டியர் காம்ரேட் - விமர்சனம்

டியர் காம்ரேட் - விமர்சனம்

விமர்சனம் 26-Jul-2019 8:40 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Bharat Kamma
Production: Mythri Movie Makers
Cast : Vijay Devarakonda, Rashmika Mandanna, Shruti Ramachandran
Music : Justin Prabhakaran
Cinematography: Sujith Sarang
Editor : Sreejith Sarang


‘நோட்டா’ படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருக்கும் இன்னொரு தமிழ்ப்படம் ‘டியர் காம்ரேட்’. ஆனால், இது நேரடித் தமிழ்ப்படம் அல்ல.... தெலுங்குப் படத்தின் தமிழ் வெர்ஷன். ‘கீதாகோவிந்தம்’ வெற்றி ஜோடியான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இப்படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மீண்டும் இக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா?

‘நீ விரும்புவதை போராடியாவது பெற்றுவிடு’ என்பதே ‘டியர் காம்ரேட்’ படத்தின் ஒன்லைன். ஆனால், இந்த ஒன்லைனிற்குப் பின்னணியில் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் மன உளைச்சலையும் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் பரத் கம்மா.

தனது காம்ரேட் தாத்தாவைப்போல், விஜய் தேவரகொண்டாவும் கல்லூரி நாட்களில் ‘லிட்டில் காம்ரேட்’டாக மாறி மாணவர் போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவனாக வலம் வருகிறார். எப்போதும் அடிதடி, போராட்டம் என சுற்றிக் கொண்டிருக்கும் தேவரகொண்டாவின் வாழ்க்கையில் கிரிக்கெட் பிளேயரான ராஷ்மிகா உள்ளே நுழைகிறார். இருவருக்கிடையே காதல் மலர்ந்தாலும், தேவரகொண்டாவின் ‘காம்ரேட்’ ஆக்ரோஷமே அவர்கள் காதலைப் பிரிக்கிறது. காதல் தோல்வி தரும் வலியை மறக்க 3 ஆண்டுகள் தனிமைப் பயணம் மேற்கொண்டு அமைதி பெறுகிறார் விஜய் தேவரகொண்டா. ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் தன் சொந்த ஊருக்கே திரும்பும் விஜய் தேவரகொண்டாவிற்கு, ராஷ்மிகா இருக்கும் நிலையைக் கண்டு நிலைகுலைந்து போகிறார். ராஷ்மிகாவிற்கு என்னாவானது? மீண்டும் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? தேவரகொண்டாவின் ‘காம்ரேட்’ மனநிலை மீண்டும் தலை தூக்கியதா? என்பதே ‘டியர் காம்ரேட்’.

ஏற்கெனவே சில படங்களில் சொல்லப்பட்ட ‘கருத்தை’தான் இந்த ‘டியர் காம்ரேடு’ம் முன்வைத்திருக்கிறது என்றாலும்கூட, அவசியம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய கருத்தென்பதால் வரவேற்க வேண்டிய படமே ‘டியர் காம்ரேட்’. ஆனால், அந்த கருத்தைச் சொல்வதற்கு ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும்படியான ஒரு நீண்ட திரைக்கதையை உருவாக்கியிருப்பதுதான் ‘டியர் காம்ரேட்’ படத்தின் ஆகப்பெரிய பிரச்சனை. இதுதான் படத்தின் மையக்கதை என்பதையே இரண்டாம்பாதியில்தான் ஓபன் செய்கிறார்கள். அதுவரை இப்படம் எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாமல் ‘தேமே’வென படம் பார்க்க வைத்திருக்கிறார்கள். டிரைலரையும், வீடியோ சாங்கையும் பார்த்துவிட்டு எதையோ எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு, எதையோ காட்டி ‘ஏமாற்றிவிட்டார்களே’ என்ற எண்ணமே எழுந்தது இப்படத்தைப் பார்த்தபோது.
‘புலராத’ பாடல் இப்படத்திற்கு பெரிய ஆறுதலாக இருந்தாலும், மற்ற பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. ரசிகர்களை சோர்வடையச் செய்யும் காட்சிகளை தயவு தாட்சண்யம் காட்டாமல் ‘எடிட்’ செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘ஸ்டீரியோ டைப்’ கேரக்டர்தான் என்றாலும் விஜய் தேவரகொண்டா தன்னால் முடிந்தளவுக்கு ‘பாபி’யாக வாழ்ந்திருக்கிறார். கிரிக்கெட் பிளேயர் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும்கூட, மனஅழுத்தத்தைச் சந்திக்கும் ஒரு பெண்ணாக ராஷ்மிகா ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார். இப்படத்தில் வரும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் அந்தந்த கேரக்டரை உணர்ந்து பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

‘இதிலிருந்து மீண்டு வரவேண்டும்’ என்று பெண்களுக்கு தைரியமூட்டும் ஒரு படமாக அமைந்தவிதத்தில் மட்டும் ‘டியர் காம்ரேட்’ ரசிக்க வைக்கிறது. மற்றபடி, பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;