கொளஞ்சி – விமர்சனம்

தந்தை மகனுக்கு இடையிலான பாசப்போராட்டம்!

விமர்சனம் 26-Jul-2019 6:44 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Dhanaram Saravanan
Production: White Shadows Productions
Cast:Samuthirakani, Sanghavi Rajaji Naina Sarwar
Music: Natarajan Sankaran
Cinematography: Vijayan Munusamy
Editor: Athiyappan Siva


‘மூடர் கூடம்' இயக்குனர் நவீன் உதவியாளர் தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, கிருபாகரன், ராஜாஜி, நீனா ஷர்வார், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கொளஞ்சி’ எப்படி?

கதைக்களம்

பெரியார் கொள்கைகள் மீது ஈர்ப்புக்கொண்ட சமுத்திரக்கனி, சங்கவி தம்பதியரின் மூத்த மகன் கொளஞ்சி (கிருபாகரன்). ஆறாம் வகுப்பு படித்து வரும் கொளஞ்சி, வயதுக்கு மீறிய குறும்புத்தனங்களும், கோபமும் உடையவர்! ஊரில் மதிக்கப்படுபவராக இருக்கும் சமுத்திரக்கனி பிள்ளைகள் ஒழுக்கமாக வளரவேண்டும் என்றார்ல் அவர்களை அடிக்கக் கூட செய்யலாம் என்று பிள்ளைகளை வளர்த்து வருபவர்! அப்படியிருக்க கொளஞ்சியால் சமுத்திரக்கனிக்கு அடிக்கடி பல பிரச்சனைகள் வருகிறது. ஒரு கட்டத்தில் கொளஞ்சி காரணமாக மனைவி சங்கவியும் சமுத்திரக்கனியை பிரிந்து செல்லும் சூழ்நிலை உருவாகிறது! அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘கொளஞ்சி’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள மிக எளிமையான கதை! அதை கிராமத்து பின்னணியில் காதல், காமெடி, எமோஷன், ஜாதி பிரச்சனை ஆகியவற்றை கலந்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் தனராம் சரவணன்! தப்பு செய்கிற பிள்ளைகள் அடித்து வளர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கும் அப்பாவுக்கும், எதற்கு எடுத்தாலும் திட்டிக்கொண்டே இருக்கும் அப்பா என்று வருத்தப்படும் ஒரு மகனுக்கும் இடையிலான காட்சிகளை நேர்த்தியாக ரசிக்கும்படியாக படமாக்கிய இயக்குனர் தனராம் சரவணன் படத்தில் காதல் ஜோடியாக வரும் ராஜாஜி, நீயனா சர்வர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்யவில்லை. அதைப்போல எப்போதும் கருப்பு சட்டையுடன் பெரியார் தொண்டனை போல வரும் சமுத்திரக்கனி கேரக்டர், ஹிந்து மத கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவராக வரும் ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி கேரக்டர் ஆகியவற்றின் மூலம் ஜாதீய பிரச்சனைகளை இழுத்திருப்பதும் தேவைதானா என்ற கேள்விகள் எழும் விதமாக அமைந்துள்ளது. இது போன்ற திணிக்கப்பட்டது மாதிரியான சில காட்சிகளை தவிர்த்து பார்த்தால் 'கொளஞ்சி' நல்ல கருத்துடைய வரவேற்கக் கூடிய படமே! கொளஞ்சிக்கு நடராஜன் சங்கரனின் இசை, விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்களும் கை கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

இரண்டு பையன்களின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு இப்படத்திலும் அறிவுரைகள் கூறும் கதாபாத்திரம். பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு காலத்தில் விஜய்யுடன் எல்லாம் ஜோடியாக நடித்த சங்கவி சமுத்திரகனியின் மனைவியாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சிறப்பாக நடித்துள்ளார். இளம் காதல் ஜோடியாக வரும் ராஜாஜி, நீனா ஷர்வார், இவர்களின் காதலுக்கு உதவி செய்பவராகவும், சமுத்திரக்கனியின் மகன் கொளஞ்சியாகவும் வரும் கிருபாகரன், இவரது நணபராக அடிவாங்கி கேரக்டரில் நடித்திருக்கும் சிறுவன், மற்றும் 'பிச்சைக்காரன்' படப் புகழ் மூர்த்தி உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.சொல்லப்பட்டுள்ள கருத்து
2. சமுத்திரக்கனி, கொளஞ்சிக்கு இடையிலான பாசப் போராட்ட காட்சிகள்

பலவீனம்
1. அழுத்தம் இல்லாத காதல் காட்சிகள்
2.திணிக்கப்பட்டது மாதிரி அமைந்துள்ள மேல் ஜாதி, கீழ் ஜாதி பிரச்சனைகள்

மொத்தத்தில்...

குழந்தைகளை அடித்து வளர்ப்பது தவறு என்பதை சொல்ல வந்துள்ள இந்த படத்தில் பல குறைகள் இருந்தாலும் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு நல்ல கருத்தைக் கூறும் படமாக அமைந்திருப்பதால் 'கொளஞ்சி'யை வரவேற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : தந்தை மகனுக்கு இடையிலான பாசப்போராட்டம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;