
Cast: Vijayaraj, Deepika Rangaraju, Jeevitha, Chaplin Balu
Music: Abi Jo Jo
Cinematography : R.K.Vijayan
Editor:Santhosh Kumar

அறிமுகம் சக்திவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அறிமுகம் சந்தோஷ் குமார் இயக்கி படத்தொகுப்பு செய்துள்ள படம் ‘ஆறடி’. புதுமுகங்கள் விஜயராஜ், தீபிகா ரங்கராஜு, ஜீவிதா மற்றும் சாப்ளின் பாலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஆறடி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சுடுகாட்டு வெட்டியான் சாப்ளின் பாலுவிற்கு தீபிகா ரங்கராஜ், ஜீவிதா என்று இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். விருப்பம் இல்லாவிட்டாலும் அப்பாவுடன் வெட்டியான் தொழிலை செய்து வரும் மகன் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார். அதே நேரம் அந்த விபத்தில் சாப்ளின் பாலுவிற்கும் அடிப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார். இந்நிலையில் வறுமையில் வாடி வாழ்ந்து வரும் அந்த குடுபத்தை காப்பாற்ற சாப்ளின் பாலுவின் மகள்கள் தீபிகா ரங்கராஜ், ஜீவிதா வெட்டியான் தொழிலை செய்ய முன் வருகிறார்கள்! அப்போது அவர்கள் சந்தித்த பிரச்சனைகள், சவால்கள், அவமானங்கள் என்னென்ன என்பதே ‘ஆறடி’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

ஈரோடு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட கதையாம் இது! படம் பார்ப்பவர்களை நெகிழ் வைக்கும் விதமான திரைக்கதை அமைப்பு! ஆனால் அதை படமாக்கிய விதத்தில் சிறப்பு இல்லை! மேள தாளத்துடன் வரும் பிணம், அந்த பிணத்தை வரவேற்று குழி தோண்டி, அதற்கு சடங்கு செய்து புதைப்பது, எரிப்பது என்று எல்லா வேலைகளையும் செய்யும் தீபிகா ராஜு, ஜீவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் விதமாக படமாக்கிய இயக்குனர் மற்ற காட்சிகளிலும் அதைப்போல கவனம் செலுத்தியிருக்கலாம். தீபிகா ராஜுவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்ய முன் வரும் பத்திரிகையாளர் விஜய்ராஜ், இவர்கள் திருமணத்திற்கு குறுக்கே வரும் ஜாதி, தொழில், கௌரவம் போன்ற சிக்கல்கள், அதன் முடிவு என்று படத்தில் நிறைய பரபரப்பான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன! ஆனால் அதை காட்சிகளாக்கிய விதத்தில் இயக்குனர் கவனம் பெறவில்லை. கதைக்கு தேவையான பங்களிப்பை ஒளிப்பதிவாளர் ஆர்.கே.விஜயன் செய்துள்ளனர். ஆனால் அபி ஜோ ஜோவின் இசை கவனம் பெறவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் கதையை ஒற்ற ஆளாக தாங்கியிருப்பவர் தீபிகா ரங்கராஜுதான். அபாரமான குரல், சிறந்த நடிப்பு என்று வசீகரீக்கிறார் தீபிகா! அழகாக இருந்தால், பிணத்தை புதைக்க வருபவர்களின் கண்களும், பார்வையும் கவனமும் தங்கள் மீது பட்டுவிடக்கூடும் என்பதற்காக அழுக்கு படிந்த உடைகளை அணிந்தும், தோற்றத்தை உருவாக்கியும் வெட்டியான் தொழிலை செய்யும், தீபிகா மற்றும் அவரது தங்கை ஜீவிதா ஆகியோரின் கேரக்டர்கள் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு அதில் இருவரும் சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளனர். இவர்களது தந்தையாக வரும் சாப்ளின் பாலு, தீபிகாவை காதலிப்பவராக வரும் விஜய் ராஜ், மற்றும் படத்தில் நடித்திருக்கும் சுப்புராஜ், டாம் பிராங்க், சண்முகம், சுமதி, மக்கான், ஜெயமணி, பெஞ்சமின் என்று எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.கதை

2.தீபிகா, ஜீவிதா, சப்ளின் பாலு ஆகியோரின் பங்களிப்பு

பலவீனம்

1.இயக்கம்

2.இசை, படத்தொகுப்பு

மொத்தத்தில்…

வழக்கமான சினிமா கமர்ஷியல் விஷயங்களை தவிர்த்து, நிஜ வாழ்வியல் சம்பவங்களுடன் படமாக்கப்பட்டுள்ள இப்படம் யதார்த்த கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை விரும்புபவர்களை கவர வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : குடும்பத்தை காப்பாற்ற, வெட்டியான் தொழிலாளியாகும் பெண்ணின் கதை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;