சென்னை பழனி மார்ஸ் – விமர்சனம்

சுவாரஸ்யம் இல்லாத பயணம்!

விமர்சனம் 26-Jul-2019 11:57 AM IST Top 10 கருத்துக்கள்

Direction, Cinematography, Editing : Biju
Production: Vijayasethupathy Productions & Orange Mittaai Productions
Cast: Praveen Raja, Rajesh Giri Prasad, Vasanth Marimuthu, Imdhiyaas Mohammed
Music: Niranjan Babuவிஜய்சேதுபதி நடிப்பில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சென்னை பழனி மார்ஸ்’. ரிலீசுக்கு முன்பாகவே இரண்டு சர்வதேச திரைப்பட விழா விருதுகளை அள்ளி வந்துள்ளதாக கூறப்படும் ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

போதைக்கு அடிமையான கதாநாயகன் பிரவீன் ராஜாவுக்கும், இவரது தந்தைக்கும் செவ்வாய் (MARS) கிரகத்துக்கு போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவும், கனவாகவும் இருக்கிறது! அதற்காக 20 வருடங்களாக முயற்சி செய்தும் அந்த ஆசை நிறைவேறாமலேயே பிரவீன் ராஜாவின் தந்தை இறந்து போகிறார். இந்நிலையில் அப்பாவின் ஆசையையும் கனவையும் நிறைவேற்ற பிரவீன் ராஜா செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்ய முயற்சிக்கிறார். இதற்காக பழனிக்கு பயணிக்கும் பிரவீன் ராஜாவுடன் போதை மறுவாழ்வு மையத்தில் இருக்கும்போது தனக்கு நண்பரான ராஜேஷ் கிரி பிரசாத்தும் இணைந்து கொள்கிறார். இவர்கள் இருவரும் பழனிக்கு பயணிக்கையில் இவர்களை பின் தொடர்ந்து போலீஸ்காரர்களும் வருகிறார்கள். இந்த பயணத்தில் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளை, செவ்வாய் கிரகத்துப் போக இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பிளாக் காமெடி ஜானரில் சொல்லியிருக்கும் படமே ‘சென்னை பழனி மார்ஸ்’.

படம் பற்றிய அலசல்

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நோக்கிய பயணமும் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒருவரின் முயற்சிகளை காமெடியாக தர முயற்சித்துள்ளார் இந்த படத்தை இயக்கியிருக்கும் பிஜு விஸ்வநாத்! ஆனால் படத்தில் காமெடி என்ற பெயரில் காட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான காட்சிகளில் ஒரு சில காட்சிகளை மட்டுமே சிரக்க முடிகிறது. மற்றவை எரிச்சலையே தருகிறது. கதாநாயகன் பிரவீன் ராஜா, பழனிக்கு பயணம் செய்கையில் அவரை பின் தொடர்ந்து வரும் போலீஸ்காரர்கள், ஐ.டி.கம்பெனி வேலை பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் ஒரு இளைஞர், கொக்கையின் கடத்தல் கும்பல் என்று பல்வேறு கேர்கடர்கள் இணைந்தாலும், இந்த கேரக்டர்களுக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் பயணிப்பதால் போரடிக்கவே செய்கிறது.

இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் எதை வேண்டுமானலும் படமாக்கலாம், அதை பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருப்பவர்கள், கொஞ்சமாவது கதையிலும் திரைக்கதை அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்! லாஜிக் விஷயங்களே இல்லாமல் பயணிக்கு இந்த திரைக்கதையில் ஒரு சில காமெடி காட்சிகள், நிரஞ்சன் பாபு அமைத்துள்ள பின்னணி இசை, பிஜு விஸ்வநாத்தின் சிறந்த ஒளிப்பதிவு தவிர படத்தில் குறிப்பிடும்படியாக எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லை!

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரவீன் ராஜா, போதைக்கு அடிமையான ஒரு இளைஞரின் மேனரிசங்களை அழகாக பிரதிபலித்து நடித்துள்ளார் என்று சொல்லலாம். இவரது நண்பராக வரும் ராஜேஷ் கிரி பிரசாத்தின் குண்டு தோற்றமும் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. போலீஸ்காரர்களாக வரும் வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது ஆகியோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். ஒரு பெண் கேரக்டர் கூட இல்லாமல் பயணிக்கும் இந்த கதையில் வின் ஹாத்ரி, பாரி இளவழகன், மதன்குமார் தட்சிணமூர்த்தி, ஏ.ரவிக்குமார், ஆல்வின் ராமையா என்று பலர் நடித்திருக்கிறார்கள்.

பலம்

1.ஒரு சில காமெடி காட்சிகள்

2.பின்னணி இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் பலவீனமாகவே அமைந்துள்ளது!

மொத்தத்தில்..

பல பேர் செய்யும் முயற்சி ஒரு நாள் இன்னொருவர் மூலம் நிறைவேறலாம் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை சொல்ல முடியவில்லை!

ஒருவரி பஞ்ச் : சுவாரஸ்யம் இல்லாத பயணம்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;